Monday, May 3, 2010

பாலியல் புகாரில் நைஜீரியா செனட்டர்!

லாகோஸ், மே 3
13 வயது எகிப்து சிறுமியை மணந்து பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார் நைஜீரியா செனட்டர்.
சட்டத்தை மீறிய செனட்டர்
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவை சேர்ந்தவர் அகமது சானி எரிமா (48). நைஜீரியாவில் செனட்டர் ஆக பதவி வகிக்கும் இவர் 13 வயது எகிப்து சிறுமியை திருமணம் செய்து கொண்டார். நைஜீரியாவில் பெண்ணின் திருமண வயது 18.எனவே எரிமா மீது மனித உரிமை கமிஷனில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த சிறுமியை எகிப்தில் இருந்து கடத்தி வந்ததாகவும், அவளக்கு வரதட்சணையாக ரூ.50 லட்சம் கொடுத்ததாகவும்
,இவரது குழந்தையை கவனித்துக் கொள்ள 15 வயது சிறுமியை பணியில் அமர்த்தியிருந்தார் எனவும் புகார் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த புகாரில் சிறுமயை திருமணம் செய்து கொண்ட எரிமா 2 வருடங்கள் கழித்து அவளை விவாகரத்து செய்துவிட்டார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

கடலில் எண்ணை படலம் அவசர நிலை அறிவிப்பு

வாஷிங்டன், மே 3
அமெரிக்காவின் கடல் பகுதியில் எண்ணெய் படலங்கள் பரவியதால் அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடா பகுதியில் கடந்த மாதம் 20ந் தேதி எண்ணெய் கிணறு ஒன்று எரிந்தது. இதனால் எண்ணை தோண்டும் சூரிக்' கருவி கடலுக்குள் விழுந்து மூழ்கியது. இந்த விபத்தில் 11 பேர் பலியாகினர். இதற் கிடையே எண்ணை கிணற்றில் இருந்து எண்ணை படலங்கள் தொடர்ந்து வெளியேறி கடல் நீரில் கலந்து வருவதால் லூசியானா கடற்கரையில் சுற்றுச் சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அலபாமா, மிஸ்சி சிப்பி மாகாணங்களில் உள்ள கடற்கரை நகரங்களில் எண்ணெய் பரவியுள்ளது. இதனால் அங்கு சுற்று சூழல் பாதிக்கப் பட்டு கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் அப்பகுதி மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் சதுக்கம் மூடப்பட்டது கார் வெடிகுண்டால் பதற்றம்!

நியூயார்க், மே 3
அமெரிக்காவின் புகழ்பெற்ற நகரமான நியூயார்க்கில் டைம்ஸ் சதுக்கம் அருகே காரினுள் மறைக்கபட்டிருந்த குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து டைம்ஸ் சதுக்கம் மூடப்பட்டு, அங்கு தீவிர சோதனை நடத்தப்பட்டது.
டைம்ஸ் சதுக்கம் அருகே நின்றிருந்த ஒருகாரில் தீ விபத்து ஏற்பட்டது. காரினுள் ஏற்பட்ட தீயை அணைக்க வந்த காவல் துறையினர் தீ எதனால் ஏற்பட்டிருக்கும் என்று சந்தேகப்பட்டு காரைப் பரிசோதித்தனர். அப்போது காரின் பின் சீட்டில் வெடிகுண்டு போன்ற மர்மமான பொருள் சிக்கியது.
இதையடுத்து அந்தப் பகுதி முழுவதும் சீல்வைக்கப்பட்டு அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
உடனடியாக அங்கு விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், எப்.பி.ஐ அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அத்துடன் ரோபோட் ஒன்றை வைத்து காரிலிருந்து மீட்கப்பட்ட பொருளை அதிகாரிகள் ஆராய்ந்தனர். இதில் காரினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது வெடிகுண்டு என தெரிய வந்தது.
இந்த பதற்றம் காரணமாக அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
கார் குண்டு மூலம் அங்கு குண்டுவெடிப்பை நிகழ்த்த நடந்த சம்பவம் நியூயார்க்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனித் தமிழீழத்தை வலியுறுத்தி நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தேர்தல்

கொழும்பு, மே 3
இலங்கையில் தனித் தமிழீழத்தை வலியுறுத்தி, நாடுகடந்த தமிழீழ அரசிற்கான தேர்தல் நடைபெற்றது. இது தொடர்பாக 16 நாடுகளில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் மூலம் மேலும் இனப்படுகொலையாளர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.
இலங்கையில் தனித் தமிழீழத்தை வலியுறுத்தி நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலுக்காக பிரிட்டனில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் திரண்டு வந்து தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர். இவ்வாக்கெடுப்பில் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
உலக தமிழர்களுக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க தேர்தலாக கருதப்படும் நாடுகடந்த தமிழீழ அரசிற்கான தேர்தல் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் நடைபெற்றுது.
பிரிட்டனில் நேற்று முன்தினம் காலை ஆரம்பமான இந்த வாக்களிப்பு நிகழ்ச்சியில் தமிழர்கள் தமக்கென்று ஒரு நாடு கடந்த அரசு அமைக்க இடும் முதல் வாக்கு என்பதால் இந்த வரலாற்றுச்சிறப்பு மிக்க தேர்தலில் தாமும் வாக்களித்து வரலாற்றில் இடம்பிடிக்க வேண்டும் என்ற நினைவோடு சென்று அவர்கள் வாக்களிப்பதை காணமுடிந்தது.
நேற்று முன்தினம் பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள வடமேற்கு லண்டன் வாக்களிப்பு நிலையத்தில் நாடுகடந்த தமிழீழத்திற்காக முதலாவது வாக்கு பதிவுசெய்யப்பட்டது. மக்கள் தொடர்ந்து வரிசையில் காத்து நின்று தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.
நாட்டிற்காகவும், மக்களின் விடுதலை பெற்ற சுதந்திர வாழ்வுக்காகவும் தாம் தமது வரலாற்றுக் கடமையினை செய்துள்ளோம் என்ற திருப்தியில் மக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவதை காணமுடிந்தது
.

கனமழையிலும் வாக்கு பதிவு
நேற்று பெய்த கடும் மழையையும் பொருட்படுத்தாமல் வாக்குச்சாவடிகளுக்கு சென்று மக்கள் வாக்களித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
நாடு கடந்த தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு பதினாறு நாடுகளில் நடை பெற்றது.அந்த நாடுகளில் ஆஸ்திரேலியா,கனடா,சுவிட்சர்லாந்து,பிரான்ஸ்
ஆகிய நாடுகள் குறிப்பிடத்தக்க நாடுகளாகும்.இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசு கூறிவந்ததையடுத்து இலங்கையில் தனித் தமிழீழத்தை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலை நடத்தியுள்ளது இலங்கை அரசிற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வாக்கெடுப்பு குறித்து கனடா நாட்டு தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் வெளியிட்டு அறிக்கையில்: இலங்கையில் தமிழர்கள் தங்கள் அரசியல் உரிமைகளை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாத நிலைமை உள்ளது. ஆகவே தமிழீழத்திற்கான அரசியல் ராஜதந்திரத்தை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு உள்ளது. வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்வைத்து உலகளவில் வாக்கெடுப்பு மூலம் தமிழீழ அரசை நிறுவுவதற்கான ஆணை பெறப்பட்டது. இந்த தீர்மானத்தை ஆதரித்து 99% புலம் பெயர்ந்த தமிழர்கள் வாக்களித்தனர். இப்போது நடைபெறும் வாக்கெடுப்பின் மூலம் நாடு கடந்த தமிழீழ அரசு வெற்றிபெறும் போது தமிழீழ மக்கள் தங்களுக்கு இருக்கும் தன்னாட்சி உரிமையையும் பயன்படுத்தி தமிழீழ அரசை மீண்டும் உருவாக்க முடியும். நாங்கள் இல்லாத அரசு ஒன்றை கேட்கவில்லை. காலனித்துவ நாடுகள் இலங்கையில் காலடி எடுத்து வைக்கும் முன்பே கொடியோடும், முடியோடும் நான்கு நூற்றாண்டுகளாக இலங்கையில் தமிழீழ அரசு அமைந்திருந்தது. அந்த தமிழீழ அரசை தான் நாங்கள் மீண்டும் கேட்கிறோம். மேலும் தங்களது வாழ்வாதாரங்களை முழுவதுமாக இழந்து முகாம்களிலும், வெளியிலும் இடம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் மறுவாழ்வுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். போரின் போது போர்க்குற்றங்களை இழைத்த சிங்களபௌத்தப் பேரினவாதிகளை சர்வதேச நீதிமன்றங்களில் நிறுத்தி தண்டனை வாங்கித்தர வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி அறிக்கையில் வெளியிட்டுள்ளனர்.