Monday, July 12, 2010

இங்கிலாந்துக்கு எதிரான போட்டி வங்கதேசத்துக்கு முதல் வெற்றி


லண்டன்,ஜுலை.11
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் நாட்வெஸ்ட் ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் 2வது போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அந்த அணிக்கு எதிராக தனது முதல் வெற்றியை பதிவு செய்துகொண்டது வங்கதேசம்.
டாஸ் வென்று முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது இங்கிலாந்து அணி.வங்கதேச அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக இம்ருல் காயெஸ், ஜஹ்ருல் இஸ்லாம் ஆகியோர் களமிறங்கினர்.இருவரும் சிறப்பாக ஆடி அந்த அணிக்கு நல்ல அடித்தளத்தை கொடுத்தனர்.இம்ருல் காயெஸ் 76 ரன்களும் ஜஹ்ருல் இஸ்லாம் 40 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்களை எடுத்தது.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஆடவந்த டிரோட் 94 ரன்கள் எடுத்தார். ஆனால் மற்ற வீரர்கள் எவரும் நிலைத்து நின்றாடவில்லை.
இதனால் 49.3 ஓவர்களில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 231 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் வெற்றியை வங்கதேச அணி பதிவு செய்தது.

காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகள் தீவிரம் சுரேஷ் கல்மாடி

டெல்லி,ஜுலை.11
வரும் அக்டோபர் மாதம் டெல்லியில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக போட்டிக் குழு தலைவர் சுரேஷ் கல்மாடி தெரிவித்துள்ளார்.
54 நாடுகளிலிருந்து சுமார் 10 ஆயிரம் வீரர்கள் பங்கேற்கும் இப்போட்டி வரும் அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கி 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிகட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. போட்டிகளுக்கான ஸ்டேடியம், வீரர்கள் தங்கும் காமன்வெல்த் கிராமம் ஆகியவற்றின் கட்டுமான பணிகளை சுரேஷ் கல்மாடிபார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது:
போட்டிகளுக்கான அனைத்துப் பணிகளும் முடிந்து, தயார் நிலையில் உள்ளது. காமன்வெல்த் போட்டிகளைக் காண உலகம் முழுவதிலிருந்து சுமார் 20 லட்சம் மக்கள் வருவார்கள் என்றும் டெல்லியில் சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட கட்டுமாப் பணிகள் வேகமாக நடைபெற்றுவருவதாகவும் கூறினார்.1982 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டிகளுக்குப் பின்னர் டெல்லியில் நடைபெறப்போகும் சர்வதேச போட்டி காமன்வெல்த் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பையை ஒப்படைத்து இத்தாலி

ஜோகன்னஸ்பர்க், ஜுலை.12
2006ம் ஆண்டு நடந்த உலக கோப்பையை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற உலக சாம்பியன் இத்தாலி அணியின் கேப்டன் பேபியோ கன்னவாரா உலக கோப்பையை 'பிபா'தலைவர் செப்பிளேட்டரிடம் ஒப்படைத்தார்.
உலக கோப்பை கால்பந்து போட்டிஇறுதி போட்டியில் நெதர்லாந்துஸ்பெயின் அணிகள் மோதின.போட்டிக்கு முன்னதாக கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி அணியின் கேப்டன் பேபியே கன்னவாரா உலக கோப்பையை 'பிபா' தலைவர் செப் பிளேட்டரிடம் ஒப்படைத்தார்.
உலக கோப்பையை வெல்லும் அணிகள் அடுத்த உலக கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் வரை கோப்பையை தங்களிடம் வைத்துக் கொள்ளலாம். இறுதி போட்டிக்கு முன்னதாக கோப்பையை ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது மரபு. அதன்படி இத்தாலி அணியின் பேபியோ கன்னவாரா உலக கோப்பையை 'பிபா' தலைவரிடம் ஒப்படைத்தார்.

அடுத்த உலகக்கோப்பை கால்பந்து போட்டி சின்னம் அறிமுகம்


ஜோகன்னஸ்பர்க், ஜுலை.12
அடுத்த 2014ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் நடைபெற இருக்கிறது. இப்போட்டிக்கான சின்னம் ஜோகன்ஸ்பர்க்கில் அறிமுகம் செய்யப்பட்டது.ஏற்கனவே 1950ம் ஆண்டு பிரேசிலில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடந்துள்ளது.கடந்த 1978ம் ஆண்டு அர்ஜென்டினாவில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டிதான் தென் அமெரிக்க கண்டத்தில் நடந்த கடைசி உலக கோப்பை போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த விழாவில் இச்சின்னம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விழாவில் பிரேசில் அதிபர் லுசியா சில்வா கலந்து கொண்டு சின்னத்தை அறிமுகம் செய்தார்.அவர் பேசும்போது உலககோப்பை கால்பந்து போட்டியை வெற்றிகரமாக நடத்துவது எப்படி என்பதை எங்களது தென்னாப்பிரிக்க சகோதரர்களிடம் இருந்து கற்றுக் கொண்டுள்ளோம். இதேபோன்று நடத்திக் காட்டுவது எங்களுக்கு சவாலான விஷயம்தான்' என்றார்.
இந்த விழாவில் பிபா தலைவர் செப்பிளேட்டர்,பிரேசிலின் முன்னாள் பயிற்சியாளர்கள் கார்லஸ் அல்பெர்ட் பெரைரா, கார்லஸ் அல்பெர்டோ , பிரேசில் அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் ரொமாரியோ, காபூ ஆகியோர் கலந்து கொண்டனர்.