Monday, October 6, 2014

சில ஆங்கில வார்த்தைகளில் மவுன எழுத்துகள் (Silent letters) ஏன் இருக்க வேண்டும் என்று வாசகர் ஒருவர் கேட்டிருக்கிறார். Psycho என்பதை சைகோ என்கிறோம். அப்படியிருக்க ‘P’ என்ற எழுத்து அங்கே எதற்காக? Island என்பதை ஐலண்ட் என்கிறோம். பின் எதற்காக ‘S’ என்ற எழுத்து?.
இரத்தமா? ரத்தமா?
தமிழில் இல்லையா? ‘‘நான் இன்று இரத்த தானம் செய்தேன்’’ என்றா சொல்வீர்கள்? ரத்தம்தானே? இயந்திரம் என எழுதினாலும் யந்திரம்தானே. (ஆனாலும் ஆங்கிலத்தில் மவுன எழுத்துகள் கணிசமானவைதான்).
ஆங்கிலத்தில் மவுன எழுத்துகள் இடம் பெற வேறொரு முக்கிய காரணம் உண்டு. ஆங்கிலம் பல மொழிகளிலுள்ள வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு வளர்ந்து செழித்த மொழி. எனவே மூல மொழியின் சாயல் அதில் அடிப்பது தவிர்க்க முடியாதது.
கடன் என்பதை Debt என்று குறிப்பிடுகிறோம். இதில் ‘B’ மவுன எழுத்து.
லத்தீன் வார்த்தையான debitum என்பதிலிருந்து தோன்றிய வார்த்தை இது. எனவே அந்த ‘b’ ஆங்கிலத்துக்குள்ளும் இடம் பெற்று விட்டது.
‘வெட்னெஸ்டே யா? வெனஸ்டே யா?
‘‘வெட்னெஸ்டே அன்னிக்கு ஒரு ஸான்ட்விச் சாப்பிட்டேன்’’ என்று
அழுத்தம் திருத்தமாகச் சொல்லக் கூடாது. Wednesday என்பதில் ‘d’ மவுன எழுத்து. எனவே ‘வெனஸ்டே’’ என்றுதான் கூறவேண்டும். அதேபோல Sandwitch என்பதிலும் ‘d’ மவுன எழுத்து. எனவே ஸான்விச் என்றுதான் கூறவேண்டும்.
மாலை என்பது ஈவினிங் அல்ல. ஈவ்னிங்தான். ஏனென்றால் Evening என்பதில் மூன்றாவது எழுத்தான ‘e’ என்பது மவுனஎழுத்து.
பல என்பதைக் குறிக்கும் வார்த்தையை ‘ஸெவரல்’ என்று கூற வேண்டாம. அது ‘ஸெவ்ரல்’ காரணம். Several என்ற வார்த்தையில் நான்காவது எழுத்தான ‘e’ ஒரு மவுன எழுத்து.
இன்னும் சில உதாரணங்கள் இதோ.
வெப்பத்தைக் குறிக்கும் டெம்ப்ரேச்சர் - temp(e)rature.
சீப்பு என்பதைக் குறிப்பது ‘கோம்’- Com(b).
கட்டைவிரல் என்பது தம் - Thum(b)
gh ன் மவுனம்
பொதுவாகவே ஒரு வார்த்தையின் கடைசியில் ‘gh’ என்ற எழுத்துகள் இடம் பெற்றால் அவை மவுனமாகவே உள்ளன உதாரணம்:- Hi(gh), wei(gh), throu(gh), thorou(gh).
தவிர வார்த்தையின் நடுவில் இடம் பெறும் ‘gh’ கூட மவுன எழுத்துகளாகவே பல வார்த்தைகளிலும் இடம் பெறுகின்றன.
Night, sight, right, caught, daughter, neighbour, straight, thought ஆகிய வார்த்தைகளில் ‘gh’ மவுன எழுத்துகளாகவே இருப்பதை நீங்கள் உச்சரிக்கும்போது உணரலாம்.
வார்த்தைகளின் தொடக்க எழுத்து ‘k’ மற்றும் ‘h’ என்றால் அந்த எழுத்துகள் பெரும்பாலும் மவுன எழுத்துகளாகவே உள்ளன என்பதையும் கவனியுங்கள்.
மவுனத்தின் விதிகள்
எவையெல்லாம் மவுன எழுத்து என்பதற்கு ஏதாவது விதிகள் உள்ளனவா? அப்படி எதுவும் இல்லை. ஆனால் நான் கவனித்தவரை சில அனுமானங்கள் தோன்றுகின்றன. இவை பெரும்பாலும் பல வார்த்தைகளுக்கும் பொருந்துகின்றன.
1. ‘m’ என்ற எழுத்தைத் தொடர்ந்து வரும் ‘b’ என்ற எழுத்து பொதுவாக மவுன எழுத்தாகவே இருக்கிறது. lamb, climb, tomb.
2. ‘t’ என்ற எழுத்துக்கு முன்னால் இடம் பெறும் ‘b’ பெரும்பாலும் மவுன எழுத்தே. doubt, subtle.
3. ‘p’ என்பது வார்த்தையின் தொடக்க எழுத்தாக இருந்து, அதைத் தொடர்ந்து ‘sy’ அல்லது ‘ne’ ஆகிய எழுத்துகள் இடம் பெற்றால் ‘p’ மவுன எழுத்தாகவே அமைந்து விடும். psychology, psycho, pneumonia, pneumatic
4. ‘n’ என்ற எழுத்துக்கு முன்னால் இடம் பெறும் ‘k’ மவுனச் சொல்லாகவே இருக்க வாய்ப்பு அதிகம். knight, knife, knack, knave.
5. ஒரு வார்த்தையின் இறுதியில் ‘e’ இடம் பெற்றிருந்தால் அதை உச்சரிப்பில் நாம் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. challenge, table, able
தேவையற்ற சுமையா?
அதே சமயம் எல்லா மவுன எழுத்துகளுமே தேவையற்ற சுமைகள் அல்ல. சில சமயம் கேட்பதற்கு ஒன்று போலவே இருக்கும் இரண்டு வார்த்தைகளைப் படிக்கும்போது சரியான அர்த்தத்தில் புரிந்து கொள்ள இவை உதவக் கூடும்.
எடுத்துக்காட்டாக, IN, INN ஆகிய இரண்டு வார்த்தைகளையும் படிக்கும்போதே அவற்றின் பொருள் வித்தியாசம் நமக்கும் புரிகிறது (இரண்டாவது வார்த்தையில் உள்ள அதிகப்படி ‘N’ மவுன எழுத்து என்றாலும்).
ஆங்கிலமாக்கம்
கீழே உள்ள தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மவுன வார்த்தைகள் பெறுங்கள்.
கத்தி,கால் முட்டி,நேர்மையான, மணி (நேரம்),வாரிசு,முடிச்சு, தட்டுதல் (கதவை), அறிதல்
Scar - Scarce - Scare
Scar என்றால் தழும்பு. Scarce என்றால் அரிதாக என்ற அர்த்தம். You scarcely come here என்றால் நீங்கள் எப்போதோ ஒருமுறைதான் வீட்டுக்கு வருகிறீர்கள் என்று பொருள்.
Scare என்றால் பயமுறுத்துதல் என்று பொருள். Do not scare me with your new make up.
தொடர்புக்கு
aruncharanya@gmail.com
ஆம்னி என்றால் எல்லாம் என்று அர்த்தம். இறைவனை OMNIPRESENT என்பதுண்டு. அதாவது எல்லா இடங்களிலும் நிறைந்திருப்பவன். OMNIPOTENT என்றும் சொல்வதுண்டு. சர்வசக்திகளும் படைத்தவன் என்ற அர்த்தத்தில். OMNIVORE என்றால் எல்லாவற்றையும் சாப்பிடக்கூடிய மிருகம் என்று பொருள். அதாவது பிற விலங்குகள், தாவரங்கள் என்று எதையும் சாப்பிடக் கூடியது.
அதெல்லாம் இருக்கட்டும் OMNI BUS என்கிறோமே அதற்கு என்ன அர்த்தம்? அந்தக் காலத்தில் குதிரைகளால் இழுக்கப்பட்ட, மூடப்பட்ட வண்டியைத்தான் OMNIBUS என்பார்கள். லத்தீன் மொழியில் OMNIBUS என்றால் அனைவருக்குமானது என்று பொருள். OMNIBUS எந்த இடத்திற்கும் செல்லும் (அதாவது இந்த தடத்தில் மட்டுமே இது செல்லும் என்பது கிடையாது).
Potable water
ஓர் அடுக்கக விற்பனை விளம்பரத்தில் வசதிகள் என்ற பட்டியலின் கீழ் Potable water என்று குறிப்பிட்டதைச் சுட்டிக் காட்டும் ஒரு வாசகர் இப்படியொரு கேள்வியை எழுப்பியிருக்கிறார். ‘’வெளியிடத்திலிருந்து இங்கே தண்ணீர் கொண்டு வருகிறார்கள் என்றால் அது எப்படி ஒரு சாதகமான விஷயம்?’’.
Potable என்ற வார்த்தையோடு portable என்ற வார்த்தையை இவர் குழப்பிக் கொண்டிருக்கிறார் என்று படுகிறது. Portable என்றால் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய என்று பொருள். Potable என்றால் குடிக்கத்தக்க என்று அர்த்தம்.
Potable water என்றால் அந்த நிலத்தில் கிடைக்கும் தண்ணீர் குடிக்கத்தக்கது - அதாவது உப்பாக இருக்காது என்று பொருள். இது சாதக மானதுதானே?
டெலிவரி
‘’My wife delivered a baby yesterday’’ என்று ஒருவர் சொன்னால் என்ன செய்வீர்கள்? ‘’இதென்ன கேள்வி? கை கொடுப்பேன். வாழ்த்து சொல்வேன்.. மறக்காமல் “எப்ப ட்ரீட் என்பேன்’’ என்கிறீர்களா? இதையெல்லாம் செய்யுங்கள். ஆனால் பிறகு நேரம் கிடைக்கும்போது அவர் கூறிய வாக்கியத்திலுள்ள தவறையும் எடுத்துக் காட்டுங்கள்.
‘’My wife delivered a baby yesterday’’ என்ற வாக்கியத்தில் என்ன தவறு என்கிறீர்களா? இப்படி யோசியுங்கள். உங்களுக்கு ஒரு தபாலில் ஒரு பார்சல் வந்தால் அதை ‘’The postman delivered a parcel’’ என்பீர்கள் இல்லையா? அதாவது தபால்காரரின் வேலை யாரோ அனுப்பிய பார்சலை உங்களிடம் சேர்ப்பிப்பது மட்டும்தான். ஆனால் உங்கள் நண்பரின் மனைவி கஷ்டப்பட்டுத் தானாகவே ஒரு குழந்தையைப் பெற்றிருக்கிறாள். அவருக்குப் பிரசவம் பார்த்த டாக்டரைப் பற்றி வேண்டுமானால் ‘’The doctor delivered the baby to me’’ எனலாம். எனவே ‘’My wife gave birth to a child yesterday’’ என்று உங்கள் நண்பர் கூறுவதுதான் சரியானது.
புயலென…
Stormed என்பதன் அர்த்தத்தைக் கேட்டிருக்கிறார் ஒரு வாசகர். Storm என்பது புயல். இது பெயர் சொல். ஆனால் Stormed என்பது கடந்த கால வினைச்சொல் - Verb in past tense.
Stormed என்றால் கோபத்துடனும், வேகமாகவும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்வது என்று பொருள். எடுத்துக் காட்டு - He burst into tears and stormed off. புயலெனக் கிளம்பினான், வில்லினின்று விடுபட்ட அம்பு
போலக் கிளம்பினான் என்றெல்லாம் இதற்குப் பொருள் கொள்ளலாமா என்று கேட்கும் அனைத்து ராசி நண்பர்களே, கொள்ளலாம். கொள்ளலாம் என நான் கூறுகிறேன்.
பொங்கி எழும் வாசகர்கள்
நம் வாசக நண்பர்கள் “பொறுப்பதே வேண்டாம். பொங்கி எழு” பிரிவினர்.
“பாரம்பரியம் மிக்க இந்து இதழில் நீங்கள் இப்படி ஒரு தவறு செய்யலாமா?” என்று ஒருவர் கடிதம் போட்டுள்ளார்.
இருவாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டிருந்த கார்ட்டூனில் “Go to home” என்ற வாக்கியம் இடம் பெற்றிருந்தது. “Go home” என்பதுதான் சரி என்று சுட்டியும், குட்டியும் வந்தன கடிதங்கள்.
“Go to home” என்று நான் எழுதுவதற்கு முன்பாக எனக்குள் நானே இரண்டு பகுதிகளாகப் பிரிந்து (அந்தக் காலத் திரைப்படக் காட்சிகளில் காணப்படுவது போல) விவாதித்தேன். அந்த விவாதம் இப்படி இருந்தது.
பகுதி 1 – Go abroad என்றுதானே எழுதுகிறோம்? அப்படியானால் Go home என்றுதான் எழுத வேண்டும்.
பகுதி 2 – Go to hospital என்று எழுதுவாயா? இல்லை Go hospital என்று எழுதுவாயா? (இந்த இடத்தில் பகுதி-2 விடமிருந்து ஏளனச் சிரிப்பு. காரணம் Go hospital என்றதும் மருத்துவமனையே நகர்ந்து செல்வது போன்ற காட்சி அதற்குள் விரிகிறது).
பகுதி 1 – இதென்ன உளறல்? Go to downstairs என்பாயா? Go downstairs தானே? எனவே Go home தான்.
பகுதி 2 – அதெல்லாம் இருக்கட்டும். Go to house என்று எழுதும்போது Go home என்று ஏன் எழுத வேண்டும்?
பகுதி 1 – பிரபல இலக்கண நூல்களை ரெஃபர் செய்தும் புரிய வில்லையா? Go home என்பதில் home என்பது adverb ஆகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
(இதைத் தொடர்ந்து ‘’Home என்பது இந்த இடத்தில் adverb என்றால் house என்பது ஏன் adverb இல்லை? தவிர இந்த விளக்கம் தெளிவைத் தரவில்லை’’ என்றெல்லாம் விவாதித்த பகுதி – 2, ‘’Go to Home’’ என்றே எழுத வைத்து விட்டது.)
வாசகர்களின் கடிதங்களுக்குப் பின் -
பகுதிகள் 1 & 2 இரண்டும் சேர்ந்து சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது இதுதான். லாஜிக் எப்படி இருந்தாலும், சமீபத்தில் சில ஆங்கில எழுத்தாளர்கள் வேறுமாதிரி எழுதினாலும், தொன்று தொட்டுப் பயன்பாட்டில் இருப்பது Go Home தான். Go Home தான்.
என்ன … திருப்தி தானே- ?
எங்கே ‘I’ என்பதைப் பயன்படுத்துவது? எங்கே ‘Me’ என்பதைப் பயன்படுத்துவது? எனப் பலருக்கு​ம் சந்தேகம். இதுவரை ஆறு வாசகர்கள் இது பற்றிக் கேட்டுவிட்டார்கள்.
இதைத் தெ​ரிந்து கொள்வதற்கு முன்பாக Subject, Predicate ஆகிய இரண்டைப் பற்றியும் எளிமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். (பள்ளியில் Subjects என்று அறிவியல், ஆங்கிலம், தமிழ், கணிதம் போன்றவற்றைக் குறிப்பிடுவோம். அதோடு இந்த Subject - ஐ குழப்பிக் கொள்ள வேண்டாம்)
சப்ஜெக்ட் - ப்ரெடிகட்
ஒவ்வொரு வாக்கியத்தையும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்க முடியும். அந்த வாக்கியம் யாரைப் பற்றியது அல்லது எதைப் பற்றியது என்பது சப்ஜெக்ட்.
அந்தச் சப்ஜெக்ட் பற்றி எதையோ சொல்லும் பகுதி ப்ரெடிகட்.
I Drink Coffee என்பதில் ‘I’ சப்ஜெக்ட். “ Drink Coffee’’ என்பது ப்ரெடிகட்.
Fresh Air Entered The Room என்பதில் “Fresh Air’’ சப்ஜெக்ட். “Entered The Room’’ என்பது ப்ரெடிகட்.
Kumar And Karan Quarrelled With Each Other என்பதில் Kumar And Karan சப்ஜெக்ட். “Quarlled With Each Other’’ என்பது ப்ரெடிகட்.
Come என்ற ஒரே வார்த்தை கூட வாக்கியமாக இருக்கலாம். அப்போது சப்ஜெக்ட் மறைமுகமானது. அதாவது You. ப்ரெடிகட் Come.
இப்போது சப்ஜெக்ட், ​ப்ரெடிகட் புரிந்து விட்டதல்லவா? அடுத்ததாக எப்போது ‘I’, எப்போது “Me’’ என்கிற பஞ்சாயத்துக்குள் நுழைவோம்.
ஐ – மீ பஞ்சாயத்து
I, Me ஆகிய இரண்டுமே Personal Pronouns. பிற Noun அல்லது Pronounகளோடு இவற்றைப் பயன்படுத்தும்போதுதான் பெரும்பாலும் குழப்பம் வருகிறது. இதை எளிய விதத்தில் தீர்த்துக் கொள்ள முடியும்.
வாக்கியத்தில் சப்ஜெக்ட்டில் உள்ள We, He, She, They, You ஆகியவற்றுடன் பயன்படுத்த வேண்டியது ‘I’ தான், Me அல்ல.
You a​nd I Are Going To A Movie. இதில் You And I என்பது சப்ஜெக்ட். எனவே ‘I’ பயன்படுத்த வேண்டும், Me அ​ல்ல. அதாவது You And Me என்று வரக் கூடாது.
இதேபோல் Raja And ________Are Walking. இந்த வாக்கியத்தில் கோடிட்ட இடத்தில் இடம்பெற வேண்டியது எது? I அல்லது Me? ‘I’ தான். ஏனென்றால் “Raja And _________” என்பது சப்ஜெக்ட்.
வாக்கியத்தில் ப்ரெடிகட் பகுதியில் Him, Her, Us, Them போன்றவற்றோடு வர வேண்டியது Me.
The Child Followed Him And Me. இதுதான் சரி. The Child Followed Him And I என்று வரக் கூடாது. இதைப் பலரும் சரியாக எழுதிவிடுவார்கள். ஏனென்றால் Him என்பதன் சமச்சொல் Meதான் I அல்ல என்பது நமக்குத் தெரியும்.
சரி, கூட Him, Her, Them போன்ற எதுவும் வராவிட்டால் என்ன செய்வது?
அப்போதும் நான் ஏற்கனவே​ சொன்ன சப்ஜெக்ட், ப்ரெடிகட் பகுதிகள் உதவும்.
I Saw The Movie.
Ramu And I Saw The Movie
Ramu Spent The Day With Me.
Ramu Spent The Day With Krishna And Me.
எது சரி?
சந்தேகம் எப்போது அதிகம் எழுகிறது என்றால் இந்த I அல்லது Me என்பது வேறொரு Noun (அல்லது Pronoun) உடன் இணையும்போதுதான்.
கீழே உள்ள இரண்டு வாக்கியங்களில் எது சரி?
(A) If Deepa And I Go To Coimbatore, We Will Be Happy.
(B) If Deepa And Me Go To Coimbatore, We Will Be Happy.
இரண்டு விதங்களில் முதல் வாக்கியம்தான் சரியானது என்று கூறலாம்.
Deepa And I என்பது Subjectல் இடம் பெறுபவை. எனவே I - தான் வரவேண்டும். Me அல்ல.
கீழே உள்ள இரண்டு வாக்கியங்களில் எது சரி?
(A) He Instructed Lakshman And I To Be Prepared.
(B) He Instructed Lakshman And Me To Be Prepared.
Predicate-ல் இடம் பெற வேண்டியது Me–தான் I - அல்ல.
இன்னொரு விதத்திலும் நம் விடை சரியானதா என்பதைச் சரிபார்க்க முடியும்.
I அல்லது Me இடம் பெற வேண்டிய பகுதியோடு இணைந்துள்ள Noun (அல்லது Pronoun)ஐ நீக்கிவிடுங்கள். இப்போது I அல்லது Me போட்டுத் தனித்தனியாகப் படித்துப் பாருங்கள்.
If Deepa And (I அல்லது Me) Go To Coimbatore என்பதில் தீபாவை​ நீக்கிவிட்டு இருவிதமாக எழுதிப் பார்ப்போம்.
(A) If I Go To Coimbatore
(B) If Me Go To Coimbatore
இப்போது உங்களுக்கே தெரிகிறது முதல் பயன்பாடுதான் சரியானது என்று. இல்லையா?
இதேபோல்
He Told Murali And (I அல்லது Me) To Start.
முரளியை நீக்கிவிடலாம்.
He Told I To Start.
He Told Me To Start.
இவற்றில் He Told Me To Start என்று படுகிறதல்லவா? அப்படியானால் He Told Murali And Me To Start என்பதுதான் சரி.
Ultimate
Ultimate என்பது ஒருவிதத்தில் வித்தியாசமான வார்த்தை. “அவதான் Ultimate’’ என்று தன் கனவு தேவதையைப் பற்றி ஒருவர் கூறும்போது “மிகச் சிறந்த’’ என்ற அர்த்தத்தில்தான் அதைப் பயன்படுத்துகிறார். ஆனால் Ultimate என்பதன் தொன்மையான அர்த்தம் கடைசி என்பதுதான். “This Is The Ultimate Entry’’ என்றால் அதுதான் கடைசியாக வந்த விண்ணப்பம் என்று அர்த்தம். Penultimate என்றால் கடைசிக்குச் சற்று முன்னதாக என்று அர்த்தம்.
ஆனால் மிகச் சிறப்பான என்ற அர்த்தமும் இந்த வார்த்தைக்குப் பொருத்தமானதுதான் என்பதைச் சமீபகால அகராதிகள் ஏற்றுக்​ கொண்டு விட்டன.
அபாஸ்ட்ரஃபி (Apostrophe) என்பது ஒற்றை மேற்கோள் குறி போலத் தோற்றமளிக்கும். அதாவது ’ என்பதுதான் அபாஸ்ட்ரஃபி.இதை எப்போது எப்படிப் பயன்படுத்துவது என்பதில் பலருக்குக் குழப்பம் இருக்கிறது.
அபாஸ்ட்ரஃபியின் விதிகள்
Apostrophe என்பதை உரிமையை அல்லது உடைமையைக் குறிக்கப் பயன்படுத்துவதுண்டு. சிறுவனின் புத்தகம் என்பதைக் குறிக்க Boy’s book என்போம். அந்தப் புத்தகம் அந்தச் சிறுவனுடையது என்பது தெரிகிறது இல்லையா? அதாவது ஒருமை பெயர்ச்சொல் குறித்த உரிமை அல்லது உடைமை என்றால், அந்தப் பெயர்ச் சொல்லுக்குப் பிறகு Apostrophe குறியிட்டுப் பக்கத்தில் ‘s’ சேர்ப்போம். Raman’s chair, Preetha’s son என்பதுபோல.
Boss என்னும் சொல் போல, சில சமயம் பெயர் சொற்களின் இறுதி எழுத்திலேயே ‘s’ இருக்கும். முதலாளியின் கட்டளை என்பதை எப்படிக் குறிப்பிடுவது? Boss’s order என்று குறிப்பிடலாம். ஆனால் இப்படி எழுதும்போது ஏதோ ஒரு நெருடல் வருகிறது இல்லையா? அதனால்
Apos tropheக்குப் பின்னால் உள்ள ‘s’ என்ற எழுத்தை நீக்கிவிட்டும் பயன்படுத்தலாம். Boss’ order என்று எழுதினால் Apostropheக்குப் பிறகு ‘s’ இருப்பதாக அர்த்தம். (மாட்டேன், Boss’s order என்றுதான் எழுதுவேன் என்றால் அப்படியே எழுதுங்கள், தப்பில்லை).
ஒருவரின் பெயரே Andrews என்று வைத்துக் கொள்வோம். அவருடைய நூலகத்தை எப்படிக் குறிப்பிடலாம்? சிலர் தவறாக Andrew’s Library என்று குறிப்பிடுவார்கள். இது தவறு. அவர் பெயர் Andrew அல்ல. எனவே Andrews’s Library அல்லது Andrews’ Library என்றுதான் குறிப்பிட வேண்டும்.
சரி, குழந்தைகளின் பைகள் என்பதை எப்படிக் குறிப்பிடலாம்? Childrens’ bags என்று குறிப்பிடலாமா? தப்பாச்சே. Child என்பதன் பன்மைதான் Children. எனவே Children’s bags என்றுதான் குறிப்பிட வேண்டும்.
மாமியார் பற்றி…
Mother-in-law என்றால் மாமியார் என்பது ‘மாமியார் வீட்டுக்குப்’ போய் வராதவர்களுக்கும் தெரியும். மாமியார்கள் என்பதை எப்படிக் குறிப்பிடலாம்? ‘இதென்ன கேள்வி? Mother-in-laws தான்’ என்று கூறினால் நீங்கள் தவறிழைக் கிறீர்கள்.
Mother-in-law என்பதன் பன்மை Mothers-in-law.
Sister-in-law என்பதன் பன்மை Sisters-in-law
Father-in-law என்பதன் பன்மை Fathers-in-law
இப்போது நம்முடைய ஒரிஜினல் (அதாவது Apostrophe தொடர்பான) கேள்விக்கு வருவோம். மாமியாரின் தங்கை என்பதை Mother-in-law’s Sister எனலாமா? அல்லது Mother’s-in-law Sister எனலாமா? முதலில் குறிப்பிட்டதுதான் சரி. மாமியார்களின் தங்கைகள் என்றால்கூட Mother-in-law’s Sisters என்றுதான் குறிப்பிட வேண்டும்.
உயிர்களோடு உறவு
இலக்கண விதி இல்லை என்றால்கூட இந்த இடத்தில் வேறொரு நடைமுறையையும் பார்ப்போம். பிற மனிதர்களை உரிமை அல்லது உறவு கொண்டாடும்போது Apostrophe இடம் பெறச் செய்யும் வார்த்தைகளைப் பயன்படுத்தலாம். உயிரற்ற பொருள்களை உரிமை அல்லது உறவு கொண்டாடும்போது Apostrophe இல்லாதபடிக்கு வார்த்தைகளை அமைக்கலாம்.
Father’s brother. Krishna’s Sister.
Kerchief of Father, File of sister.
Apostropheயை வேறொன்றுக்கும் பயன்படுத்துவார்கள். ஓர் எழுத்து அல்லது ஒரு சில எழுத்துகள் நீக்கப்படும்போது அந்த இடத்தில் Apostrophe-ஐப் பயன்படுத்துவார்கள்.
I do not என்பதற்குப் பதிலாக I don’t எனலாம்.
We did not என்பதற்குப் பதிலாக We didn’t எனலாம்.
You have done the right thing என்பதற்குப் பதிலாக You’ve done the right thing எனலாம்.
ஃபைனான்ஸ்- ஃபியான்ஸெ- ஃபியான்ஸே
Finance என்றால் நிதி என்பது நமக்குத் தெரியும். நிதியமைச்சர்தானே Finance Minister?
Finance என்பதை ஃபைனான்ஸ் என்றுதான் உச்சரிக்க வேண்டும் (ஃபினான்ஸ் அல்ல).
“அடுத்தமுறை உன்னைச் சந்திக்கும்போது என் Fiance-வை அறிமுகப் படுத்துகிறேன்’’. (Fiance என்பதை ஃபியான்ஸெ என்றுதான் உச்சரிக்க வேண்டும்.) இப்படி ஒரு கடிதமோ, மின்னஞ்சலோ அனுப்பப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். இதை எழுதியது ராஜசேகராக இருக்குமா? அல்லது ராஜகுமாரியாக இருக்குமா? சந்தேகமில்லாமல் ராஜகுமாரிதான்.
ஏனென்றால் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது அல்லது நிச்சயமாகிவிட்டது என்னும் நிலையில் உள்ள வருங்காலக் கணவனைத்தான் Fiance என்று குறிப்பிட வேண்டும் (ராஜசேகர் இப்படிக் குறிப்பிட்டால் அது வேறு மாதிரி!).
அப்படியானால் வருங்கால மனைவியை எப்படிக் குறிப்பிடலாம்? கொஞ்சலாக நீங்கள் எப்படி வேண்டுமானாலும் குறிப்பிடலாம். மற்றபடி நாகரிக முறையில் Fiancee என்றுதான் குறிப்பிட வேண்டும். ஆண் நண்பர்களோ, பெண் நண்பர்களோ பலர் இருக்கலாம். ஆனால் Fiance அல்லது Fiancee என்பவர் ஒருவர்தான் இருக்க முடியும் (அதாவது ஒரு காலகட்டத்தில்!).
Fiancee என்பதை ஃபியான்ஸே என்று உச்சரிக்க வேண்டும்.
(தொடர்புக்கு : aruncharanya@gmail.com)