Friday, January 6, 2012

18ந் தேதி தொடங்குவதாக இருந்த கூட்டம் தள்ளிவைப்பு 30ந் தேதி சட்டசபை கூடுகிறது கவர்னர் உரை நிகழ்த்துகிறார்

தமிழக சட்டசபை கூடும் தேதி தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. அதன்படி, வருகிற 18ந் தேதிக்கு பதிலாக 30ந் தேதி சட்டசபை கூடும் என்றும், அன்று சபையில் கவர்னர் ரோசய்யா உரை நிகழ்த்துவார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை, ஜன.6

இந்த ஆண்டில், தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் வருகிற 18ந் தேதி தொடங்கும் என்று கவர்னர் ரோசய்யா ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

30ந் தேதி கூடுகிறது

ஆனால் இப்போது சட்டசபை கூடும் தேதி தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, வருகிற 30ந் தேதி சட்டசபை கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜனவரி 18ந் தேதி காலை 10 மணிக்கு தொடங்க வேண்டிய சட்டசபை கூட்டம், அதற்கு பதிலாக ஜனவரி 30ந் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது என்று கவர்னர் அறிவித்து இருப்பதாக தமிழக சட்டசபையின் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் தெரிவித்து உள்ளார்.


கவர்னர் உரை

ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடரின் தொடக்க நாளில் கவர்னர் உரை நிகழ்த்துவது மரபு. அதன்படி, வருகிற 30ந் தேதி சட்டசபையில் கவர்னர் ரோசய்யா உரை நிகழ்த்துகிறார். அவர் தமிழக கவர்னராக பதவி ஏற்ற பின் சட்டசபையில் உரை நிகழ்த்துவது இதுவே முதல் தடவை ஆகும்.

இந்த கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும்?, சபை நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்து, முதல் நாள் கூட்டம் முடிந்த பின்னர் சபாநாயகர் டி.ஜெயக்குமார் தலைமையிலான அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும்.

ஜெயலலிதா தலைமையில் ஆட்சி

கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து ஜெயலலிதா தலைமையிலான அரசு பதவி ஏற்றதும், முதல் சட்டசபை கூட்டம் கடந்த மே மாதம் 23ந் தேதி கூடியது. அன்று புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர். அதன் பிறகு ஜுன் மாதம் 3ந் தேதி கவர்னர் உரையுடன் சட்டசபை கூடியது.

பின்னர் அடுத்த கூட்டத்தொடர் ஆகஸ்டு மாதம் 4ந் தேதி தொடங்கியது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு பின்னர் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம், அமைச்சர்களின் பதிலுரை ஆகியவை இடம் பெற்றன. அந்த கூட்டத்தொடர் செப்டம்பர் 14ந் தேதி முடிவடைந்தது.

முல்லைப் பெரியாறு பிரச்சினை

அதன் பின்னர், முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக கடந்த மாதம் 15ந் தேதி சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்கும் வகையில் முதல்அமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானம் நிறைவேறியது.

No comments:

Post a Comment