Sunday, September 4, 2011

மாணவர்களுக்கு லேப்-டாப் விவசாயிகளுக்கு ஆடு-மாடுகள்



15-ந்தேதி ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்


மாணவர்களுக்கு இலவச லேப்-டாப், தாய்மார்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி மற்றும் விவசாயிகளுக்கு ஆடு-மாடுகள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வருகிற 15-ந்தேதி தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.

சென்னை, செப்.4-

சட்டசபை தேர்தலின் போது, அ.தி.மு.க. வெற்றி பெற்றால் பல்வேறு மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார்.

இலவச திட்டங்கள்

தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதை தொடர்ந்து, முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்ற ஜெயலலிதா, தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட இலவச திட்டங்களை படிப்படியாக நிறைவேற்றுவோம் என்று உறுதி அளித்தார்.

அந்த இலவச திட்டங்கள் வருமாறு:-

* அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள், அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இலவச லேப்-டாப் (மடிக்கணினி).

* தாய்மார்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி.

* வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு தலா ஒரு கலப்பின கறவை மாடு. விவசாய கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 4 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள்.

15-ந் தேதி ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்

முத்தான இந்த 3 திட்டங்களுக்கும் பட்ஜெட்டில் ரூ.2,353 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

அண்ணா பிறந்த நாளான வருகிற 15-ந் தேதி இந்த 3 திட்டங்களையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர்களும், அரசு உயர் அதிகாரிகளும் தீவிரமாக செய்து வருகின்றனர்.

14-ந் தேதி வரை சட்டபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத் தொடர் முடிந்த மறுநாளில் மூன்று முத்தான திட்டங்களும் தொடங்கி வைக்கப்படுகின்றன.

லேப்-டாப்

அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் படிக்கும் அனைத்து பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் இலவசமாக லேப்-டாப் வழங்கும் திட்டத்திற்காக இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.912 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டில் (2011-2012) தகுதியுள்ள மாணவர்களுக்கு 9 லட்சத்து 12 ஆயிரம் லேப்-டாப்கள் வழங்கப்பட உள்ளன. முதல் கட்டமாக 6 ஆயிரத்து 800 லேப்-டாப்கள் வாங்குவதற்காக குறுகிய கால டெண்டர் விடப்பட்டு உள்ளது. எச்.பி. உள்பட இரண்டு நிறுவனங்கள் இந்த குறுகிய கால டெண்டரை எடுத்து உள்ளன.

மீதமுள்ள மாணவர்களுக்கு வேறு பல கம்ப்ïட்டர் நிறுவனங்களுடன் டெண்டரை இறுதி செய்து லேப்-டாப்கள் கொள்முதல் செய்யப்பட்டு படிப்படியாக வழங்கப்படும் என்று அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:-

மிக்சி, கிரைண்டர்

அரிசி பெற தகுதியுள்ள குடும்ப அட்டை வைத்துள்ள பெண்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை இலவசமாக வழங்கும் திட்டத்தின் கீழ் 1 கோடியே 83 லட்சம் குடும்பங்களிலுள்ள தாய்மார்கள் படிப்படியாக பயன் அடைவார்கள். இந்த ஆண்டு சுமார் 25 லட்சம் குடும்பங்கள் இதன்மூலம் பயன்பெறும். இதற்காக பட்ஜெட்டில் ரூ.1,250 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள 18 கம்பெனிகளுக்கு மிக்சி, கிரைண்டர், மின் விசிறி தயாரிக்க டெண்டர் விடப்பட்டு இருக்கிறது. அந்த நிறுவனங்கள் மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. ஒருவாரத்திற்குள் தயாரிப்பு முடிந்து `பேக்கிங்' செய்யப்படும்.

தயார் நிலையில் ஆடுகள், மாடுகள்

வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு, குறிப்பாக விவசாய கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 4 வெள்ளாடுகள் அல்லது 4 செம்மறி ஆடுகள் இலவசமாக வழங்கப்படும் திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.135 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு ஒரு லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள ஆடுகள் வழங்கப்படுகின்றன. இதற்காக 4 லட்சம் ஆடுகள் கொள்முதல் செய்யப்பட்டுவிட்டன.

பால் உற்பத்தியில் இரண்டாவது வெண்மைப் புரட்சியை உருவாக்குவதற்காக வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 60 ஆயிரம் கறவை மாடுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. இந்த ஆண்டில் பால் உற்பத்தி குறைவாக உள்ள பின்தங்கிய கிராமப்புறங்களில் (21 மாவட்டங்கள்) வாழும் ஏழைக் குடும்பங்களுக்கு `ஜெர்சி' போன்ற 12 ஆயிரம் கலப்பின கறவை மாடுகள் வழங்கப்படுகின்றன. இதற்காக பட்ஜெட்டில் ரூ.56 கோடி ஒதுக்கப்பட்டது. அரசு உத்தரவுப்படி, கர்நாடகம், ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் நடைபெற்ற கால்நடை சந்தைகளில் சுமார் 12 ஆயிரம் கலப்பின கறவை மாடுகள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன.

பால் பொருட்கள் தயாரிப்பு அதிகரிக்கும்

இந்த திட்டம் தொடங்கப்பட்டதும் மாநிலத்தில் `ஆவின்' நிறுவனத்தின் பால் கொள்முதல் அதிகரிக்கும். தற்போது தினமும் சுமார் 24 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதை 27 லட்சம் லிட்டராக அதிகரிக்க அரசு திட்டமிட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து பால் பொருட்களான வெண்ணெய், நெய், பால்கோவா போன்றவற்றின் தயாரிப்பும் அதிகரிக்கும். கர்நாடக மாநிலத்தில் தினமும் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.