Wednesday, July 28, 2010

இந்திய அணி சிறப்பான துவக்கம்


கொழும்பு, ஜுலை.28
இரண்டாம் நாளான நேற்று இலங்கை அணி 642 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
கொழும்பு கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில்2 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி வழக்கம் போல தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்தியாவும் முதல் நாள் போலவே தங்களது ஒன்றுமில்லாத பந்துவீச்சை வீசினர். இந்திய அணியின் மோசமான பந்துவீச்சினால் இலங்கை அணியின் ரன்விகிதம் வேகமாக வளர்ந்தது. நேற்று இலங்கை எதிர்கொண்ட 69.4 ஓவர்களில் 330 ரன்களை விளாசியது.அந்த அணியின் கேப்டனும்,துணை கேப்டனும் இணைந்து இந்திய பந்துவீச்சாளர்களை படாய் படுத்தினர்.
சங்கக்காரா அவுட்
ஒரு கட்டத்தில் இந்தப் பிட்சில் ஒன்றும் இல்லை என்று தோனி விரக்தியடைந்து 2வது ஸ்லிப்பை எடுத்தவுடன் அந்த இடத்தில் சங்கக்காரா அதித்த ஷாட் ஒன்று கேட்ச் பிடிக்கும் உயரத்தில் சென்றது. இதன் பிறகு ஓஜாவின் ஒரே ஒவரில் 4 பவுண்டரிகளை அடித்து சங்கக்காரா டெஸ்ட் போட்டியில் தனது ஏழாவது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். இரட்டை சதம் அடித்த பிறகு சேவாக் வீசிய பந்தை கட் செய்ய முயன்றார் சங்கக்காரா .ஆனால் பந்து மட்டையின் வெளி விளிம்பில் பட்டு திராவிட்டிடம் கேட்சாகச் சென்றது.திராவிட் அதனை அழகாக பிடித்துகொண்டார் .335 பந்துகளை சந்தித்த அவர் 219 ரன்கள் எடுத்து வெளியேறினார்.அதில் 29 பவுண்டரிகளும் அடங்கும்.சங்கக்காரா ஆட்டமிழக்கும் போது இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 466 ரன்கள் எடுத்திருந்தது.இதன் பிறகு களமிறங்கிய இலங்கை அணியின் சமரவீரா களமிறங்கினார்.
புதிய சாதனை
இந்நிலையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஜெயவர்தனே டெஸ்ட் போட்டியில் தனது 28வதுசதத்தை எடுத்தார்.இந்த சதத்தின் மூலம் ஓரே மைதானத்தில்அதிக சதங்கள் எடுத்த டெஸ்ட் வீரர் என்ற உலகச் சாதனை புரிந்தார்.ஏற்கனவே ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் மெல்பர்ன் மைதானத்தில் எடுத்த 9 சதங்கள் தான் இதுநாள் வரை ஓரே மைதானத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச சதங்கள் என்ற சாதனையாக இருந்தது.ஜெயவர்தனே மூலம் பிராட்மேனின் இந்த சாதனை முறியடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.இலங்கை தன் முதல் இன்னிங்சில் தேநீர் இடைவேளையின் போது 3 விக்கெட் இழப்பிற்கு 587 ரன்கள் குவித்திருந்தது.இலங்கை உணவு இடைவேளைக்குப் பிறகு 31 ஓவர்களில் 130 ரன்களைக் குவித்துள்ளது.ஜெயவர்தனே 143 ரன்களுடனும், திலன் சமரவீரா 52 ரன்கள் எடுத்தும் விளளயாடி வருகின்றனர்.
சதமடித்த பந்து வீச்சாளர்கள்
இந்தியப் பந்து வீச்சாளார்களான மிதுன், ஓஜா, ஹர்பஜன் சிங் ,இஷாந்த் ஷர்மா ஆகியோர் தங்களது பந்து வீச்சில் சதம் கண்டனர்.
இந்நிலையில் இலங்கை அணியில் ஸ்கோர் 600 ரன்னை நோக்கி சென்றது. சதம் அடித்த ஜெயவர்த்தனே அதிரடியாக விளையாடினார். அவரும் இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 174 ரன்னில் ஹர்பஜன் பந்தில் ஆட்டமிழந்தார்.அவர் 42.4 ஓவர் வீசி 147 ரன்களை கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.ஹர்பஜன் சிங் இந்த தொடரில் பெறும் முதல் விக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து இலங்கை அணி ஸ்கோர் 4 விக்கெட் இழப்பிற்கு 642 ரன்னிற்கு தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இலங்கை அணியின் சமரவீரா 76 ரன்னுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.நேற்றைய ஆட்டத்தில் 18 ஓவர்கள் மீதமிருக்கையில் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்களாக சேவாக்கும்விஜய்யும் களமிறங்கினார்கள்.
சேவாக் அதிரடி
களமிறங்கியது முதலே சேவாக் அதிரடியாய் விளையாடினார்.அவருக்கு பக்க பலமாக விஜய்யும் ஆடினார்.அதிலும் துவக்க ஓவரை வீசிய டம்மீக்க பிரசாத்தின் ஓவரை விளாசித் தள்ளினார் சேவாக்.பிரசாத் வீசிய 3 ஓவர்களில் மொத்தம் 23 ரன்கள் எடுக்கப்பட்டது.டம்மிக்க பிரசாத்தின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளையும் பெர்ணாண்டோ ஓவரில் இரண்டு பவுண்டரிகளையும், முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் சுரஜ் ரந்திவ் பந்தில் இரண்டு பவுண்டரிகளையும், அஜந்தா மெண்டிஸ் பந்தில் இரண்டு பவுண்டரிகளையும் அவர் விளாசினார்.
இதில் மெண்டிஸ் வீசிய மிடில் ஸ்டம்ப் நோக்கி வந்த பந்தை பௌலருக்கும் மிட் ஆனுக்கும் இடையே செலுத்தி அடித்த பவுண்டரி நேற்றைய தினத்தின் சிறந்த ஷாட் என்று கூறலாம்.சிறப்பாக ஆடிய சேவாக் டெஸ்ட் போட்டியில் தனது 22வது அரை சதத்தினை எடுத்தார்.அவர் மொத்தம் 63 பந்துகளை சந்தித்து 64 ரன்களை எடுத்தார்.அதில்12 பவுண்டரிகளும் அடங்கும்.இதேபோல் விஜய்யும் தன் பங்கிற்கு22 ரன்களை எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் அடங்கும்.இந்திய அணி தனது முதல் இன்னிங்சின் பாலே ஆனை தவிற்க இன்னும் 348 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இன்று ஆடவுள்ளது.

பிபா கால்பந்து போட்டி நடுவராக இந்தியப் பெண்

கேரளா,ஜுலை.28
சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிபாவின் நடுவர் பயிற்சிக்கு கேரளத்தைச் சேர்ந்த பென்ட்லா டி கோத் இந்த பயிற்சிக்கு முதல் இந்தியப் பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நடுவர் பயிற்சி ஆகஸ்ட் 1 முதல் 6ம் தேதி வரை நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 27 ஆண்களும் 3 பெண்களும் பங்கேற்கின்றனர். சர்வதேச கால்பந்து சம்மேளனம் வழங்கும் நடுவர் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
பென்ட்லா டி கோத் முன்னாள் கால்பந்து வீராங்கனையாவார். இதுவரை ஒலிம்பிக் போட்டிகள், ஆசிய விளையாட்டு போட்டிகள், தென்கிழக்கு ஆசிய விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளின் கால்பந்து நடுவர் குழுவில் இடம்பெற்றுள்ளார் .

சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியா பின்னடைவு

லண்டன்,ஜுலை.28
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்ட்ரேலியா 11 என்று சமன் செய்ததால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஆஸ்ட்ரேலியா சமீபத்தில் முதன் முறையாக 4வது இடத்திற்குச் சரிந்துள்ளது.
லீட்ஸ் டெஸ்ட் தோல்வியானது கேப்டனாக ரிக்கி பாண்டிங் பொறுப்பேற்று பாகிஸ்தானுக்கு எதிராக வாங்கும் முதல் தோல்வியாகும்.இலங்கை அணி இந்தியாவை படுதோல்வியுறச் செய்ததன் மூலம் 3வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்ததால் இந்தத் தோல்வி ஏற்பட்டது . இதனால் வீரர்களின் தன்னம்பிக்கை பறிபோய்விட்டது என்று கூறுவதற்கிடமில்லை. இந்த வாரம் எங்களுக்குச் சாதகமாக அமையவில்லை என்று பாக்வுடனான தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளார் பாண்டிங்.
சர்வதேச தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ள அணிகளின் விவரம்
1.இந்தியா,2.தென்னாப்பிரிக்கா,3.இலங்கை,
4.ஆஸ்திரேலியா,5.இங்கிலாந்து,6.பாகிஸ்தான்,
7.நியுஸிலாந்து,8.வெஸ்ட் இண்டிஸ்,9.பங்களாதேஷ்

ஏ.டி.பி. தரவரிசை நடால் தொடர்ந்து முதலிடம்

லண்டன்,ஜுலை.28
ஏ.டி.பி. வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் விம்பிள்டன் சாம்பியன் ரஃபேல் நடால் 10,475 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.அவரை தொடர்ந்து செர்பியாவின் ஜோகோவிச் 6,905 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்திலுள்ளார்.
முதல் 10 இடங்கள் வருமாறு:
1.நடால் 10,475
2.ஜோகோவிச் 6,905
3.ரோஜர் ஃபெடரர் 6,795
4.ஆன்டி முர்ரே 5,155
5.ராபின் சோடர்லிங் 4,835
6.நிகோலே டேவிடென்கோ 4,285
7.யுவான் மார்டின் 4,270
8. டொமாஸ் பெர்டிச் 3,780
9. ஆன்டி ரோடிக் 3,490
10.பெர்ணான்டோ வெர்டாஸ்கோ 3,475

பயிற்சியாளராக நீடிக்க விருப்பம் மரடோனா


புனோஸ்,ஜுலை.28
உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினாவின் தோல்வியால் அந்த அணியின் பயிற்சியாளர் பதவியில் மரடோனா நீடிப்பாரா ? இல்லையா? என்று குழப்பம் நிலவி வந்த நிலையில் அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளராக தொடர எனக்கு விருப்பம்தான் என்று மரடோனா கூறியுள்ளார்.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இரண்டு முறை சாம்பியனான அர்ஜென்டினா இந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியின் கால்யிறுதியில் ஜெர்மனியிடம் 04 என்ற கோல் கணக்கில் மிகவும் மோசமாக தோற்றது.
இந்த தோல்வியால் பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோனா மாற்றப்படுவார் என்று கூறப்பட்டது.ஆனால் மரடோனாவை நீக்காமல் மேலும் 4 ஆண்டுகளுக்கு பயிற்சியாளராக நீடிப்பார் என்று கால்பந்து சங்கம் அறிவித்தது. அதோடு மட்டுமில்லாமல் அர்ஜென்டினா கால்பந்து சங்கம் இறுதி முடிவை மரடோனாவே எடுக்க வேண்டும் என்றும் கூறியது.
இந்நிலையில் பயிற்சியாளராக தொடருவது குறித்து கருத்து தெரிவித்த மரடோ னா:
அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளராக தொடர எனக்கு விருப்பம்தான்.ஆனால் தற்போது எனக்கு உதவியாளர்களாக இருப்பவர்களே தொடர்ந்து என்னுடன் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் நான் நிச்சயமாக பயிற்சியாளர் பதவியில் நீடிக்க விரும்பமாட்டேன் என்று கூறியுள்ளார். மரடோனாவின் உதவியாளராக இருக்கும் ஆஸ்கர் ரக்கெரி மீது அர்ஜென்டினா கால்பந்து சங்கத் தலைவர் ஹம்பர்டோ கிராடனோவுக்கு நல்ல அபிப்பராயம் இல்லை மற்றும் ரக்கெரியை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று மரடோ னாவை ஹம்பர்டோ நிர்பந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, July 27, 2010

தேசிய சப்ஜூனியர் நீச்சல் போட்டி: தமிழக வீரர் புதிய சாதனை!

சென்னை, ஜூலை 27
பெங்களூரில் நடந்த தேசிய சப்ஜூனியர் நீச்சல் போட்டியில் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட இளம் நீச்சல் வீரர் தனுஷ் 200 மீட்டர் தனிநபர் பிரிவில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
பிணி தீர்க்க
தனது ஐந்தாவது வயதில் ஏற்பட்ட நுரையீரல் ஒவ்வாமை நோய்க்காக நீச்சல் பயிற்சி மேற்கொண்ட தனுஷ் பின்னர் ஆர்வமாகி நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வந்தார். சமீபத்தில் பெங்களூரில் நடந்த தேசிய சப்ஜூனியர் நீச்சல் போட்டியில் தமிழகம் சார்பில் தனுஷ் பங்கேற்றார். அதில், தனிநபர் 200 மீட்டர் "மெட்லி' பிரிவில், தேசிய அளவில் புதிய சாதனையும், இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை தனுஷ் வென்றார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக நீச்சல் பயிற்சி மேற்கொண்டு வரும் தனுஷ், இதுவரை தேசிய அளவில் ஏழு, தென்மண்டல அளவில் நான்கு, மாநில அளவில் 52, மாவட்ட அளவில் 43 பதக்கங்கள் மற்றும் ஒன்பது சாம்பியன்ஷிப் பட்டங்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார்.
வெற்றி குறித்து தனுஷ் கூறும்போது, "தொடர்ந்து நீச்சல் பழகுவதால், சுறுசுறுப்பு, தன்னம்பிக்கை மற்றும் படிப்பிலும் அதிக ஆர்வம் ஏற்படுகிறது' என்றார்.

இந்திய அணி சிம்ம சொப்பனமாகத் திகழும்!

சிட்னி, ஜூலை 27
பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறது. அந்தப் பயணத்தின்போது ஆஸ்திரேலிய அணி 2 டெஸ்ட் போட்டி, 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுகிறது.
இந்தத் தொடர் குறித்து கருத்து கூறிய கேடிச், இந்தியாவுடனான டெஸ்ட் தொடருக்காக ஆஸி. அணியில் இடம் பெற்றுள்ள சில இளம் வீரர்களுக்கு இந்த தொடர் மிகவும் கடினமான ஒன்றாக அமையும். இந்தியாவில் இதற்கு முன் விளையாடாத சில இளம் வீரர்களுக்கு இந்த தொடர் ஒரு பெரிய சவால் என்றார்.



பாக்.குடனான டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

லண்டன், ஜூலை 27
ஆஸ்திரேலியாவுடனான தொடர் முடிவடைந்துள்ள நிலையில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துடன் 4 டெஸ்ட், இரண்டு 20 ஓவர் போட்டி, 5 ஒருநாள் போட்டி ஆகியவற்றில் விளையாடுகிறது.
இந்தப் போட்டிக்காக இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி வீரர்கள் விவரம்:
ஸ்ட்ராஸ் (கேப்டன்), அலிஸ்டர் கூக், காலிங்வுட், பீட்டர்சன், ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஸ்டீபன் பின், மார்கன், பிரையர், அஜ்மல் ஷாசாத், ஸ்வான், ஜோனதன் டிராட் ஆகியோர் அனியில் இடம் பெற்றுள்ளனர். முதல் டெஸ்ட் போட்டி வரும் 29ம் தேதி தொடங்குகிறது.

பிரான்ஸ் வீரர்கள் கூண்டோடு நீக்கம்!


பாரிஸ், ஜூலை 27
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இடம் பெற்றிருந்த 23 பிரான்ஸ் வீரர்ளையும் புதிய பயிற்சியாளர் லாரன்ட் பிளாங்க் அணியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார்.
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் பிரான்ஸ் அணி பல சர்ச்சைகளை சந்தித்தது.
1. பிரான்ஸ் அணியின் முன்னணி வீரரான நிகோலஸ் அனால்கா பயிற்சியாளர் ரேமாண்ட் டொமினிக்குடன் மோதலில் ஈடுபட்டார்.
2. தொடர்ந்து உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்ட அனால்கா பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
3. பயிற்சியாளர் ரேமாண்ட் டொமினிக்கை எதிர்த்து பிரான்ஸ் வீரர்கள் கேப்டன் பேட்ரிஸ் எவ்ரா தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு நாள் பயிற்சியில் ஈடுபடவும் மறுத்தனர்.
4. உலகக் கோப்பையில் இறுதியாக தென்னாப்பிரிக்காவுடன் நடந்த போட்டியில் பிரான்ஸ் கேப்டன் பேட்ரிஸ் எவ்ரா உள்பட பல முக்கிய வீரர்கள் கரையில் வைக்கப்பட்டனர். தென்னாப்பிரிக்காவிடம் 21 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் தோற்றது.
5. உலகக் கோப்பை போட்டியில் ஒரு வெற்றி கூட பெறாமல் பிரான்ஸ் அணி படுதோல்வி கண்டு நாடு திரும்பியது.
6. பயிற்சியாளர் ரேமாண்ட் டொமினிக் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக லாரன்ட் பிளாங்க் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
7. படுதோல்விக்குப் பொறுப்பேற்று பிரான்ஸ் கால்பந்து சங்கத் தலைவர் ஜீன் பியரா பதவி விலகினார். அவர் மீது பிரெஞ்சு நாடாளுமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதற்கு "பிபா' கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
8. கடந்த 1998ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்றிருந்த மார்ஷல் டிசெய்லி, லிலியன் துராம் ஆகியோர் உலகக் கோப்பையில் பிரான்ஸ் கேப்டனாகப் பணியாற்றிய பேட்ரிஸ் எவ்ராவுக்கு வாழ்நாள் தடை விதிக்கக் கோரிக்கை விடுத்தனர்.
9. உலகக் கோப்பை படுதோல்வி குறித்து தன்னிடம் நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிரான்ஸ் கேப்டன் தியேரி ஹென்றிக்கு பிரான்ஸ் அதிபர் சர்கோசி உத்தரவிட்டார்.
10. உலகக் கோப்பை தோல்விக்குக் காரணமாக இருநத அத்தனை பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரான்ஸ் அதிபர் சர்கோசி அறிவித்தார்.
இப்படி பல சர்ச்சைகளை உருவாக்கிய பிரான்ஸ் வீரர்கள் அத்தனை பேரும் கூண்டோடு அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். வரும் ஆகஸ்ட் 11ம் தேதி ஆஸ்லோ நகரில் நார்வே அணியுடன் பிரான்ஸ் ஒரு நட்பு ஆட்டத்தில் மோதுகிறது. இந்தப் போட்டியில் உலக கோப்பை போட்டியில் இடம் பெற்ற 23 பிரான்ஸ் வீரர்களும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்குப் பதிலாக முற்றிலும் புதிய 23 வீரர்கள் அணியில் இடம் பெற உள்ளனர். புதிய வீரர்களை பிரான்ஸ் பயிற்சியாளர் லாரண்ட் பிளாங்க் ஆகஸ்ட் 5ம் தேதி பிரான்ஸ் கால்பந்து சங்க நிர்வாகிகள் முன்னிலையில் அறிவிக்கிறார்.

பிரேசில் புதிய பயிற்சியாளர் மானோ மெனசஸ்!


பிரசில்லா, ஜூலை 27
பிரேசில் அணியின் புதிய பயிற்சியாளராக மானோ மெனசஸ் நியமிக்கப்பட்டுள்ளார். உலகக் கோப்பை முடிந்ததும் பிரேசில் பயிற்சியாளர் துங்கா பதவியில் இருந்து விலகினார். அதைத் தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன் பிளமினெஸ் அணியின் முசிரி ரமால்கா பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2012ம் ஆண்டு வரை ரமால்காவுக்கும் பிளமினெஸ் அணியுடன் ஒப்பந்தம் உள்ளது. ஒப்பந்தம் முடியும் முன் அவரை விடுவிக்க இயலாது என்று பிளமினெஸ் கூறிவிட்டது. இதையடுத்து அவர் பயிற்சியாளராக பொறுப்பேற்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில் பிரேசில் அணியின் புதிய பயிற்சியாளராக, கொரிந்தியன்ஸ் அணியின் தற்போதைய பயிற்சியாளரான மானோ மெனசஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என்று பிரேசில் கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது.ஆகஸ்ட் 10ந் தேதி நியூஜெர்சியில் பிரேசில் ஒரு கண்காட்சி போட்டியில் அமெரிக்காவுடன் மோதுகிறது. இந்தப் போட்டிக்கு பயிற்சியாளராக மெனசஸ் பணியாற்ற உள்ளார்.


இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டை விற்ற இந்திய கால்பந்து நிர்வாகிகள்!

புதுடெல்லி, ஜூலை 27
இந்திய கால்பந்து சங்கத்திற்காக ஒதுக்கப்பட்ட உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்துக்கான டிக்கெட்டை அதிக விலைக்கு வெளிநாட்டவருக்கு விற்றதாக இந்திய கால்பந்து சங்க நிர்வாகிகள் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மோகன் பகான் அணியின் செயலாளர் அஞ்சன் மித்ரா கூறியதாவது:
தென்னாப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பை இறுதி ஆட்டத்துக்காக 17,18,19,20 நம்பர் டிக்கெட்கள் எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. இந்த டிக்கெட்களின் விலை $400. நான் 18வது எண் இருக்கையில் இருந்தேன். 20வது எண் இருக்கையில் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் துணைத் தலைவர் அங்குர் தத்தா இருந்தார்.
மற்ற இரு இருக்கைகளில் இரண்டு தென்னாப்பிரிக்கர்கள் அமர்ந்து போட்டியைப் பார்த்தனர். நான் அவர்களுடைய டிக்கெட்களை வாங்கிப் பார்த்தேன். அது எங்களுக்கு வழங்கப்பட்ட டிக்கெட்கள்தான். எங்களுக்கு இது வியப்பாக இருந்தது.ஆனால் கொஞ்சம் தாமதமாக உண்மை புரிந்தது.
தங்களுக்கு வழங்கப்பட்ட டிக்கெட்டுகளை இந்திய கால்பந்து சம்மேளன நிர்வாகிகள் வெளிநாட்டவர்களுக்கு அதிக விலைக்கு விற்றுள்ளனர் என்பதும் தெரிய வந்தது. இந்த பிரச்னையை நாங்கள் சும்மா விடப்போவது இல்லை. ஆசிய கால்பந்து சம்மேளனத்திற்கும் "பிபா'வுக்கும் கடிதம் வாயிலாக புகார் தெரிவிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த இரண்டு டிக்கெட்களும் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் மற்றொரு துணைத் தலைவர் சுப்ரதா தத்தா, பொருளாளர் ஹர்தேவ் ஜடேஜாவுக்கும் வழங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.


சோயிப் மாலிக்கை நீக்க பாக். கிரிக்கெட் சங்கம் ஆலோசனை!

கராச்சி, ஜூலை27
லண்டனில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடருக்காக தேர்வு செய்யப்பட்ட பாக். வீரர் சோயிப் மாலிக் சரியாக விளையாடாததால் அணியிலிருந்து நீக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்த பாகிஸ்தான் அணி விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியடைந்து வெளியேறியது. அந்தப் போட்டிகளின்போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் சர்வதேசப் போட்டிகளில் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. பின்னர் தடை நீக்கப்பட்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்காக தேர்வு செய்யப்பட்டார்.
ஆஸ்திரேலியாவுடன் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டி, இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சோயிப் மாலிக் ஆட்டம் எடுபடவில்லை. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் சோயிப் மாலிக் 26 ரன்களும், 2வது இன்னிங்சில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும் கூட சோயிப் மாலிக் சரியாக ஆடாததால் அவர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் ஆலோசித்து வருகிறது. இதேபோல சகோதரர்களான உமர் அக்மல், கமரன் அக்மல் ஆகியோரும் சரியாக ஆடவில்லை. எனவே இவர்கள் 3 பேருமே அடுத்து வரும் போட்டிகளில் நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவுடன் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்ற பாக். வீரர் சோயிப் மாலிக் பயிற்சியில் ஈடுபடாமல் தனது மனைவி சானியா மிர்சாவுடன் ஊர் சுற்றியதால் அணியிலிருந்து நீக்கப்படலாம் என்று ஏற்கெனவே தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று இரண்டாவது டெஸ்ட் வெற்றி பெறுமா இந்திய அணி?

கொழும்பு,ஜுலை26
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி இலங்கை அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில், நடந்து முடிந்த முதல் டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்து 10 என்ற கணக்கில் பின் தங்கியுள்ளது இந்திய அணி.
இந்நிலையில், இந்தியாஇலங்கை அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று தொடங்குகிறது.முதல் டெஸ்டில் மோசமாக தோற்றதால் 2வது டெஸ்டில் பதிலடி கொடுக்க வேண்டிய நிலைமை இந்தியாவுக்கு உள்ளது. அதோடு தொடரை சமன் செய்ய வெற்றி பெற வேண்டிய கட்டாயமும் உள்ளது. இலங்கை அணியின் உலக சாதனையாளர் முத்தையா முரளிதரன் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதை அடுத்து, அந்த அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளரான மலிங்காவும் காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால் அடுத்து வரும் 2வது மற்றும் 3வது டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
முரளிதரனுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மெண்டிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்ட்டில் உலகின் தலைசிறந்த பேட்டிங் வரிசையை கொண்ட இந்திய அணி ""பாலோஆன்'' ஆகி தோற்றது வருத்தத்திற்குரியது.
ஷேவாக் ஒருவர் மட்டுமே சிறப்பாக ஆடி சதம் அடித்தார். 2வது இன்னிங்சில் தெண்டுல்கர், லட்சுமண் போராடினார்கள்.
ஜாகீர்கான், ஸ்ரீசந்த் இல்லாததால் இந்திய அணி பந்து வீச்சில் பலவீனமாக காணப்படுகிறது. இதேபோல முன்னணி சுழற்பந்து வீரரான ஹர்பஜன்சிங் பந்துவீச்சும் எடுபடவில்லை.
பந்துவீச்சை சரிகட்ட பேட்ஸ்மேன் சிறப்பாக விளையாட வேண்டிய நெருக்கடியிலுள்ளது இந்திய அணி.
இலங்கை அணியின் துணை கேப்டனாக இருந்த முரளிதரன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதால், அணியின் முன்னணி பேட்ஸ்மேன் மஹேளா ஜெயவர்த்தனே துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
34வது முறை...
இரு அணிகளும் இன்று மோதுவது 34வது டெஸ்ட் போட்டியாகும். இதுவரை நடந்த 33 டெஸ்டில் இந்தியா 12 போட்டியிலும், இலங்கை 6 போட்டியிலும் வெற்றி பெற்றன. 14 டெஸ்ட் ""டிரா'' ஆகியுள்ளது.
இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்கும் இந்தப்போட்டி டென்ஸ் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்தியா அணி விவரம் : டோனி (கேப்டன்), ஷேவாக், காம்பீர், டிராவிட், தெண்டுல்கர், வி.வி.எஸ்.லட்சுமண், யுவராஜ்சிங், ஹர்பஜன்சிங், இஷாந்த்சர்மா, அபிமன்யூ மிதுன், ஒஜா, சுரேஷ் ரெய்னா, அமித் மிஸ்ரா, முரளிவிஜய், முனாப்பட்டேல்.
இலங்கை அணி விவரம்: சங்ககரா (கேப்டன்) தில்சான், பரண விதனா, ஜெயவர்த்தனே, மேத்யூஸ், சமரவீரா, பிரசன்னா ஜெயவர்த்தனே, மெண்டீஸ், பெர்னாண்டோ, வெலுகேந்திரா, ஹெராத், கண்டாம்பி, தமிகா பிரசாத், ரந்தீவ் திரிபானே நுவன் பிரதீப்.

Friday, July 23, 2010

விருதுக்கான வீரர்களை தேர்வு செய்ய குழு அமைப்பு

புது தில்லி, ஜூலை.24
விளையாட்டு துறையிலுள்ள வீரர்வீராங்கனைகளைக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகளை தேர்வு செய்வதற்காக மத்திய அரசு குழு அமைத்துள்ளது.

ராஜீவ் காந்தி கேல் ரத்னா
இந்திய விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தோருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் உயரிய விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா.இவ்விருது அனைத்து விளையாட்டுத் துறைகளுக்கும் பொதுவான சீரிய விருதாக மிகச்சிறந்த சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.விருதுடன் ரூ.7.5 லட்சம் ரொக்கப் பரிசு, பாராட்டுப் பத்திரம், பதக்கம் வழங்கப்படும்.
அர்ஜுனா விருது
தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் வழங்கப்படும் விருது அர்ஜுனா விருது. பெறுபவர்களுக்கு ஒரு நினைவுச் சிலை, பாராட்டு பத்திரம், ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது.

தேசிய கேல் புரோத்சஹான்

சமுதாய விளையாட்டு மேம்பாடு, சிறந்த விளையாட்டு அகாடமி மேம்பாடு, சிறந்த வீரர்களுக்கு உதவி, விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குதல் ஆகிய 4 பிரிவுகளில் குறிப்பிடத்தக்க சாதனைகள் செய்பவர்களுக்கு கடந்த ஆண்டு முதல் தேசிய கேல் புரோத்சஹான் விருது வழங்கப்படுகிறது. இதை பெறுபவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், சுழற்கோப்பை வழங்கப்படும். மேற்கூறிய இந்த விருதுக்கான வீரர்களை தேர்வு குழு ஒன்றை அமைத்துள்ளது மத்திய அரசு. ஓட்டப்பந்தய முன்னாள் வீராங்கனை பி டி உஷாவை தலைவராகக் கொண்ட இக்குழுவில், டென்னிஸ் வீரர் லியான்டர் பயஸ், பளுதூக்கும் வீராங்களை மல்லேஸ்வரி உட்பட மொத்தம் 17 பேர் இடம் பெற்றுள்ளனர்.

துரோணாச்சாரியா விருது
சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கியவர்களுக்கு(பயிற்சியாளர்) ஆண்டுதோறும் துரோணாச்சாரியா விருது வழங்கப்படுகிறது. விருதுடன் பாராட்டு பத்திரம், ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும்.
இந்த விருதுக்கான வீரர்களை தேர்வு செய்ய ஹாக்கி வீரர் அசோக் குமார் தலைமையில் 17 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது மத்திய அரசு.

தென்கொரியாவில் பிபா அதிகாரிகள் ஆய்வு

சியோல்,ஜுலை.24
உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்த வாய்ப்பு கேட்டு காத்திருக்கும் தென்கொரியாவில் 'பிபா' அதிகாரிகள் ஆய்வு பணியை தொடங்கியுள்ளனர்.
2022ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்த தென்கொரியா வாய்ப்பு கேட்டுள்ளது. உலக கோப்பையை தென்கொரியாவில் நடத்துவதற்கான சாத்திய கூறுகளை ஆராய்வதற்காக சிலி கால்பந்து சங்கத் தலைவர் ஹெரால்ட் மெயினி நிகோல்ஸ் தலைமையில் 'பிபா' அதிகாரிகள் சியோல் சென்றடைந்தனர்.அங்கு தங்கி 4 நாட்கள் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
கடந்த 2002ம் ஆண்டு உலக கோப்பை போட்டியை தென்கொரியா ஜப்பானுடன் இணைந்து நடத்திய இந்த முறை தனியாக போட்டியை நடத்த தென்கொரியா விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வில் சியோல் மற்றும் பூசான் நகரில் உள்ள ஸ்டேடியங்களையும் 'பிபா' அதிகாரிகள் பார்வையிடுகின்றனர்.
முன்னதாக ஜப்பானில் ஆய்வு நடத்திய 'பிபா' அதிகாரிகள் ஜப்பான் உலக கோப்பை நடத்துவற்கு தகுதியான நாடு என்று சான்றிதழ் அளித்துள்ளனர். 2022ம் ஆண்டு உலக கோப்பை போட்டியை நடத்த கத்தார், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் வாய்ப்பு கேட்டுள்ளன.
இதற்கிடையே ஸ்பெயின் கால்பந்து சங்கத்தின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஸ்பெயின் விளையாட்டுத்துறை செயலாளர் ஜேமி லெவார்ட்ஸ்கி கலந்து கொண்டு பேசியதாவது:
கடந்த 2002ம் ஆண்டு உலக கோப்பை போட்டியை தென்கொரியாவும் ஜப்பானும் சேர்ந்து நடத்தியது போல் 2018ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியை ஸ்பெயின் போர்ச்சுகல் நாட்டுடன் இணைந்து நடத்த எல்லாவிதமான முயற்சிகளையும் எடுக்கும். இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளும் இந்த போட்டியை நடத்த தீவிர முயற்சி செய்து வருகின்றன. அதுபோல் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் நாடுகளும் இணைந்து 2018ம் ஆண்டு உலக கோப்பை போட்டியை நடத்த களத்தில் உள்ளன. 2018ம் ஆண்டு போட்டியை நடத்த வாய்ப்பு கிடைக்காவிட்டால் 2022ம் ஆண்டு உலக கோப்பை போட்டியை நடத்தவும் ஸ்பெயினுக்கு வாய்ப்பு கேட்கப்படும்'' என்றார்.

சாதனை தமிழன் முத்தையா முரளிதரன்


சென்னை,ஜுலை.23
உலக கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை இலங்கை அணியின் முத்தையா முரளிதரன் பெற்றார்.
இந்தியாவிற்கு எதிராக இலங்கை காலே நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்த உலக சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். தமிழ்நாட்டின் மருமகனான முத்தையா முரளிதரன் இலங்கை அணி சார்பாக 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்த இமாலயச் சாதனையை புரிந்துள்ளார்.

முரளிதரன் அறிமுகம்

இலங்கை டெஸ்ட் அணிக்காக 1992 ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொழும்பு பிரேமதாச அரங்கில் விளையாடினார். தனது முதல் ஒருநாள் போட்டியை ஆகஸ்டு 12, 1993ம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக கொழும்பு பிரேமதாச அரங்கில் விளையாடினார்.

சாதனை

கிரிக்கெட் உலகின் பைபிள் என வர்ணிக்கப்படும் விஸ்டன் பத்திரிகை உலகின் தலைசிறந்த வீரராக முரளிதரனைத் தேர்வு செய்துள்ளது. இந்த விருது வழங்கும் முறை உருவாக்கப்பட்டு நான்காவது வீரராக முரளிதரன் விஸ்டன் பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டார். 1992ம் விளையாடத் தொடங்கியதிலிருந்து இதுவரை டெஸ்ட் மேட்சில் 800 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 500க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.1999ம் ஆண்டு சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதான விஸ்டன் விருதை பெற்றார் முரளிதரன்.
ஜிம் லேக்கர் (இங்கிலாந்து) மற்றும் முரளிதரன் ஆகிய இருவர் மட்டுமே டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இருமுறைப் பெற்றுள்ளனர்.
டெஸ்ட் போட்டிவிளையாடும் சர்வதேச நாடுகள் அனைத்திற்கும் எதிராக 50 விக்கெட்டுகளை பெற்ற ஒரே வீரர் முரளிதரன்.
டெஸ்ட் போட்டியில் அனைத்து நாடுகளுக்கும் எதிராக 10 இலக்குகளைப் பெற்ற ஒரே வீரர்.
நான்கு அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் 10 இலக்குகளைப் பெற்ற ஒரே வீரர் முரளி .
டெஸ்ட் போட்டியில் அதிகமான நேரடி விக்கெட்டுகளை வீழ்த்தியவர் முரளிதரன்.டெஸ்ட் போட்டியில் 68 முறை 5விக்கெட்டுகளையும், 10 விக்கெட்டுகளை 22 முறையும் கைப்பற்றியுள்ளார்.இதில் 5விக்கெட்டுகளை பங்களாதேஷ், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக தலா 11 முறை கைப்பற்றியுள்ளார். 10 விக்கெட்டுகளை பங்களாதேஷ், தென்னாப்பிரிக்கா ,இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக தலா 4 முறை கைப்பற்றியுள்ளார்.டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த குட்னி வால்ஸின் சாதனை 2004 ம் ஆண்டு முறியடித்தார் முரளி.இதன் பிறகு டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் சாதனையை முரளிவார்னும் அடிக்கடி பகிர்ந்த வண்ணம் இருந்தனர்.பிறகு 2007ம் ஆண்டு கண்டியில் நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் காலிங்வுட் விக்கெட்டை வீழ்த்தி டெஸ்ட் போட்டியில் ஷேன் வார்ன் எடுத்திருந்த 709 விக்கெட் என்ற சாதனை முறியடித்தார்.அதன் பிறகு இதுவரை டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற பெருமையை தக்கவைத்துள்ளார்.இலங்கை காலே நகரில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.இந்த போட்டியுடன் ஒய்வு பெறுவதாக அறிவித்த நிலையில் உலக சாதனையை நிகழ்த்திவிட்டு செல்வது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக சாதனை படைத்த முத்தையா முரளிதரனுக்கு அனைவரும் எழுந்து நின்று தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். முரளிதரனின் சாதனையை அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் ஆரவாரத்துடன் ரசித்தனர்.

டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வாங்குகிறது அடானி குழுமம்

மும்பை,ஜுலை.24
ஹைதராபாத் ஐபிஎல் டெக்கான் சார்ஜர்ஸ் அணியைகுஜராத்தைச் சேர்ந்த அடானி குழுமம், வாங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
2009ம் ஆண்டு ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற அணி டெக்கான் சார்ஜர்ஸ். இந்த அணியை தற்போது அடானி குழுமம் வாங்கவுள்ளது.இதற்காக 280 முதல் 300 மில்லியன் டாலர் வரை விலை பேசப்பட்டு வருவதாக தெரிகிறது.
இந்த பேரம் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
தற்போது டெக்கான் சார்ஜர்ஸ் அணியை டெக்கான் குரானிக்கிள் ஹோல்டிங்ஸ் நிறுவனம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மான்செஸ்டருக்கு எதிராக இந்திய கால்பந்து வீரர்

லண்டன்,ஜூலை.24
இங்கிலாந்து கால்பந்து சாம்பியன் அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணியை கன்சாஸ் சிட்டி விசார்ட்ஸ் அணி நாளை எதிர்கொள்கிறது. இதில் கன்சாஸ் சிட்டி அணியில் இந்திய கால்பந்து வீரர் சுனில் சேட்ரி விளையாடுகிறார்.ஆனால் மான்செஸ்டர் அணியின் நட்சத்திர இங்கிலாந்து வீரர் வெய்ன் ரூனி இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை.
இந்த போட்டியில் விளையாடுவதன் மூலம் சுனில் சேட்ரி பிரபல கால்பந்து வீரர்களான ரியான் கிக்ஸ், பால் ஷூல்ஸ், பெர்படாவ் ஆகியவர்களை எதிர் கொள்கிறார்.
இந்திய வீரர் ஒருவருக்கு உலகத்தின் சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது இந்திய கால்பந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

அர்ஜென்டின பயிற்சியாளர் பதவி அடுத்த வாரம் முடிவு மாரடோனா

புனோஸ்,ஜுலை.23
அர்ஜென்டினா கால்பந்து அணியின் பயிற்சியாளராக நீடிப்பது குறித்து அடுத்த வாரம் முடிவு செய்யவுள்ளதாக மாரடோனா தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 19வது உலகக்கோப்பை கால்பந்தாட்டத்தின் காலி றுதி போட்டியில் ஜெர்மனி அணியிடம் 40 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி தோல்வி யடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. மோசமான தோல்வியின் காரணமாக அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகப்போவதாக மாரடோனா கூறியிருந்தார். ஆனால் அர்ஜென்டினா அதிபர் மற்றும் அணி நிர்வாகிகள் 2014ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் அடுத்த உலகக்கோப்பை வரை மாரடோனா பயிற்சியாளராக தொடர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தனர். இதுபற்றி ஆலோசனை செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அடுத்த வாரம் இப்பதவி குறித்து இறுதி முடிவு எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்

அமெரிக்க ஓபன் டென்னிஸில் செரீனா விளையாடுவார்ரிக் மேக்கி


நியுயார்க்,ஜுலை.24
அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்து வரும் 3 டென்னிஸ் தொடர்களிலில் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் அவரது பயிற்சியாளர் அமெரிக்க ஓபன் டென்னிஸில் செரீனா விளையாடுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓட்டல் ஒன்றுக்கு சென்ற போது,அங்கிருந்த கண்ணாடி டம்ளர் ஒன்று உடைந்து செரீனாவின் வலது காலில் குத்தி காயத்தை ஏற்படுத்தியது. இதற்கு உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொண்டார். இதனால் இஸ்தான்புல், சின்சினாட்டி, மான்ட்ரியல் ஆகிய மூன்று தொடர்களிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இது குறித்து கருத்து கூறிய செரீனாவின் செய்தித் தொடர்பாளர் : ஆகஸ்டு 30ந்தேதி தொடங்கும் அமெரிக்க ஓபன் போட்டிக்கு களம் திரும்ப செரீனா திட்டமிட்டுள்ளார். காயம் காரணமாக சிகிச்சை எடுத்து வரும் அவர் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில் விளையாடுவார்.செரீனா விரைவாக குணம் அடைந்து வருகிறார். அவரால் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

இந்தியாவில் சாம்பியன் கோப்பை ஹாக்கி


டெல்லி,ஜுலை.24
வருகிற 2011ம் ஆண்டு ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கிப் போட்டிஇந்தியாவில் நடைபெறுகிறது.இதற்கான அனுமதியை சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு இந்தியாவிற்கு வழங்கியுள்ளது.சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஆண்டு தோரும், சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி நடத்தப்படும். இதில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும். இந்த ஆண்டுக்கான ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 31ம் தேதி ஜெர்மனியில் துவங்குகிறது. எட்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி, ஒரு முறைகூட சாம்பியன்ஸ் டிராபி பட்டம் வென்றதில்லை. 2011ம் ஆண்டு சொந்த மண்ணில் இந்தியா களமிறங்குவதால், சாதிக்க வாய்ப்பு <அதிகமாகவுள்ளது. இதுவரை இந்திய அணி இத்தொடரில் ஒரு முறை 3வது இடமும், ஐந்து முறை 4வது இடம் பிடித்தது. ஆஸ்திரேலியா 10, ஜெர்மனி 9 முறை சாம்பியன் கோப்பை வென்றுள்ளன.
ஏற்கனவே சென்னையில் 1996, 2005ஆம் ஆண்டுகளில் சாம்பியன் கோப்பை ஹாக்கிப்போட்டித் தொடர் நடைபெற்றுள்ளது.

Thursday, July 22, 2010

இந்திய ஹாக்கி வீராங்கனை குற்றச்சாட்டு பயிற்சியாளர் விலகல்

டெல்லி,ஜுலை.22
இந்திய மகளிர் ஹாக்கி அணியைச் சேர்ந்த ரஞ்சிதா தேவி அணியின் பயிற்சியாளர்,வீடியோகிராபர் ஆகியோர் தனக்கு செக்ஸ் ரீதியாக தொல்லை கொடுத்து வருவதாக குற்றம்சாட்டினார்.இதனை தொடர்ந்து தன்மீது பாலியல் புகார் எழுந்துள்ளதால் இந்திய அணியின் பயிற்சியாளர் வரும் தொடர்களில் பங்கேற்கப்போவதில்லை என்று தற்காலிகமாக விலகியுள்ளார். ஆனால் வீடியோகிராபர் பசவராஜ் அழகி ஒருவருடன் இருந்த புகைப்படம் வெளியானதால் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
ரஞ்சிதா தேவி வீடியோகிராபர் மீது கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்த 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்தக் குழு பயிற்சியாளர் கௌஷிக், வீடியோகிராபர் பசவராஜ் ஆகியோரை தனித்தனியாக விசாரிக்க முடிவுசெய்துள்ளது. இந்த சம்பவம் இந்திய ஹாக்கி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஞ்சிதா தேவி காமன்வெல்த் ஹாக்கி அணிக்கான உத்தேச வீராங்கனைகள் பட்டியலில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.தன் மீதான குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்த பயிற்சியாளர் கௌஷிக்:தன் பெயரை இந்தக் களங்கத்திலிருந்து விடுவித்து கொண்ட பிறகே அடுத்த தொடர்களில் பயிற்சியாளராகத் தொடர்வேன் என்று கூறியுள்ளார்.

உலகக்கோப்பை கால்பந்து சூதாட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்தது இன்டர்போல்


ஹாங்காங்,ஜுலை.22
உலக்கோப்பை கால்பந்துப் போட்டியில் நடைபெற்ற சூதாட்டம் தொடர்பாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை இன்டர்போல் போலீஸார் கைது செய்துள்ளனர்.
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியின் ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றி பெறும் அணிகள் குறித்து மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, சீனா மற்றும் ஹாங்காங்கில் சூதாட்டம் நடைபெற்றது. சட்டவிரோதமாக 800 இடங்களில் நடைபெற்ற இந்த சூதாட்டம் தொடர்பாக தீவிர தேடுதல் வேட்டை நடத்திய இன்டர்போல் போலீஸார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கைது செய்து அவர்களிடமிருந்து கார், கம்ப்யூட்டர், செல்போன்கள் ஆகியவற்றை கைபற்றியுள்ளனர்.இந்த சூதாட்டத்தில் பந்தயமாக கட்டப்பட்ட 1கோடி அமெரிக்க டாலரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சூதாட்டம் மூலமாக சமூக விரோதிகள் சுமார் 16 கோடி அமெரிக்க டாலருக்கு மேலாக சம்பாதித்தாகவும் தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சீனா, தாய்வானை சேர்ந்தவர்கள்.இந்த சூதாட்டதாரிகள் அவர்களின் போட்டியில் முடிவில் எந்தவொரு கால்பந்து ஆட்டத்திலாவது செல்வாக்கைச் செலுத்தினார்களா என்பது குறித்து இதுவரை எதுவும் தெரியவில்லை.
ஆட்டங்களின் முடிவுகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டனவா அல்லது எந்தவொரு ஆட்டக்காரர் மீதாவது செல்வாக்கு செலுத்தப்பட்டதா என்பது குறித்து இப்போது எதுவும் பேச முடியாது என்று இண்டர்போல் கூறுகிறது.ஆனால், தமது விசாரணைகளில் இது குறித்தும் விசாரிக்கப்படும் என்றும் கூறுகிறார்கள்.இந்த நடவடிக்கைக்கு சோகா 3 என்று பெயரிட்டுள்ளனர் இண்டர்போல் அதிகாரிகள்.

எழுச்சி பெறும் இந்தியா ஹாக்கி அணி


டெல்லி,ஜுலை.22

ஐரோப்பியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆண்கள் இந்திய ஹாக்கி அணி சமிபகாலமாக எழுச்சிபெற்றுவருகிறது.ஒலிம்பிக்போட்டிகளில் தொடர்ந்து 6 முறை தங்கம் வென்ற ஒரே அணி இந்திய அணி.1928ம் ஆண்டிலிருந்து 1956 ம் ஆண்டு வரை ஒலிம்பிக்போட்டிகளில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த இந்திய அணி அதன் பிறகு சரிவை நோக்கி சென்றது.இதற்கு ஆதரமாக 2008ம் ஆண்டு பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக்போட்டிக்கு சுற்று போட்டிக்கு கூட தகுதி பெறமுடியாமல் போனது இந்திய அணியால்.அதோடு மட்டுமில்லாமல் இந்த வருடம் இந்தியாவில் நடந்த உலக கோப்பை ஹாக்கி போட்டியில் பாக் அணியுடன் வெற்றி,தென்னாப்பிரிக்கா அணியுடன் டிரா செய்து மற்ற அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறியது.
இந்நிலையில் மீண்டும் வெற்றிபாதைக்கு திரும்பியுள்ளது இந்திய அணி.இதற்கு சான்றாக இந்த வருடம் மே மாதம் மலேசியாவில் நடந்த சுல்தான் கோப்பை போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி.இதேபோல் கடந்த வாரம் பெல்ஜியத்தில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி பெல்ஜியம் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 20 என்ற கணக்கில் கைப்பற்றியது .
அதனைத் தொடர்ந்து பிரான்ஸ் சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஹாக்கி டெஸ்ட் தொடரில் பங்கேற்று 20 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.பிரான்ஸýடனான தொடர் முடிந்த பிறகு இந்திய அணி ஹாலந்து செல்லவுள்ளது.அங்கும் வெற்றி கொடியை நாட்டுமா என்று இந்திய ஹாக்கி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

பெங்களூர் ஸ்டேடியத்தில் கும்ளேவின் செல்போன் மாயம்

பெங்களூரு,ஜுலை.22
பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ளேயின் செல்போன், கிரெடிட் கார்டு, பணம் ஆகியவை பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் திருடுபோனது.
அனில் கும்பிளே பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் உள்ளூர் அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டுவிட்டு திரும்பிய போது அவர் கொண்டு வந்த சூபேக் திடீரென மாயமாகி விட்டது. அதில் விலை உயர்ந்த செல்போன், 4 கிரெடிட் கார்டு, ஒரு டெபிட் கார்டு, மூன்று கிளப் கார்டு, இரண்டு ஏர்வேஸ் கார்டு மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை இருந்தன.
அதே சமயம் மற்ற வீரர்களின் பைகள் அங்கேயே இருந்தன.
இது குறித்து கும்பிளே பெங்களூர் போலீசில் புகார் செய்தார். அவரது விலை உயர்ந்த பொருட்களை திருடியது யார்? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேப்டன் பதவியிலிருந்து அப்ரிடியை நீக்க பாக்.வாரியம் முடிவு !


லண்டன், ஜூலை. 22
ஆஸ்திரேவியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு ஓய்வு பெறுவதாக அறிவித்த அப்ரிடியை 20 ஓவர் போட்டி, ஒரு நாள் போட்டிகேப்டன் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் 150 ரன்னில் தோல்வியை சந்தித்தது பாகிஸ்தான் அணி .இதனால் விரக்தியடைந்த அப்ரிடி ஆஸ்திரேலியா தொடர் முடிவடைந்ததும் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
அப்ரிடியின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் இம்ரான் கான், அமீர் சோகைல், ரமீஸ்ராஜா ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இக்கட்டான நிலையில் ஓய்வு பெற்று பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு நெருக்கடி கொடுத்தால் அப்ரிடிமீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிருப்தி அடைந்துள்ளது. டெஸ்ட் போட்டியில் திறமையை நிரூபிக்காத அவரால் 20 ஓவர் போட்டி, ஒரு நாள் போட்டியில் எப்படி கேப்டனாக பணியாற்ற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனால் அப்ரிடி கேப்டன் பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.இதற்கிடையே காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டெஸ்டில் அப்ரிடி விளையாடமுடியாமல் நாடு திரும்பியுள்ளார். அவரைதொடர்ந்து பாக்.அணியின் டெஸ்ட் கேப்டனாக சல்மான்பட்நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒழுங்கு நடவடிக்கை குழுவை மாற்றி அமைக்கவேண்டும் மோடி


மும்பை, ஜூலை. 22

ஐ.பி.எல்லில் நடந்த முறைகேட்டினை விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை குழுவில் மாற்றம் வேண்டும் என்று முன்னாள் ஐ.பி.எல். அமைப்பின் தலைவர் லலித்மோடி கேட்டுகொண்டுள்ளார்.மோடி ஐ.பி.எல் அமைப்பின் நிதி பரிவர்த்தனை மற்றும் இ மெயில் பரிவர்த்தனைகள்,ஏல ஆவணங்கள், அணி நிர்வாகங்களின் ஒப்பந்தங்கள், மீடியா உரிமைகள், ஸ்பான்சர்கள் என அனைத்து துறைகளிலும் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டு ஐ.பி.எல் அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து மோடி சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்த புகாரின் மீது விசாரணை நடத்த ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் ஐ.பி.எல். இடைக்கால சேர்மன் அமீன், அருண்ஜேட்லி, மத்திய மந்திரி ஜோதிரத்யா சிந்தியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.ஒழுங்கு நடவடிக்கை குழுவின் கூட்டம் வருகிற 27ந்தேதி டெல்லியில் நடக்கவுள்ள நிலையில் குழுவை மாற்றி அமைக்க வேண்டும் என்று லலித்மோடி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இந்த குழுவில் மத்திய மந்திரி ஜோதிரத்யா சிந்தியா இடம் பெறக்கூடாது என்று அவர் கேட்டுகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு தடை விதிக்க கோரி லலித்மோடி தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சதர்ன் சமிதி கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர்

கல்கத்தா, ஜுலை.21

கல்கத்தாவின் சதர்ன் சமிதி என்ற கால்பந்து அணிக்கு இந்திய கால்பந்து அணியின் முன்னாள்வீரர் ஐ.எம்.விஜயன் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார்.
கேரள மாநிலத்தில் பிறந்த ஐ.எம்.விஜயன் இந்திய கால்பந்தின் அடையாளங்களில் ஒருவர். உலகிலேயே அதி விரைவில் கோல் அடித்தவர் இவர்தான் . கடந்த 1999ம் ஆண்டு நடந்த தெற்காசிய போட்டியில் பூடான் அணிக்கு எதிராக ஆட்டம் துவங்கிய 12வது வினாடியில் கோல் அடித்து விஜயன் செய்த சாதனையை இன்றுவரை யாரும் முறியடிக்கவில்லை. கடந்த 2003ம் ஆண்டு சர்வதேச கால்பந்தில் இருந்து விஜயன் ஓய்வு பெற்றார்.சமீபத்தில்தான் ஆசிய கால்பந்து சம்மேளனத்திடம் இருந்து பயிற்சியாளராக பணியாற்ற லைசென்ஸ் பெற்றார்.
பயிற்சியாளராக பொறுப்பேற்றது குறித்து விஜயன் கூறும் போது:என்னை சிறந்த கால்பந்து வீரானாக கல்கத்தான் உருவாக்கியது. அதே கல்கத்தாவில் இருந்துதான் இப்போது பயிற்சியாளர் பணியையும் தொடங்கியுள்ளேன். பயிற்சியாளர் பதவியில் கடும் சவால் இருக்கிறது. ஆனாலும் எனது அத்தனை அனுபவத்தையும் திரட்டி சதர்ன் சமிதியை சிறந்த அணியாக உருவாக்கி காட்டுவேன் என்றார்.

இங்கிலீஸ் பிரீமியர் லீக் போட்டியில் புதிய விதி


லண்டன்,ஜுலை.21
இங்கிலீஸ் பிரீமியர் லீக் போட்டியில் புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது இங்கிலாந்து கால்பந்து சங்கம்.
இங்கிலீஸ் பிரீமியர் லீக் போட்டியில் உள்ளுர் வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கும் வகையிலும், ஒரு அணியில் குறைந்தது 8 உள்ளுர் வீரர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும் என்ற புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி செல்சி என்றால் லண்டனை சேர்ந்த 8 வீரர்கள் கண்டிப்பாக அந்த அணியில் இடம் பெற்றிருக்க வேண்டும். மான்செஸ்டர் சிட்டி என்றால் மான்செஸ்டரை சேர்ந்த 8 வீரர்களுக்கு கண்டிப்பாக அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்று இந்த புதிய விதி சொல்கிறது.
இந்த விதி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆர்சனல் பயிற்சியாளர் ஆர்சானே வெங்கர், ''இந்த புதிய விதியால் எங்களிடம் உள்ள வெளிநாட்டு வீரர்களை விற்பனை செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். புதிய விதியை நாங்கள் மதிக்கிறோம்.ஆனால் அதே வேளையில் இதனை செயல்படுத்த எங்களுக்கு காலஅவகாசம் தேவைப்படுகிறது என்றார்.



பிலிப் லாமை ஒப்பந்தம் செய்ய மான்செஸ்டர் யுனைடெட் முயற்சி


பெர்லின்,ஜுலை.21
ஜெர்மனி கால்பந்து அணியின் கேப்டன் பிலிப்லாமை ஒப்பந்தம் செய்ய மான்செஸ்டர் யுனைடெட் அணி முயற்சித்து வருகிறது.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணியின் கேப்டனாக இருந்த பிலிப் லாம் தற்போது பேயர்ன் மியூனிச் அணிக்காக விளையாடி வருகிறார்.உலக கோப்பையில் 26 வயது பிலிப் லாமின் திறமையை கண்டு மான்செஸ்டர் பயிற்சியாளர் அலெக்ஸ் பெர்குசன் வியந்தார். இதையடுத்து அவரை மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு ஒப்பந்தம் செய்ய பெர்குசன் முயற்சிஎடுத்து வருகிறார்.பிலிப் லாம் 15 மில்லியன் பவுண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வாங்குகிறது அடானி குழுமம்

மும்பை,ஜுலை.21
ஹைதராபாத் ஐபிஎல் டெக்கான் சார்ஜர்ஸ் அணியைகுஜராத்தைச் சேர்ந்த அடானி குழுமம், வாங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
2009ம் ஆண்டு ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற அணி டெக்கான் சார்ஜர்ஸ். இந்த அணியை தற்போது அடானி குழுமம் வாங்கவுள்ளது.இதற்காக 280 முதல் 300 மில்லியன் டாலர் வரை விலை பேசப்பட்டு வருவதாக தெரிகிறது.
இந்த பேரம் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
தற்போது டெக்கான் சார்ஜர்ஸ் அணியை டெக்கான் குரானிக்கிள் ஹோல்டிங்ஸ் நிறுவனம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அகில இந்திய ஹாக்கிப் போட்டி ராணுவ அணிக்கு அழைப்பில்லை


சென்னை, ஜூலை. 21
சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் 86வது அகில இந்திய எம்.சி.சி. முருகப்பா தங்க கோப்பைக்கான ஹாக்கிப்போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் ஆர்மி லெவன் அணிக்கும், ஓஎன்ஜிசி அணிக்கும் இடையிலான போட்டியில் நடப்பு சாம்பியனான ராணுவ அணி நடந்து கொண்ட விதம் ஆக்கி விளையாட்டுக்கே அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது. ராணுவ அணியை சேர்ந்த முன்னாள் சர்வதேச வீரர் சுனில் எக்கா நடுவர் சூரியபிரகாசை ஆக்கி ஸ்டிக் கால் தலையில் தாக்கினார். இதில் அவரது மண்டை உடைந்தது.இதைத்தொடர்ந்து சுனில் எக்கா எஞ்சிய போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்த அறிக்கையை போட்டி அமைப்புக்குழு இயக்குனர் ஆக்கி இந்தியா அமைப்புக்கு அனுப்பியுள்ளார்.இதற்கிடையேராணுவ அணி வீரர் எக்கா நடந்து கொண்ட விதத்திற்காக அடுத்த ஆண்டு நடைபெறும் அகில இந்திய ஆக்கிப்போட்டிக்கு ராணுவ அணி அழைக்கப்படமாட்டாது என்று தெரிகிறது.

அடுத்த ஆண்டு வெளிவருகிறது சச்சினின் சுயசரிதை புத்தகம்



லண்டன், ஜூலை. 21
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 21 ஆண்டுகளாக விளையாடி வரும் சச்சினனை பாராட்டும் விதமாக லண்டனை சேர்ந்த கிரகென் மீடியா நிறுவனம் ரத்தப்பதிப்பு என்ற அவரது சுயசரிதை புத்தகத்தை வெளியிடுகிறது.சிறப்பு புத்தகம், சாதாரண புத்தகம் என்று 2 வகைகளில் தெண்டுல்கரின்சுயசரிதை வெளியிடப்படுகிறது. சிறப்பு புத்தகத்தில் தெண்டுல்கர் ரத்தத்தில் கையெழுத்திட்டது இருக்கும். இதில் இதுவரை வெளிவராத அவரது குடும்பப் புகைப்படங்கள், அவரது கிரிக்கெட் வாழ்வு பற்றிய சிந்தனைகள் மற்றும் பல சுவையான அரிய பகுதிகளுடன் வெளிவருகிறது.
852 பக்கங்கள் கொண்ட இந்த நூல் தங்க நிற அட்டையுடன் வெளிவருகிறது. இதன் விலை 75,000 அமெரிக்க டாலர்கள் மட்டுமே!37 கிலோ எடையுள்ள இந்தப் புத்தகம் 10 பதிப்புகளே வெளிவரவுள்ளன. இதற்கான ஆர்டர்களும் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன.உலககோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு இந்தியா, இலங்கை, வங்காளதேசத்தில் நடக்கிறது. அந்த சமயத்தில் அதாவது பிப்ரவரி மாதம் இந்த புத்தகம் வெளியிடப்படுகிறது.
இந்த சிறப்பு புத்தகத்தின் மூலம் கிடைக்கும் பணம் மும்பையில் கட்டப்பட்டும் பள்ளிகளுக்கு பயனபடுத்தப்படவுள்ளது.கிரிக்கெட் கடவுள், இந்திய ரசிகர்களின் கடவுள் என்றேல்லாம் கூறப்படும் சச்சினின் சுயசரிதை புத்தகம் கடைசியில் கடவுளின் சாதாரண பக்தர்கள் நினைத்துப்பார்க்க முடியாத விலையில் உள்ளது.
கடவுளை சாதாரணர்கள் நெருங்க முடியுமா என்ற ஏக்கத்தை தீர்க்கும் வண்ணமாக இந்த 852 பக்க நூலை அதன் ரத்தப்பகுதிகள் நீங்கலாக மலிவு விலை பதிப்பையும் கிரேகன் பதிப்பகம் வெளியிடுகிறது. இதன் விலை 2000 டாலர்கள் முதல் 3000 டாலர்கள் வரை இருக்கலாம். ஆனால் இதுவும் 1000 பதிப்புகளே வரவுள்ளன. இந்திய ரூபாயின் மதிப்பில் சாதாரண புத்தகத்தின் விலை ரூ.92 ஆயிரம் முதல் ரூ.1.38 லட்சம் வரை இருக்கும்.

டெல்லியில் காமன்வெல்த் நீச்சல் மையம் திறப்பு விழா

புதுடில்லி,ஜுலை.20
டில்லியில் வரும் அக்., 3 ம் தேதி முதல் 14 வரை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடக்க உள்ளன. இதற்காக பலகோடி ரூபாய் செலவில் மைதான கட்டுமானப் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. நீச்சல் போட்டிகள், சியாம் பிரசாத் முகர்ஜி நீச்சல் மையத்தில் நடக்க உள்ளன. இதனால் இதனை புதுப்பிக்கும் பணி 377 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வந்தது. பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்றுமுன்தினம் இதன் திறப்பு விழா நடந்தது. மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ்.கில் மற்றும் டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆகியோர் நீச்சல் மையத்தை திறந்து வைத்தனர். சுமார் 5 ஆயிரம் பேர் அமர்ந்து ரசிக்கும் வகையில், நீச்சல் மையம் கட்டப்பட்டுள்ளது. இதன் மேற்கூரை அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ளது.

ஹாக்கி சாம்பியன்ஷிப் தமிழகம் 3வது இடம்


போபால், ஜுலை.20

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் சீனியர் தேசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதில் சீனியர் தேசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரில், தமிழக அணி 32 என்ற கோல் கணக்கில் சண்டிகர் அணியை வீழ்த்தி, 3வது இடம் பிடித்தது.
அரையிறுதியில் தோல்வி அடைந்த தமிழகம்சண்டிகர் அணிகள், 3வது இடத்துக்கான போட்டியில் மோதின. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக அணி ஆட்டநேர முடிவில் 32 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 3வது இடம் பெற்றது.

இந்தியாவின் மோசமான ஆட்டம் கிரிஸ்டன் கவலை


காலே, ஜூலை.20

இலங்கை அணியுடனான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சு குறித்து பயிற்சியாளர் கிர்ஸ்டன் கவலை அடைந்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது :
இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தபோதிலும் அவர்களில் ஒரு சிலரே சிறப்பான இடத்தில் உள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு நாள் கிரிக்கெட்டில் 15 அல்லது 16 வேகப்பந்து வீச்சாளர்களை களமிறக்கி பரிசோதனை செய்தோம். இவர்கள் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள தவறி விட்டனர். நிறைய வேகப்பந்து வீரர்களை உருவாக்க நினைக்கிறேன். ஆனால் யாருமே நிலைத்து நிற்கவில்லை.
2வது நாள் ஆட்டத்திலாவது பந்துவீச்சாளர்கள் முத்திரை பதிப்பார்கள் என்று நினைக்கிறேன்.
இஷாந்த் ஷர்மாவை பொறுமையுடன் அணுகவேண்டும் . தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முக்கியமான இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி வாய்ப்பை உருவாக்கினவர் இஷாந்த், திறமை உள்ள வீரர் ஏதோ சிறிதுகாலம் தனது பந்து வீச்சில் சோடை போகிறார் என்பதற்காக உடனடி தீர்வுக்கு வரக்கூடாது .
கடந்த 16 டெஸ்ட் போட்டிகளில்ல் 6 பேட்ஸ்மென்கள், 5 பவுலர்கள் என்ற அணிச் சேர்க்கைதான் கை கொடுத்து வருகிறது. பேட்டிங் ஆல்ரவுண்டரை எடுத்தால் அவர் பந்துவீசுவதும் அவசியமாகிறது. ஆல்ரவுண்டர் தேவை என்பதற்காக 115 கி.மீ வேகத்தில் பந்து வீசும் ஒருவரை அணியில் எடுக்க முடியாது. மேலும் அவர் 5 டெஸ்ட் போட்டிகளுக்கு ஒரு முறை ஒரு விக்கெட் எடுப்பார் என்றால் அவர் தேவையில்லை என்றுதான் கூறுவேன் என்று கூறினார் கிரிஸ்டன்.முதல்நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருந்தது. இலங்கை அணியின் 2 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. ஒரு விக்கெட்டை புதுமுக வேகப்பந்து வீரர் அபிமன்யூ மிதுன் கைப்பற்றினார். மற்றொரு விக்கெட்டை பகுதிநேர பந்து வீச்சாளர் ஷேவாக் எடுத்தார்.
ஜாகீர்கான், ஸ்ரீசாந்த் இல்லாததால் இந்திய அணிக்கு மிகுந்த பின்னடைவு. அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீரர் இஷாந்த் சர்மாவால் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாமல் போனது பரிதாபமே.

2ஆம் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது
இந்தியஇலங்கை அணிகளுக்கு இடையேயான கால்லே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
256/2 என்று இருந்த இலங்கை அணி நேற்று ஆட்டத்தைத் துவங்கும் ஆர்வத்துடன் இருந்தது. ஆனால் அவ்வப்போது மழையும், முதல் நாள் பெய்த கன மழையால் மைதானம் நீர்நிலையாக மாறியதாலும் நேற்று உணவு இடைவேளைக்குப் பிறகு ஒருமுறை பிட்ச் சோதனை செய்யப்பட்டு மைதானம் விளையாடுவதற்கு ஏற்ற நிலையில்லாததால் மதியம் 3.18 மணிக்கு நடுவர்கள் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவித்தனர்.

பாக். அணியில் மீண்டும் யூசுப், யூனுஸ் - இஜாஸ்பட்



கராச்சி, ஜூலை.20

சர்வதேசபோட்டிகளிலிருந்து தடைவிதிக்கப்பட்டபாக்.அணியின் முன்னணி வீரர்களான முகமதுயூசுப், யூனுஸ்கான் ஆகியோர் மீண்டும் பாக்.இடம் பெறலாம் என்று பாக்.கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பாக். அணி 150 ரன்னில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியினால் மனமுடைந்த கேப்டன் அப்ரிடி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.இந்நிலையில் காயம் காரணமாக 2வது டெஸ்டில் விளையாடாமல் நாடு திரும்பி விட்டார் அப்ரிடி. இவருக்கு பதிலாக சல்மான்பட் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இஜாஸ்பட் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முன்னாள் கேப்டன்களான முகமது யூசுப், யூனுஸ்கான் ஆகியோர் மீண்டும் அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறிவிட முடியாது. தற்போது நெருக்கடியில் இருக்கும் அணியை காப்பாற்றஇருவரும் தேவைப்படுகிறார்கள்.இதுதொடர்பாக இருவரிடமும் அவர் பேசியுள்ளதாக தெரிவித்தார்.இதனிடையே பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கேப்டனுமான மொகமது யூசுப், தான் எந்த ஒரு கேப்டனுக்கும் கீழ் விளையாடத் தயாராக இருப்பதாகவும்,நாட்டிற்காக நான் எப்போதும் விளையாடத் தயாராகவேயிருக்கிறேன், வேண்டாமென்றால் நான் ஓய்வு பெற்றவனாகவே இருந்துவிட்டுப் போகிறேன் என்று கூறியுள்ளார் மொகமது யூசுப்.

காயம் காரணமாக மூன்று தொடர்களில் செரீனா விலகல்

நியூயார்க், ஜூலை,20
அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்து வரும் 3 டென்னிஸ் தொடர்களிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த வாரம் ஓட்டல் ஒன்றுக்கு சென்ற போது, கண்ணாடி டம்ளர் உடைந்து அவரது வலது காலில் குத்தி கிழித்து விட்டது. இதற்கு உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொண்டார். இருப்பினும் காயத்துக்கு காலில் ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் இஸ்தான்புல், சின்சினாட்டி, மான்ட்ரியல் ஆகிய மூன்று தொடர்களில் அவர் விலகி உள்ளார். காலில் ஏற்பட்ட காயத்தால் வருகிற தொடர்களில் விளையாட முடியாமல் போவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. எனக்கு ஆதரவாக இருந்து வரும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.
விரைவில் களத்திற்கு திரும்ப ஆர்வமாக இருக்கிறேன்' என்று செரீனா குறிப்பிட்டுள்ளார். ஆகஸ்டு 30ந்தேதி தொடங்கும் அமெரிக்க ஓபன் போட்டிக்கு களம் திரும்ப அவர் திட்டமிட்டுள்ளார்.

ஆக்டோபசை ஸ்பெயினுக்கு தர மறுத்தது ஜெர்மனி

ஸ்பெயின்,ஜுலை.17

உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியின் போது ஆரூடம் கூறி அசத்திய ஜெர்மனி நாட்டின் ஆக்டோபசை பெற ஸ்பெயின் முயன்று வருகிறது. ஆனால் அதற்கு ஜெர்மனி மறுத்து விட்டது.
அண்மையில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியின்போது ஜெர்மனியை சேர்ந்த பால் என்ற ஆக்டோபஸ் உயிரினம் போட்டியின் முடிவுகளை சரியாக கணித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றி பெறுமென அந்த ஆக்டோபஸ் கூறிய ஆரூடம் பலித்தது. அதனால் இந்த ஆக்டோபசுக்கு ஸ்பெயினில் ஆதரவு பெருகி வருகிறது. அதனை தங்கள் நாட்டில் வைத்து பராமரிக்க அந்நாட்டு அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்காக பிரத்யேக கண்ணாடி தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஸ்பெயினுக்கு ஆக்டோபசை ஸ்பெயினுக்கு வழங்க ஜெர்மனி அரசு மறுத்துவிட்டது. இது ஸ்பெயின் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

சென்னை வருகிறது காமன்வெல்த் ரயில்


சென்னை, ஜுலை.17
காமன்வெல்த் போட்டி வருகிற அக்டோபர் மாதம் தில்லியில் நடக்கிறது. இதை பிரபலப்படுத்தும் வகையில் சிறப்பு கண்காட்சி ரயில் ஒன்று நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்கிறது. இந்த ரயில் பயணத்தை கடந்த மாதம் 24ஆம் தேதி ரயில்வே அமைச்சர் மம்தாபானர்ஜி ரயிலை தொடங்கி வைத்தார். இந்த ரயில் அடுத்த மாதம் 17ஆம் தேதி சென்னை வருகிறது.
நாடு முழுவதும் 101 நாட்கள் சுற்றுப் பயணம் செய்யும் இந்த ரயில் 24 மாநிலங்கள் வழியாக செல்கிறது. இந்த ரயில் அடுத்த மாதம் 17ஆம் தேதி சென்னை வருகிறது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 20ஆம் தேதிவரை நிறுத்தப்பட்டு இருக்கும். 18, 19, 20 ஆகிய தேதிகளில் பொது மக்கள் ரயிலை பார்வையிடலாம். 20ஆம் தேதி இந்த ரயில் புதுச்சேரி புறப்பட்டு செல்லும். பின்னர் அங்கிருந்து மதுரை செல்லும்.

சச்சினுக்கு உலகக்கோப்பையை வெற்றி அவசியம் டேனி மாரிசன்

வெலிங்டன்,ஜுலை.17

இந்தியா 2011 உலகக் கோப்பை கிரிக்கெட்டை இந்திய நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கருக்காக வெல்ல வேண்டும் என்று நியூஸீலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் தற்போதைய வர்ணனையாளருமான டேனி மாரிசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் மாரிசம் கூறியபோது:
இந்தியா வெல்லவேண்டுமென்றால் சேவாக், யுவ்ராஜ், தோனி ஆகியோர் நன்றாக விளையாட வேண்டும் .உள்நாட்டில் விளையாடுவதால் இந்தியாவிற்கு உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது என்றார் டேனி மாரிசன்

பெல்ஜியத்தை வென்றது இந்தியா


டெல்லி,ஜுலை.17

இந்தியாபெல்ஜிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஹாக்கி டெஸ்ட் போட்டியில் இந்தியா 32 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தொடரில்10என்று முன்னிலை வகிக்கிறது.
முதல் போட்டியில் இரு அணிகளும் 33 என்ற கோல் கணக்கில் டிரா செய்தன.
இரண்டாவது போட்டியில் சந்தீப் சிங் இரண்டு கோல்களை அடித்தார்.
26வது நிமிடத்திலும் 67வது நிமிடத்திலும் பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார் சந்தீப் சிங், 39வது நிமிடத்தில் ராஜ்பால் சிங் ஒரு கோல அடித்தார்.
ஆனால் பெல்ஜியம் அணி 10வது நிமிடத்திலும் 55வது நிமிடத்திலும் கோல் அடித்து ஒரு நேரத்தில் 22 என்று சமன் செய்தது.

இலங்கை கிரிகெட் வாரியத்தின் சார்பில் முரளிதரனுக்கு பிரிவுபசார விழா


கொழும்பு,ஜுலை.17
இலங்கை கிரிகெட் வாரியம் முரளிதரனுக்கு பிரிவுபசார விழாவை ஏற்பாடு செய்துள்ளது.இந்தியாஇலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஞாயிறன்று காலேயில் துவங்குகிறது இந்த போட்டியுடன் முரளிதரன் ஓய்வு பெறவுள்ளதால் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது இலங்கை கிரிகெட் வாரியம்.
இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம்: டெஸ்ட் துவக்கத்தில் சுருக்கமான கௌரவிப்பு நிகழ்ச்சியும், டெஸ்ட் முடிவில் மிகப்பெரிய அளவில் ஒரு நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்துள்ளது. முரளிதரனுக்கு ஒரு நல்ல பிரிவுபசார விழாவை ஏற்பாடு செய்துள்ளோம்.அந்த நிகழ்வு மறக்க முடியாததாக இருக்கும் என்றும் முதல் நாள் ஸ்டேடியத்தில் அவர் நுழையும் போது பேண்டு வாத்தியங்களுடன் முரளியை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் கருத்து தெரிவித்துள்ளது.800 விக்கெட்டுகளுக்கு இன்னும் 8 விக்கெட்டுகளே மீதமுள்ள நிலையில் ஆட்டக்களம் கூட முரளிதரன் சாதனைய நிகழ்த்த ஏதுவாக அமைக்கப்படும் என்றும் தெரிகிறது.


இந்திய சிறுவர்களுக்கு கால்பந்து பயிற்சி


பெர்லின்,ஜுலை.17
ஜெர்மனியின் பேயர்ன்மியூனிச் கால்பந்து அகாடமியில் இந்திய சிறுவர்களுக்கு சிறப்பு கால்பந்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு பேயர்ன்மியூனிச் 21 வயதுக்குட்பட்ட அணி மேற்கு வங்காளம் வந்தது. அங்கு சிலிகுரி கால்பந்து அகாடமி வீரர்களுடன் ஒரு கண்காட்சி போட்டியில் விளையாடியது. இந்த போட்டிக்கான பேயர்ன்மியூனிச் அணியில் உலக கோப்பையில் தங்க காலணி வென்ற தாமஸ் முல்லரும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் பேயர்ன் 31 என்று வெற்றி பெற்றது. ஆனாலும் இந்திய வீரர்களின் திறமையான ஆட்டம் பேயர்ன் வீரர்களை கவர்ந்தது.போட்டி முடிந்ததும் ஜெர்மனி சென்ற பேயர்ன் வீரர்கள் சிலிகுரி இளைஞர்களுக்கு பேயர்ன்மியூனிச் கால்பந்து அகாடமியில் பயிற்சி அளிக்க சிபாரிசு செய்தனர்.
இதனை ஏற்றுக் கொண்ட பேயர்ன் மியூனிச் நிர்வாகம் சிலிகுரி கால்பந்து அகாடமியை சேர்ந்த சஞ்சீவ், லிடான் சில், திப்பு பர்மன், அமித் தாகூர், அபிஷென் செட்ரி, நிஷாந்த் ஆகிய 6 வீரர்களை ஜெர்மனிக்கு பயிற்சிக்காக அழைத்துள்ளது. இவர்கள் ஒரு வார காலம் மியூனிச் நகரில் உள்ள பேயர்ன் கால்பந்து அகாடமியில் சிறப்பு பயிற்சி பெறுகின்றனர். இதற்காக அடுத்த மாதம் 13ந் தேதி இவர்கள் மியூனிச் புறப்படுகின்றனர்.செலவுகள் அனைத்தையும் பேயர்ன் நிர்வாகமே ஏற்றுக் கொண்டுள்ளது.

ஆப்டோஸ் டென்னிஸ் காலிறுதியில் சோம்தேவ்

வாஷிங்டன், ஜூலை.17
அமெர்க்காவில் நடைபெறும் ஆப்டோஸ் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆடவர் ஒற்றையர் காலிறுதிக்குள் இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் நுழைந்தார்.
அமெரிக்க வீரர் போகலோமோவ் என்பவரை 62, 57, 63 என்று போராடி வீழ்த்தினார் சோம்தேவ்.
இந்த இரு வீரர்களும் மோதும் முதல் போட்டி இதுவேயாகும். அடுத்ததாக காலிறுதியில் அலெக்ஸ் போக்டனோவிச் என்பவரை சந்திக்கிறார்.
ஸ்லோவேக்கியாவின் கரோல் பெக் உடல் நலமின்மை காரணமாக விலக போக்டனோவிச் காலிறுதிக்குள் நுழைந்தார்.

காமன்வெல்த் குழுவின் கோரிக்கையை நிராகரித்தது பி.சி.சி.ஐ.

டெல்லி, ஜூலை.17
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக இந்தியஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரை மாற்றவேண்டும் என்ற காமன்வெல்த் குழுவின் கோரிக்கையை நிராகரித்தது பி.சி.சி.ஐ.வரும் அக்டோபர் மாதம்
டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவிருக்கிறது.அதே சமயத்தில் இந்தியஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரும் நடைபெறுகிறது என்பதால் காமன்வெல்த் விளையாட்டு அமைப்பு இந்த கோரிக்கையை பி.சி.சி.ஐயிடம் முன் வைத்தது.
இது குறித்து சுரேஷ் கல்மாடிஎழுதிய கடிதத்தில் இந்தியா ஆஸ்திரேலியா தொடர் காமன்வெல்த் போட்டிகள் சமயத்தில் நடைபெற்றால் ரசிகர்களின் ஆர்வம் இந்த கிரிக்கெட் தொடர் மீதுதான் இருக்கும்.அதனால் இந்தியா ஆஸ்திரேலியா தொடரின் தேதிகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று கடிதம் எழுதினார்.ஆனால் பி.சி.சி.ஐ. தொடரின் தேதிகளை மாற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல, எதிர்காலப் பயணத்திட்டம் படி இந்த தொடர் நடைபெறுகிறது. மேலும் ஆஸ்ட்ரேலிய அணிக்கும் நிறைய தொடர்கள் இருப்பதால் தேதிகளை மாற்றுவது இயலாத காரியம் என்று கைவிரித்துள்ளது.

அர்ஜென்டினா பயிற்சியாளராக மரடோனா நீடிப்பார்கால்பந்து சங்கம்


போன்ஸ்ஏர்ஸ், ஜூலை. 17
பிரேசிலில் நடக்கவிருக்கும் அடுத்த உலக கோப்பை வரை மரடோனாவை அர்ஜென்டினா பயிற்சியாளராக நீட்டிக்க கால்பந்து சங்கம் திட்டமிட்டு உள்ளது.ஆனால் நடந்து முடிந்த உலக கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி போட்டியில் அர்ஜென்டினா அணி தோல்வியுற்று வெளியேறியதால் கடும் அதிர்ச்சியுள்ளானார் பயிற்சியாளர் மரடோனா.இந்த தோல்வியின் காரணமாக அவர் பயிற்சியாளர் பணியில் இருந்து விலக போவதாக தகவல்கள் வந்தன. ஆனால் அர்ஜென்டினா கால்பந்து சங்கம் மரடோனாவை இழக்க விரும்ப வில்லை. தொடர்ந்து அவர் பயிற்சியாளராக நீடிக்க வேண்டும் என்று விரும்பு கிறது.
எனவே மரடோனாவை 2014ம் ஆண்டு நடக்கும் அடுத்த உலக கோப்பை போட்டி வரை பயிற்சியாளராக நீடிக்க வைக்க அர்ஜென்டினா கால்பந்து சங்கம் திட்டமிட்டு உள்ளது.
இதுகுறித்து அர்ஜென்டின அணியின் செய்தி தொடர்பாளர் எமஸ் டோபியாலோ கூறும்போது:
மரடோனாவை தொடர்ந்து பயிற்சியாளராக நீடிக்க வைக்க விரும்புகிறோம். இது தொடர்பாக கால்பந்து சங்க தலைவர் ஜூலியோ காண்டனா அடுத்த வாரம் மரடோனாவை சந்தித்து பேச இருக்கிறார்.
மரடோனாவை தவிர வேறு யாரையும் பயிற்சியாளராக நியமிப்பது பற்றி நாங்கள் சிந்தித்து பார்க்கவில்லை என்று கூறினார்.

திறமைக்கு ஏற்ப வீரர்கள் தேர்வு ஸ்ரீகாந்த்


புதுடெல்லி, ஜூலை.17

இந்திய அணிக்கு வீரர்களை திறமைக்கு ஏற்பத்தான் தேர்வு செய்கிறோம் தவிர எந்த ஒரு வீரரையும் மண்டல அடிப்படையில் தேர்வு செய்யவில்லை என்று இந்திய கிரிக்கெட் வீரர்கள் தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
டெல்லியில்நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது ஸ்ரீகாந்த் பேசியதாவது:
ஒரே நகரில் 11 சிறந்த வீரர்கள் இருந்தால் அவர்கள் அனைவரையுமே தேர்வு செய்வோம்.
மண்டலம் அடிப்படையில் ஒதுக்கீடு செய்து வீரர்களை தேர்வு செய்யமாட்டோம்.தேர்வு குழுவில் உள்ள எங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பணி சிறந்த 15 வீரர்களை தேர்வு செய்வது மட்டுமே. எனவே அதை மட்டுமே செய்கிறோம். இந்திய அணிக்கு வீரர்கள் தேர்வு செய்வதை மிகவும் கவனமுடன் செய்து வருகிறோம்.
தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க போதிய கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. அவர்கள் மீது நம்பிக்கை வைத்து விளையாட வைக்கிறோம். ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் அவர்கள் சரியாக விளையாடவில்லை என்பதற்காக நீக்கவிடுவது இல்லை.
அணிக்கு கேப்டனாக வீரர்கள் தங்கள்தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். வழிநடத்தும் திறமையும், அனுபவமும் உள்ள ஒருவரால் தான் நல்ல கேப்டனாக உருவாக முடியும்.
கபில்தேவ் இப்படித்தான் கேப்டனாக உருவானார். அவர் சக வீரர்களை உற்சாகப்படுத்தியததால் தான் 1983ல் உலக கோப்பையை இந்தியா வெல்ல முடிந்தது
என்று பேசினார்.

கால்பந்து மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள்

டர்பன், ஜூலை.17
நடந்து முடிந்த 19வது உலக கோப்பை கால்பந்து போட்டிக்காக தென்னாப்பிரிக்காவில் புதிதாக 5 மைதானங்கள் கட்டப்பட்டன.இந்த மைதானங்களி இனி கால்பந்து போட்டிகள் அவ்வளவாக நடைபெறாது என்பதால்
இந்த மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடக்க முயற்சிகள் எடுத்துவருகின்றனர்.அதற்காக மைதானத்தில் சிறியளவு மாற்றங்கள் செய்ய திட்டமிட்டு உள்ளனர். இந்த மைதானங்களில் 20 ஓவர் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். டர்பன் மைதானத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்கா இந்தியா இடையே 20 ஓவர் போட்டி நடக்க வுள்ளது.இதற்காக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கால்பந்து சங்கத்தை அணுகியுள்ளது.

உலக கோப்பையில் தோல்வி பிரான்சு கால்பந்து வீரர் ஹென்றி ஓய்வு

நியூயார்க், ஜூலை. 17

உலக கோப்பை போட்டி யில் பிரான்சு மோச மாக தோற்றதையடுத்து சர்வதேச போட்டியிலி ருந்தும்,அணியிலிருந்தும் விலகுவதாக பிரான்சு கால்பந்து அணியில் முன்னணி வீரர் திமேய ஹென்றி அறிவித்துள்ளார்.
ஆனால் கிளப் போட்டிகளில் ஆட இருக்கிறார். அமெரிக்காவின் கால்பந்து லீக் அணிகளில் ஒன்றான ரெட்பல்ஸ் அணியில் விளையாட ஒப்பந்தம் செய்துள்ளார்.

சானியாவுடன் மாலிக் பாக்.கிரிக்கெட் வாரியம் அதிரடி!


லண்டன்,ஜுலை.15
பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் தனது மனைவி சானியா மிர்சாவுடன் லண்டன் நகரை சுற்றிப்பார்த்ததால் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இங்கிலாந்து நாட்டில் நடைபெறவிருக்கும் முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து மாலிக் நீக்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் சோயப் மாலிக் மட்டும் அதில் கலந்து கொள்ளாமல் தனது மனவி சானியா மிர்சாவுடன் லண்டன் நகரை சுற்றிப்பார்க்க சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாக்.நிர்வாகம் சோயப் மாலிக்கை முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.மேலும் கிரிக்கெட் போட்டிகளில் தீவிர கவனம் செலுத்துமாறும் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளதாக தெரிகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஷோயப் மாலிக் நீக்கப்பட்டதற்குக் காரணம் அவர் இன்னும் முழு பார்முக்கு திரும்பவில்லை என்பதனாலேயே என்றும் அவர் தனது மனைவி சானியா மிர்சாவுடன் பொழுதைக் கழிப்பதற்காக சில வலைப் பயிற்சி ஆட்டங்களை துறந்தார் என்பதற்காக இல்லை என்று பாகிஸ்தான் அணி நிர்வாகி யவார் சயீத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மாலிக், கம்ரன் அக்மல், ஷாகித் அப்ரீடி, உமர் அக்மல் போன்ற வீர்ர்களிடம் வசூலித்த அபராதத் தொகைகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவசரம் அவசரமாக திருப்பி அளித்துள்ளது.

இங்கிலாந்து நடுவர் மோசம் ராபன்


ஜோகனஸ்பர்க், ஜுலை.14

உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிபோட்டியில் திறமைமிகுந்த நல்ல நடுவரை நியமிக்கவில்லை என்று நெதர்லாந்து வீரர் ஆர்ஜான் ராபன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஹோவர்டு வெப்
ஸ்பெயின்நெதர்லாந்து அணிகளுக்கிடையேயான இறுதி போட்டிக்கு இங்கிலாந்தை சேர்ந்த ஹோவர்டு வெப் என்ற நடுவர் நியமிக்கப்பட்டிருந்தார். முன்னாள் போலீஸ் அதிகாரியான வெப் ஹோவர்டு இறுதி போட்டியில் 14 மஞ்சள் அட்டைகளை வழங்கிதோடு கூடுதல் நேரத்தின் போது நெதர்லாந்து வீரர் ஹெட்டிங்காவுக்கு சிவப்பு அட்டையும் வழங்கியதால் நெதர்லாந்து அணி 10 வீரர்களுடன் விளையாடியது. இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி கொண்ட ஸ்பெயின் அணியினர் ஒரு கோல் அடித்து கோப்பையை கைப்பற்றினர்.இந்த போட்டியில் நெதர்லாந்து வீரர் ஆர்ஜான் ராபனுக்கு இரண்டு முறை கோல் அடிக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது.ஒரு முறை ராபன் பந்தை கடத்தி வரும் போது ஸ்பெயின் தடுப்பாட்டக்காரர் கார்லஸ் புயால் ராபனின் கால்களை கட்டிக் கொள்வார். ஆனால் அந்த சமயத்தில் ராபனிடம் பந்து இருந்தது.இதனால் நடுவர் நெதர்லாந்துக்கு 'அட்வான்டேஜ்' என்று நினைத்து 'பவுல்' கொடுக்கவில்லை. கார்லாய் புயாலின் இந்த செயலால் ராபனால் கோல் அடிக்க முடியாமல் போனது. ஸ்பெயின் கோல் ஏரியா அருகே இது நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ராபின் கூறும்போது:
இறுதி ஆட்டத்தை வழி நடத்தக் கூடிய திறமையான தகுதி வாய்ந்த நடுவரை 'பிபா'நியமிக்கவில்லை. அணிகள் மட்டும் தரமானதாக இருந்தால் போதாது. நடுவரும் திறமையானவராக இருக்க வேண்டும்.ஸ்பெயின் கோல் ஏரியா அருகே எனது காலை கார்லஸ் புயால் கட்டிப் பிடித்தார். இதனை நடுவர் கண்டு கொள்ளவில்லை.ஆனால் கூடுதல் நேரத்தில் ஹெட்டிங்காவுக்கு மட்டும் சிவப்பு அட்டைக் கொடுத்தார். ஆட்டம் முடியும் தருவாயில் இது போன்று செய்வது எந்தவிதத்தில் நியாயம் என்று ஆவேசப்பட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.
ராபினின் கருத்து குறித்து பிபா தலைவர் செப் பிளேட்டர் கூறும்போது :
இறுதி ஆட்டத்தில் பவுல்தான் அதிகமாக இருந்தது. நேர்மையான ஆட்டத்தை மட்டுமே எதிர்பாக்கிறோம். உலகத்தரம் வாய்ந்த இரு அணிகளின் ஆட்டமும் எனக்கு திருப்தியளிக்கவில்லை. உலக கோப்பையில் நடுவர்களின் முடிவுகள் 96 சதவீதம் சரியாகவே அமைந்துள்ளது. எந்த விஷயத்தை செய்யும் போதும் 100 சதவீதம் சிறப்பாக செய்ய முடியாது. குறைகள் வரத்தான் செய்யும்'' என்றார்.

உலக பேட்மிட்டன் போட்டி பட்டம் வெல்வேன்சாய்னா

புதுடெல்லி,ஜுலை.15
பிரான்சில் அடுத்த மாதம் நடக்கும் உலக பேட்மிட்டன் போட்டியில்சாம்பியன் பட்டத்தை வெல்வேன்'' என்று இந்திய வீராங்களை சாய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சாய்னா தலைமையில்
உலக பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அடுத்த மாதம் 23ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் 9 பேர் கொண்ட இந்திய அணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இந்த போட்டிக்கு இந்திய அணியின் தலைவராக சாய்னா நேவால் செயல்படுவார் என்று இந்திய பேட்மிட்டன் சம்மேளன தலைவர் வி.கே.வர்மா அறிவித்துள்ளார்.
அணி விவரம் பெண்கள் பிரிவு: சாய்னா (தலைவர்), அதிதி முடாட்கர், ஜுவாலா கட்டா, அஷ்வினி, ஆண்கள் அணி விவரம்: சேத்தன் ஆனந்த், காஷியாப், சானாவ் தாமஸ், ருபேஷ் குமார், திஜு. தலைமை பயிற்சியாளர் கோபிசந்த், உதவி பயிற்சியாளர் விஜய் தீப்சிங் ஆகியோர் அணியில் உள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் சாய்னாவுக்கு தொடர்ச்சியாக 3 சர்வதேச பட்டங்கள் வென்று சாதனை படைத்தற்காக பாராட்டு விழா நடந்தது. விழாவில் அவரது வயதை குறிக்கும் வகையில் அவருக்கு 20 தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு பிறகு சாய்னா பேசும்போது:
பேட்மிண்டன் தனிநபர் ஆட்டம். இங்கு ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது.உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டனிலிருந்து நமது அணியில் சிறந்த வீரர்களின் செயல்பாடுகளை கவனித்து வருகிறேன். ஒவ்வொருவரும் திறமையுடன் விளையாடி வருகிறார்கள்.
உலக சாம்பியன் போட்டியில் பட்டத்தை வெல்வேன் என்று நம்புகிறேன் என்று கூறினார்.உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றால் அவருக்கு 101 தங்க நாணயங்கள் வழங்குவதாக இந்திய பேட்மின்டன் அணியின் ஸ்பான்சர் நிறுவனம் அறிவித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தரவரிசையில் தோனி தொடர்ந்து முதலிடம்

துபாய்,ஜுலை.15
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒரு நாள் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்டிங்கில் இந்திய அணி கேப்டன் தோனி 807 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் 805 புள்ளிகள் பெற்று 2வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் மைக்கல் ஹஸ்சி 792 புள்ளிகள் பெற்று 3வது இடத்திலும் உள்ளனர். மற்ற இந்திய வீரர்களில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் 6வது இடத்திலும், கோலி 16வது இடத்திலும், யுவராஜ்சிங் 17வது இடத்திலும், ஷேவாக் 18வது இடத்திலும் உள்ளனர்.
பந்து வீச்சில் நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி முதல் இடத்திலும், வங்காளதேச வீரர் சகீப் அல்ஹசன் 2வது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர்களில் ஹர்பஜன்சிங் 11வது இடத்திலும், பிரவீன்குமார் 15வது இடத்திலும் உள்ளனர்.

ஆசிய வாள்சண்டை தமிழக வீரர்கள் பங்கேற்பு

சென்னை, ஜூலை.15
தென்கொரியா தலைநகர் சியோலில் ஆசிய வாள் சண்டை போட்டி நடை பெற்று வருகிறது.
இந்தியா சார்பில் தமிழ்நாட்டில் இருந்து கே.பி.கிஷோநிதி, சி.ஏ.பவானிதேவி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த தகவலை தமிழ்நாடு வாள்சண்டை சங்கதலைவர் ஜான்நிக்கல்சன் தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்து அணிக்கு ராணி பாராட்டு

ஆம்ஸ்டர்டாங்,ஜுலை15

தென்னாப்பிரிக்காவில் நடந்த 19வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணியிடம் தோல்வியிற்று நெதர்லாந்து அணி 2வது இடத்தை பிடித்தது. நெதர்லாந்து தோலிவியடைந்தாலும் அந்த அணி வீரர்களின் ஆட்டம் ரசிக்கும்படியாக இருந்தது.இந்நிலையில் நாடு திரும்பிய அந்த அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.வீரர்களை அந்நாட்டு ராணி பியட்ரிகஸ் பாராட்டினார். ராணியுடன் நெதர்லாந்து கால்பந்து வீரர்கள் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

அடுத்த உலக கோப்பையையும் எங்களுக்கு தான் பாஸ்கி


மாட்ரிட், ஜூலை. 14

உலக கோப்பையை ஸ்பெயின் வென்றதற்கு வீரர்கள் மட்டும் அல்ல அந்த அணியின் பயிற்சியாளர் விசன்டேடெல் பாஸ்கிக்கும் முக்கிய பங்கு உண்டு.
வீரர்களுக்கு அவர் கற்றுக் கொடுத்த நுணுக்கங்கள் மற்றும் எந்த நெருக்கடியிலும் மனதளவில் பாதிக்காமல் இருந்தல் போன்றவை நல்ல பலனை கொடுத்ததே. கோப்பையை வெல்வதற்கு காரணமாக இருந்தன.
பாஸ்கி முன்னணி கால்பந்து கிளப்பான ரியல் மாட்ரிட் அணியில் 4 முறை பயிற்சியாளராக இருந்தவர். அவர் திறமையை அறிந்தே ஸ்பெயின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
கோப்பையை வென்றது குறித்து பாஸ்கி கூறியதா வது:
எனக்கு முன்பு ஸ்பெயின் பயிற்சியாளராக இருந்தலூயிஸ் அரசான்ஸ் அணியை சிறப்பாக உருவாக்கி வைத்திருந்தார். அதன் மூலம் 2008 ஐரோப்பிய கோப்பையை ஸ்பெயின் வென்றது.
2008 ஜூலையில் நான் பயிற்சியாளராக வந்தேன். லூயிஸ் அரகான்ஸ் திறம்பட உருவாக்கி வைத்திருந்த அணியை சரியான பாதையில் வழி நடத்தி சென்றேன்.
வீரர்கள் அனைவரும் அர்ப்பணிப்போடு மிகவும் கடுமையாக உழைத்தார்கள். மிக திறமையும், தகுதியும், புத்தி சாலித்தனமும் கொண்ட வீரர்கள் எங்கள் அணியில் இடம் பெற்று இருந்தனர். இதனால் தான் இந்த உலக கோப்பையை நாங்கள் வெல்ல முடிந்தது.
ஸ்பெயின் அணி வளர்ந்து கொண்டிருக்கும் அணி எங்கள் வளர்ச்சியும், முயற்சியும் தொடர்ந்து நீடிக்கும். எனவே அடுத்த உலக கோப்பையையும் நாங்களே வெல்வோம்.
2008 ஐரோப்பிய கோப்பையை வென்ற போது உலக கோப்கையை வெல்ல முடியும் என்று நினைத்தோம். இப்போது அடுத்த உலக கோப்பையையும் வெல்ல முடியும் என்ற முனைப்புடன் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்

வங்கதேசத்தை வீழ்த்தியது இங்கிலாந்து

எட்ஜ்பாஸ்டன் ,ஜுலை.14

3வது இறுதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வங்கதேச அணியை 144 ரன்களில் மிகப்பெரிய வெற்றி பெற்று ஒரு நாள் தொடரை 2 1 என்று கைப்பற்றியது.
2வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்தை வென்றதால் நம்பிக்கையுடன் பார்க்கப்பட்ட வங்கதேச அணியை இங்கிலாந்து வீழ்த்தியது.
மொர்டசா, முதல் ஓவரில் கீஸ்வெட்டரை பவுல்டு செய்தார். ஆனால் அதன் பிறகு விக்கெட்டுகள் விழாமல் இருந்தன. வங்கதேச வீச்சாளர்களின் பந்து மைதானம் நெடுக பவுண்டரிக்கும் சிக்சருக்கும் பறந்தது.
ஸ்ட்ராஸ் 140 பந்துகளில் 16 பவுண்டரி 5 சிக்சர்கள் சகிதம் 154 ரன்கள் எடுக்க, ஜொனாதன் ட்ராட் 110 ரன்களை எடுத்தார். இர்வுஅரும் இணைந்து 40 ஓவர்களில் 250 ரன்களை இரண்டாவது விக்கெட்டுக்காகச் ஸேர்த்தது புதிய இங்கிலாந்து சாதனையானது.
இது போதாதென்று கடைசியில் களமிறங்கிய ரவி பொபரா 16 பந்துகளில் 2 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் அடித்து 45 ரன்கள் விளாசினார். இங்கிலாந்து 50 ஓவர்களில் 347 ரன்களை விளாசியது. இது இங்கிலாந்து ஒரு நாள் போட்டிகளில் எடுத்த அதிகபட்ச ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அடிதடியிலும் மோர்டசா 10 ஓவர்களில் 31 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஷஃபியுல் 9 ஓவர்களில் 97 ரன்களையும், ஷாகிப் 75 ரன்களையும் விட்டுக் கொடுத்தனர்.
தொடர்ந்து ஆடிய வங்கதேசம் 45 ஓவர்களில் 203 ரன்களுக்கு சுருண்டது. ரவி பொபாரா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனாக இங்கிலாந்து கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் தேர்வு செய்யப்பட்டார்.

ஸ்ரீசாந்திற்கு பதில் முனாஃப் படேல்

கொழும்பு,ஜுலை.14
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் காயத்தால் இந்தியா திரும்பவுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்திற்கு பதில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான முனாஃப் படேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே ஜாகீர் கான் காயமடைந்து தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில் மற்றொரு அனுபவ வீச்சாளரும் விலகியிருப்பது இந்திய அணிக்கு பின்னடைவை அளித்துள்ளது.
விதர்பா வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனட்கட் ஆகியோரும் பரிசீலனையில் உள்ளனர்.
நாளை இந்திய கிரிக்கெட் அணி பயிற்சி ஆட்டத்தில் இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் அணியை சந்திக்கிறது.
முதல் டெஸ்ட் காலேயில் வரும் 18ஆம் தேதி நடைபெறுகிறது.


ஜாகீர்கான், ஸ்ரீசாந்த் இல்லாதது அணியின் வெற்றியை பாதிக்கும்தோனி
இலங்கைக்கு எதிரான இந்தியாவின் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களில் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான், ஸ்ரீசாந்த் காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது அணிக்குபின்னடைவு என்று அணித் தலைவர் தோனி கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியாஇலங்கை இடையே 3 டெஸ்ட் கொண்ட தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 18ந்தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் காயம் காரணமாக இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் ஜாகீர்கான், ஸ்ரீசாந்த் ஆகியோர் தொடரில் இடம் பெறவில்லை. இதுதொடர்பாக கேப்டன் தோனி கூறுகையில்:
ஜாகீன்கான், ஸ்ரீசாந்த் இருவரும் காயம் காரணமாக அண்யில் இடம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருவருமே அணியின் முக்கிய பந்து வீச்சாளர்கள். தொடரில் அவர்கள் இடம் பெறாமல் இருப்பது அணிக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறினார்

ரூ.200 கோடி வர்த்தக ஒப்பந்தத்தில் தோனி

டெல்லி,ஜுலை.14

விளம்பர வர்த்தக ஒப்பந்தத்தில் சச்சின் டெண்டுல்கரையும் விஞ்சி விட்டார் இந்திய அணித் தலைவர் எம்.எஸ்.தோனி. தற்போது விளையாட்டு மேலாண்மை நிறுவனமான ரித்தி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம் தோனியை ரூ.200 கோடிக்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
தோனியின் விளம்பர ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு ஒப்பந்த நடவடிக்கைகள் அனைத்தையும் இந்த நிறுவனம் இனி தோனிக்காக நிர்வாகம் செய்யும்.
அதாவது தோனியின் அனைத்து விளம்பர ஒப்பந்தங்கள் அனைத்தையும் மேலாண்மை செய்யும் என்று ரித்தி விளையாட்டு நிர்வாக நிறுவன பொது மேலாளர் சஞ்சய் பாண்டே தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் இரண்டாண்டு கால ஒப்பந்தம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் இந்திய நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே 180 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ரித்தி நிறுவனம் ஹர்பஜன் சிங், ஆர்.பி.சிங் ஆகியோருடன் சிறிய அளவில் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை அறிக்கையின் படி உலகிலேயே அதிக பணம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர் தோனி என்று குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈட்டினார். இதில் 8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் விளம்பரம் மூலம் வருவது என்பதையும் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது

இனிமேல் வெற்றி தோல்வியை பால் கணிக்காது

ஜோகனஸ்பர்க், ஜுலை.14

ஸ்பெயின் வெற்றி பெறும் என்று கூறிய பால் ஆக்டோ பஸ் இனிமேல் வெற்றி தோல்வியை கணிக்காது என்று பெர்லின் அருங்காட்சியம் கூறியுள்ளது.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி தோல்வியை கணித்து வெகு பாப்புலராகியுள்ள பால் ஆக்டோ பஸ் குறித்து ஸ்பெயின் வீரர் ஆன்ட்ரஸ் இனியஸ்டா வேடிக்கையாக கூறியதாவது,'' பால் மட்டும் இப்போது ஸ்பெயினுக்கு வந்தால் ராஜ மரியாதைதான்.
ஸ்பெயினில் இப்போது ரொம்ப பாப்புலரான விலங்கு எதுவென்றல், அது பால் என்றுதான் நான் நினைக்கிறேன். பாலுக்கு நல்ல உணவு வகைகளை கொடுத்து அதனை நல்லபடியாக பராமரிக்கும்படி அந்த அருங்காட்சிய நிர்வாகிகளுக்கு எனது வேண்டுகோள். இப்போது உலக கோப்பை முடிந்து விட்டது இனிமேல் கிளப் ஆட்டத்துக்கு பால் மாறலாம்'' என்று வேடிக்கையாக குறிப்பிட்டார்.
இதற்கிடையே பால் இனிமேல் கால்பந்து போட்டிகளில் வெற்றி தோல்வியை கணிக்காது என்று பெர்லின் அருங்காட்சியம் கூறியுள்ளது

ஸ்பெயின் அரசருடன் கால்பந்து வீரர்கள் சந்திப்பு


ஜோகனஸ்பர்க், ஜுலை.14

உலக கோப்பையை வென்று தாய்நாடு திரும்பிய ஸ்பெயின் வீரர்களுக்கு மாட்ரிட் நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உலக கோப்பையை வென்ற ஸ்பெயின் வீரர்கள் மாட்ரிட்டில் உள்ள பஞ்சரா சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கினர். விமானநிலையத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் திரண்டிருந்தனர். விமான நிலையத்தின் அருகில் உள்ள ஹோட்டலில் அவர்கள் மதிய உணவு அருந்தினர்.
பின்னர் அவர்கள் ஸ்பெயின் அரசர் ஜுவான் கார்லஸ் ராணி சோபியா ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, ''நமது நாட்டின் கனவை நினைவாக்கியுள்ளனர். கடும் உழைப்பிற்கும் கால்பந்து ஆட்டத்தில் உலகுக்கே முன்னுதாரணமாக திகழ்கிறீர்கள்'' என்று ஸ்பெயின் அரசர் வாழ்த்தினார்.
பின்னர் அரச குடும்பத்தினருடன் ஸ்பெயின் வீரர்கள் குருப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து பிரதமர் லுயிஸ் ரோட்ரிகஸ் சப்ரடோ வை சந்தித்து அவரிடமும் வாழ்த்து பெற்றனர். பின்னர் அவர்கள் ஒரு திறந்த பஸ்சில் மாட்ரிட் நகரத் தெருக்களில் ஸ்பெயின் வீரர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். இந்த ஊர்வலத்தில் லட்சக்கணக்கான ஸ்பெயின் மக்கள் கலந்து கொண்டனர்.

ஸ்பெயின் வீரர்களுக்கு ரொனால்டோ வாழ்த்து


ஜோகனஸ்பர்க், ஜுலை.14
உலக கோப்பையை வென்ற ஸ்பெயின் வீரர்களுக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த உலக கோப்பையில் போர்ச்சுகல் அணி ஸ்பெயின் அணியிடம் தோற்றுதான் போட்டியை விட்டு வெளியேறியது. இந்த நிலையில் உலக கோப்பையை வென்ற ஸ்பெயின் வீரர்களுக்கு டுவிட்டர் வழியாக ரொனால்டோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எனது நண்பர்கள்தான் ஸ்பெயின் அணியில் விளையாடி வருகின்றனர். அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறன்'' என்று ரொனால்டோ கூறியுள்ளார்.

Wednesday, July 14, 2010

Monday, July 12, 2010

19 வது உலக கோப்பை கால்பந்தாட்டத்தின் நிறைவு விழா







உலகக் கோப்பை கால்பந்து யுரோ சாம்பியன் ஸ்பெயின் கோப்பையைவென்றது!



ஜோகன்னஸ்பர்க்,ஜுலை.13
உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் 10 என்ற கோல்கணக்கில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி உலக சாம்பியனானது.

கடுமையான போட்டி

உலகம் முழுவதும்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த உலகக் கோப்பைக் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டம் ஜோஹன்னஸ்பர்க், சாக்கர் சிட்டி மைதானத்தில் நிரம்பி வழிந்த ரசிகர்கள் முன்னிலையில் விறுவிறுப்பாக நடந்தது.
இரு அணிகளும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் போர்க்குணத்துடன் கடுமையாக மோதினர்.துவக்கத்தில் யூரோ சாம்பியனான ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் "பிரீகிக்' வாய்ப்பில் சேவி, பந்தை அடித்தார். அதனை செர்ஜியோ ரமோஸ் தலையால் முட்டி கோல் அடிக்க பார்த்தார். ஆனால், நெதர்லாந்து கோல்கீப்பர் மார்டன் ஸ்டகலன்பர்க் துடிப்பாக தடுக்க, வாய்ப்பு நழுவியது. 11வது நிமிடத்தில் மீண்டும் ரமோஸ் தாக்குதல் நடத்தினார். இம்முறை நெதர்லாந்து தற்காப்பு பகுதி வீரர் ஹெடிங்கா, பந்தை உதைத்து வெளியே அனுப்பினார்.இருப்பினும் ஸ்பெயின் தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை நடத்திக் கொண்டு இருந்தது. முதல் 20 நிமிடங்கள் ஸ்பெயின் வீரர்கள் நெதர்லாந்து வீரர்களை விளையாடவே விடவில்லை. கிடைத்த இடைவெளியில் நெதர்லாந்தின் கோல்கம்பத்தை முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர்.

மஞ்சள் கார்டு படலம்

ஒருவழியாக நெதர்லாந்தும் தனது பலத்தை காட்ட ஆரம்பித்து முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டனர். பதிலுக்கு ஸ்பெயின் வீரர்களும் மோதிப் பார்க்க, இங்கிலாந்து நடுவர் ஹாவர்டு, மாறி மாறி "எல்லோ கார்டு' காட்டி எச்சரித்தார். நெதர்லாந்து தரப்பில் பெர்சி, பொம்மல் மற்றும் ஸ்பெயின் சார்பில் ரமோஸ், புயோல் "எல்லோ கார்டு' பெற்றனர். ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் அலோன்சா நெஞ்சில் உதைத்த நெதர்லாந்து வீரர் நிஜல் டி யாங்கும் "எல்லோ கார்டு' பெற்றார். முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.தொடர்ந்து பிற்பாதியிலும் மஞ்சள் அட்டை பெறும் படலம் தொடர்ந்தது.
தொடர் முயற்சி

இந்த முறை நெதர்லாந்து அணியின் கேப்டன் ஜியோவானி வான் புரோன்காஸ்ட் 53வது நிமிடத்திலும் 55வது நிமிடத்தில் ஹெட்டிங்காவும் முரட்டு ஆட்டத்திற்காக மஞ்சள் அட்டை பெற்றனர். ஆனாலும் ஆட்டத்தில் சூடு குறையவில்லை. இரு அணி வீரர்ளும் கோல் அடிக்க தொடர்ந்து முயற்சித்து வந்தனர். 62வதுநிமிடத்தில் நெதர்லாந்து வீரர் ராபனுக்கு கோல் போட நல்ல வாய்ப்பு கிடைத்தது. குயித்திடம் இருந்து வந்த பாசை பெற்ற ராபன் ஸ்பெயினின் இரு தடுப்பாட்டக்காரர்களை கடந்து கோல் கம்பத்தை நோக்கி அடித்தார். பந்தை பிடிக்க பாய்ந்த ஸ்பெயின் கோல்கீப்பர் கேசிலாசின் காலில் பட்டு பந்து வெளியேறி விட்டது.
இதனால் ஸ்பெயின் மயிரிழையில் தப்பித்தது.
ஏமாற்றிய வீரர்கள்
இதேபோல் இத்தொடரில் 5 கோல் அடித்துள்ள ஸ்பெயின் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வில்லா இம்முறை ஏமாற்றம் அளித்தார். ஆட்டத்தின் 69, 76வது நிமிடத்தில் கிடைத்த அருமையான வாய்ப்பை வீணாக்கினார்.ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் ராபனுக்கு மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்து வீணானது. ஸ்பெயின் தடுப்பாட்டக்காரர்கள் அனைவரும் முன்களத்திற்கு சென்றிருந்த சமயத்தில் ராபனுக்கு ஒரு திடீர் பாஸ் கிடைத்தது. பந்தை கடத்தி வந்து கடைசியில் கோட்டை விட்டார் ராபன்.இதனால் மீண்டும் ஸ்பெயின் தப்பி பிழைத்தது. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடம் வரை கோல் எதுவும் விழாததால் ஆட்டம் டிராவில் முடிந்தது .

கூடுதல் நேரத்தில் கோல்

இதையடுத்து போட்டி, கூடுதல் நேரத்துக்கு சென்றது. 106வது நிமிடத்தில் ஸ்பெயின் சார்பில் டேவிட் வில்லாவுக்கு பதிலாக பெர்ணான்டோ டோரஸ் களமிறக்கப்பட்டார். 109வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் இனியஸ்டாவை முரட்டுத் தனமாக தடுத்த நெதர்லாந்து வீரர் ஹெடிங்கா "ரெட் கார்டு' காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதையடுத்து 10 பேருடன் நெதர்லாந்து விளையாட நேர்ந்தது. பின் ஸ்பெயின் வீரர் ரமோஸ் தலையால் முட்டி அடித்த பந்தும் இலக்கு மாறி பறந்தது.
சரி பெனால்டி ஷூட்அவுட் வரை போகக் கூடும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் 116வது நிமிடத்தில் ஸ்பெயினின் ஆன்ட்ரஸ் இனியஸ்டா அபாரமான ஒரு கோலைப் போட்டு ஸ்பெயின் ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்குக் கொண்டு சென்று விட்டார்.
பெனால்டியாக கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி பேப்ரகஸ் அடித்த பந்து இனியஸ்டாவிடம் வர அதை அழகாக உதைத்தார். அந்தப் பந்து மார்ட்டன் ஸ்டீகெலின்பர்க்கைத் தாண்டி கோலாக மாறியது.
இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியுள்ளது ஸ்பெயின்.ஆட்ட நாயகனாக இனஸ்டா தேர்வு செய்யப்பட்டார் . உலகக் கோப்பையை வென்றுள்ள நாடுகளின் வரிசையில் ஸ்பெயின் அணி 8வது நாடாக இணைந்து கொண்டது.
மேலும் வேறு ஒரு கண்டத்தில் நடந்த இறுதிப் போட்டியில் இதுவரை எந்த ஐரோப்பிய அணியும் வென்றதில்லை என்ற சாதனையையும் முறியடித்து வேறு ஒரு கண்டத்தில் உலக கோப்பையை வென்ற முதல் ஐரோப்பிய அணி என்ற புதிய சாதனையையும் ஸ்பெயின் படைத்தது.
உலக கோப்பை வென்ற ஸ்பெயின் அணி ரூ. 142 கோடி பரிசுத் தொகையை தட்டிச் சென்றது. இரண்டாம் இடம் பெற்ற நெதர்லாந்து அணி 113 கோடி ரூபாய் பரிசாக பெற்றது.

சிறந்த வீரர்கள்

இந்த உலக கோப்பை கால்பந்து தொடருக்கான சிறந்த இளம் வீரருக்கான விருதும் தாமஸ் முல்லருக்கு கிடைத்தது. சிறந்த கோல் கீப்பருக்கான விருது (கோல்டன் குளோவ்) ஸ்பெயினை சேர்ந்த இகேர் கேசிலாசுக்கு கிடைத்தது.
தங்கப்பந்து
19வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் தங்கப்பந்து விருதுக்கு 10 வீரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.
இதில் உருகுவே வீரர் டிகோ பார்லேன் வெற்றி பெற்றார். அவருக்கு தங்கப்பந்து விருது வழங்கப்பட்டது.
பார்லேன் 5 கோல்கள் அடித்துள்ளார். அவர் அடித்த கோல்கள் எல்லாமே அற்புதமானவை என்று சர்வதேச மீடியாக்கள் அவரது பெயரை தேர்ந்தெடுத்துள்ளது.

தங்கஷு

உலககோப்பை போட்டிகளில் அதிக கோல்கள் அடிக்கும் வீரருக்கு தங்கஷு வழங்கப்படும். இந்த உலக கோப்பையில் டேவிட் வில்லா (ஸ்பெயின்), ஸ்னைடர் (நெதர்லாந்து), தாமஸ் முல்லர் (ஜெர்மனி), டிகோ பார்லேன் (உருகுவே) ஆகிய 4வீரர்கள் 5 கோல்கள் அடித்து இருந்தனர்.இறுதிப்போட்டியில் வில்லாவும், ஸ்னைடரும் முத்திரை பதிக்க தவறிவிட்டனர்.
4 வீரர்கள் 5 கோல் அடித்து இருந்தாலும் குறைந்த ஷாட்களில் கோல் அடித்து இருந்ததால் ஜெர்மனி வீரர் தாமஸ் முல்லருக்கு தங்கஷு வழங்கப்பட்டது.

வெற்றி நாடுகள்
1930: உருகுவே 1934: இத்தாலி 1938: இத்தாலி 1950: உருகுவே 1954: ஜெர்மனி 1958: பிரேசில் 1962: பிரேசில் 1966: இங்கிலாந்து 1970: பிரேசில் 1974: ஜெர்மனி 1978: அர்ஜென்டினா 1982: இத்தாலி 1986: அர்ஜென்டினா 1990: ஜெர்மனி 1994: பிரேசில் 1998: பிரான்ஸ் 2002: பிரேசில் 2006: இத்தாலி 2010: ஸ்பெயின் அணிகள் இதுவரை கோப்பை வென்றுள்ளது.

அதிர்ஷ்டம் இல்லாத நெதர்லாந்து

உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் 3வது முறையாக தோல்வியை தழுவியுள்ளது.
1974ம் ஆண்டு இறுதிப்போட்டியில் ஜெர்மனியிடம் 12 என்ற கோல் கணக்கிலும், 1978ம் ஆண்டு அர்ஜென்டினாவிடம் 13 என்ற கோல் கணக்கிலும் இறுதிப்போட்டியில் தோற்று இருந்தது. தற்போது ஸ்பெயின் அணியிடம் 01 என்ற கணக்கில் தோற்றுள்ளது.

அதிகபட்சமாக

உலக கோப்பை கால்பந்து போட்டி இதுவரை 19 முறை நடைபெற்றுள்ளது. இதில் பிரேசில் அதிகபட்சமாக 5 முறை கோப்பையை கைப்பற்றி உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக இத்தாலி 4 தடவையும், ஜெர்மனி 3 முறையும், அர்ஜென்டினா, உருகுவே அணிகள் தலா 2 முறையும் சாம்பியன் பட்டம் பெற்றன. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் அணிகள் தலா ஒரு தடவையும் கோப்பையை வென்றுள்ளன.

பிரியாவிடை கொடுத்தது உலகக் கோப்பைக் கால்பந்து !

30 நாட்களாக நடந்து வந்த உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிக்கு கண்ணீர் மல்க விடை கொடுத்தது தென்னாப்பிரிக்கா.
இது ஒரு விளையாட்டுப் போட்டியாக மட்டுமல்லாமல் ஆப்பிரிக்கக் கண்டத்தின் உணர்வுகளை, மதிப்பை, கௌரவத்தை வெளிப்படுத்த அமைந்த நல்ல வாய்ப்பு என்பதே ஒவ்வொரு ஆப்பிரிக்கரின் உணர்வாக அமைந்தது.தென்னாப்பிரிக்க போர் விமானங்கள் நிகழ்த்திய சாகசக்காட்சிகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின. அதேபோல 9 கிரகங்களையும் லேசர் ஒளிகளால் உருவாக்கிக் காட்டியதும் மெய் சிலிர்க்க வைத்தது.
ஷகீராவின் வாகா வாகா பாடலும், நடனமும் அரங்கத்தையே ஆட்டம் போட வைத்தது.
லேடிஸ்மித் பிளாக் மெம்போஸா, ஸ்டோவன், அபிகெயில் குபேகா உள்ளிட்டோரின் பாடல், நடன நிகழ்ச்சிகளும் கண்ணைக் கவர்ந்தன.
தென் ஆப்பிரிக்காவின் பாரம்பரிய இசைக் கருவியான வுவுசேலாவும் கலை நிகழ்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தது.
கோலாகலமாக நடந்த தொடக்க விழாவைப் போலவே மிகுந்த நெகிழ்ச்சியுடன் கூடிய நிறைவுவிழாவை தென்னாப்பிரிக்கா நடத்திக் காட்டியது. மிகுந்த உணர்ச்சிப் பெருக்குடன் உலகக் கோப்பைக் கால்பந்துக்கு பிரியாவிடை கொடுத்தனர் தென்னாப்பிரிக்க மக்கள்.அனைத்து இன மக்களையும் இணைக்கும் ஒரே சக்தி விளையாட்டு என்பதை தென்னாப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பைக் கால்பந்து போட்டித் தொடர் நிரூபித்துள்ளது.

நிறைவு விழாவில் மடிபா

மடிபா என்று செல்லமாக ஆப்பிரிக்க மக்களால் அழைக்கப்படும் நெல்சன் மண்டலே தனது மனைவி கிரேக்கா சகிதம் வந்து ஆட்டத்தை கண்டுகளித்தார்.அவர் அரங்குக்குள் நுழைந்து முதல் இறுதி நிமிடம்வரை ஆர்ப்பரிப்புடன் கூடியதாக நிறைவு விழா அமைந்தது.
மண்டலோவின் வருகையைப் பார்த்ததும் பல தென்னாப்பிரிக்க ரசிகர்கள் ஆனந்தத்துடன் கண்ணீர் வடித்தனர். ஏதோ ஒரு மூலையில் தூக்கி வீசப்பட்டிருந்த தென்னாப்பிரிக்கா இன்று உலக அரங்கில் உயரிய நிலையில் அமர இந்த மனிதர்தானே காரணம் என்பது அந்த மக்களின் கண்ணீருக்கான அர்த்தம்.

ஸ்பெயினில் உற்சாகம்

ஸ்பெயின் அணி கோப்பையை வென்றதும் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் உற்சாக வெள்ளம் கரை புரண்டோடியது. ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் ஆடிப் பாடி மகிழ்ச்சி தெரிவித்தனர். விவா எஸ்பானா என்று கோஷமிட்டு ஆடிப் பாடினர்.
மாட்ரிடின் மையப் பகுதி மக்கள் வெள்ளத்தால் கடல் போல காணப்பட்டது.
நெதர்லாந்தில் சோகம்
நெதர்லாந்து தோல்வியைத் தழுவியதால் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் போட்டியை கண்டுகொண்டிருந்த 1 லட்சத்து 80 ஆயிரம் பேரும் மயான அமைதியில் மூழ்கினர். பலர் கண்ணீர் விட்டு அழுததைக் காண முடிந்தது.

வென்றது ஆக்டோபஸ் தோல்வியில் கிளி !

அடுத்தடுத்து அட்டகாசமான கணிப்புகளைக் கூறி அது உண்மையிலும் நடந்து பெரும் பிரபலமான ஆக்டோபஸ் பால், கணித்தபடியே இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வென்று விட்டது.
அதேசமயம், நெதர்லாந்து வெல்லும் என கூறியிருந்த சிங்கப்பூர் கிளி மணியின கணிப்பு பொய்த்துப் போய் விட்டது.

சென்னையில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி

சென்னை,ஜுலை.11
சென்னையில் இந்தியா பிரேசில் அணிகளுக்கு இடையிலான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி செபடம்பர் மாதம் நடைபெறும் என்று இந்திய டென்னிஸ் சங்கத் துணைத் தலைவர் கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார்.இந்தபோட்டிகள் செப்டம்பர் மாதம் 17 முதல் 19ஆம் தேதி வரை நடக்கிறது.
இது குறித்து கார்த்திக் சிதம்பரம் கூறியதாவது:
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி விதிகளின் படி, மாலை 4.00 மணிக்குப் பிறகு போட்டிகளைத் தொடங்கக் கூடாது என்று உள்ளதால் மக்கள் அதிகம் பார்க்கும் நேரத்தில் நடத்துவது தொடர்பாக டென்னிஸ் அமைப்புகள்,ஆட்டக்காரர்களுடன் பேசிவருகிறேன்.இப்போட்டியில் வெற்றிபெற்றால் இந்தியா உலகக் கோப்பை சுற்றுக்குமுன்னேறும் வாய்ப்புள்ளது என்று
கார்த்திக் சிதம்பரம் கூறினார்.

கால்பந்தாட்டத்திற்கு நான் அடிமை ஷகீரா


ஜோகன்னஸ்பர்க்,ஜுலை.11
19வது உலக கோப்பை கால்பந்து தொடரின் தொடக்க பாடலை பாடிய பிரபல பாப் பாடகி ஷகீரா தன்னுடைய வாகா வாகா என்ற பாடலின் மூலமூம்,தனது நெளிவு சுளிவான ஆட்டத்தின் மூலமூம் உலக கால்பந்து ரசிகர்களை தனக்கு அடிமையாக்கிவர் தற்போது கால்பந்தாட்டத்திற்கு அடிமையாகியுள்ளதாக கூறியுள்ளார்.
இது குறித்து ஷகீரா கூறும்போது :
தென்னாப்பிரிக்காவுக்கு வந்த முதல் நாளிலிருந்தே என் மீது இங்குள்ள மக்கள் அன்பைப் பொழிகிறார்கள். எனது வாகா வாகா பாடலை அத்தனை வாய்களும் முனுமுனுப்பதைப் பார்க்கவும், கேட்கவும் மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது.
இந்த ஒரு மாதமும் என்னால் மறக்க முடியாதது. மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் உள்ளேன். சமீப காலங்களில் நான் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தது இந்த தென்னாப்பிரிக்க பயணத்தில்தான்.
இங்குள்ள மக்கள் மிகவும் அன்பானவர்கள், பாசமானவர்கள். என் மீது அவர்கள் வைத்துள்ள பாசத்தையும், அன்பையும் என்னால் முழுமையாக விவரிக்க முடியவில்லை. எனது வாகா வாகா பாடல் இங்கு இந்தஅளவுக்கு பிரபலமாகியிருப்பது மகிழ்ச்சி தருகிறது.
நான் தென்னாப்பிரிக்காவுக்கு முதல் நாள் வந்து இறங்கியபோது குடியேற்றப் பிரிவு அதிகாரிகளும், ஊழியர்களும் வாகா வாகா பாடலை பாடியபடி வரவேற்றதைப் பார்த்து குஷியாகி விட்டேன்.
இப்போது என்னால் கால்பந்து இல்லாமல் சுவாசிக்கவே முடியாத அளவுக்கு கால்பந்துக்கு அடிமையாகி விட்டேன்.செய்தித்தாள்களின் விளையாட்டுப் பக்கத்தை பார்க்காமல் இருக்க முடியவில்லை.
விளையாட்டுக்கு அதிக ஆர்வம் காட்டாத என்னை இப்படி தூண்டி விட்டது கால்பந்துதான். கால்பந்து அற்புதமான விளையாட்டு. அதில் சந்தேகமே இல்லை.
நான் இந்த ஒரு மாத காலத்தில் 3 போட்டிகளை மட்டுமே நேரில் பார்த்தேன். தொடக்க நிகழ்ச்சிக்குப் பின்னர் நடந்த மெக்சிகோதென் னாப்பிரிக்கா போட்டி மற்றும் அர்ஜென்டினாநைஜீரியா போட்டி. அடுத்து ஸ்பெயின்பராகுவே போட்டியைப் பார்த்தேன்.
நான் லத்தீன் அமெரிக்க அணிகளையே ஆதரிக்கிறேன். காரணம், உலகக் கோப்பைப் போட்டிகளில் அவர்கள்தான் அபாரமான ஆட்டத்தைக் கொடுக்கிறார்கள். அர்ஜென்டினா, பிரேசில், உருகுவே, பராகுவே ஆகிய அணிகளின் ரசிகை நான். நான் அடிப்படையில் ஸ்பெயின் பூர்வீகம் கொண்டவள். எனவே ஸ்பெயினை ஆதரிக்க வேண்டியது எனது கடமையாகும்.