

டர்பன், ஜூலை. 9
ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின் 10 என்ற கணக்கில் ஜெர்மனி அணியை வீழ்த்தி முதன் முறையாக உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிபோட்டிக்குள் நுழைந்ததுள்ளது .
உலக கோப்பை கால்பந்து
ஆப்பிரிக்க கண்டத்தில் நடைபெறும் முதலாவது உலக கோப்பை தொடர் என்ற பெருமையுடன் தென்னாப்பிரிக்காவில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. டர்பன் மைதானத்தில் 2வது அரை யிறுதி ஆட்டத்தில் உலக தர வரிசையில் 2வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின், 6வது இடத்தில் இருக்கும் ஜெர்மனி அணிகள் மோதின.
ஆட்டம் தொடங்கியதில் இருந்தே ஸ்பெயின் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள். இந்த உலகக் கோப்பை போட்டிகளில் மிக அதிகமான கோல்களை (19) அடித்த பெருமையுடன் அரையிறுதிக்கு வந்த ஜெர்மனி அணியின் அதிரடி முன்னணி ஆட்டக்காரர்களை தங்களின் டி பகுதிக்குள் நெருங்கவிடாமல் விளையாடியது ஸ்பெயின் அணி.
வாய்ப்புகளை வீணடித்த வீரர்கள்
ஜெர்மனி அணி நான்கு தடுப்பாட்டக்காரர்களுடன் பலமான அரண் அமைத்து நின்றாலும் அந்த அணியின் டிக்குள் நன்றாக புகுந்து தாக்குதல் நடத்தியது ஸ்பெயின் .இரு அணிகளும் தங்களுக்கு கிடைத்த கார்னர் கிக் வாய்ப்புகளை வீணடித்தன.ஸ்பெயின் 13 வது நிமிடத்திலும் , ஜெர்மனி 15 மற்றும் 16 வது நிமிடத்திலும் வாய்ப்புகளை வீணடித்தன. 13வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு கிடைத்த வாய்ப்பை முன்னணி வீரர் டேவிட்வில்லா அடிக்க ஜெர்மனி கோல் கீப்பர் மானுவேல் தடுத்து விட்டார்.இதே போல் ஸ்பெயின் அணியின் இனஸ்ட்டா ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் மிக குறைவான தூரத்தில் இருந்து அடித்த பந்தை கோலை நோக்கி தலையால் முட்டினார் புயோல், பந்து கோல் கம்பத்திற்கு மேல் பறந்தது. ஆட்டத்தின் 27 வது நிமிடத்தில் ஜெர்மனியின் நட்சத்திர வீரர் பொடோல்ஸ்கியின் காலில் வேண்டுமென்றே பலமாக தாக்கினார் ஸ்பெயினின் ரோமாஸ். இதனால் பொடோல்ஸ்கி காயம் அடைந்தார். இதனை ரெப்ரிகவனிக்காததால், ரோமாஸ் தப்பத்தார். 44 வது நிமிடத்தில் கிடைத்த பிரி கிக் வாய்ப்பை, ஸ்பெயின் வீரர் புயோல் வீணடித்தார்.முதல் பாதியில் இரு அணிகளும் கோலடிக்க முயன்றும் இரு அணிகளாலும் கோலடிக்க முடியவில்லை.
ஸ்பெயின் ஆதிக்கம்
2வது பாதி ஆட்டத்திலும் ஸ்பெயின் வீரர்கள் தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். 58வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. பெடரோ அடித்த பந்தை ஜெர்மனி கோல் கீப்பர் மிகவும் அருமையாக தடுத்தார். அடுத்து இனஸ்டா பந்தை குறுக்கே அடிக்க வில்லா ஓடி வருவதற்குள் பந்து கடந்து சென்றது.
ஆட்டத்தின் 73வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி கோல் அடித்து ஜெர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்தது. கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஷவி பந்தை அடிக்க அதை கார்லஸ் பயோல் தலையால் முட்டி மிகவும் அருமையாக கோல் அடித்தார்.கோல் விழுந்த அதிர்ச்சி யால் ஜெர்மனி வீரர்கள் அதிரடி தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். அந்த அணிக்கு கிடைத்த வாய்ப்பை அந்த அணியின் நடு கள வீரர் டோனி குரூஸ் தவறவிட்டார். அவர் அடித்த பந்தை ஸ்பெயின் கோல் கீப்பர் தடுத்து விட்டார்.ஸ்பெயினுக்கு பதிலடி கொடுக்க ஜெர்மனி போராடியது. இருப்பினும் பலன் எதுவும் கிடைக்க வில்லை. இத்தொடரின் காலிறுதிப் போட்டியில் "எல்லோ கார்டு' பெற்ற தாமஸ் முல்லர் இடம் பெறாதது, ஜெர்மனிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் அணியின் மத்திய கள வீரர்களின் செயல்பாடு படுமந்தமாக இருந்தது. குளோஸ், பொடோல்ஸ்கி இருவரும் சாதிக்க தவறினர்.
ஆட்டம் முடியும் தருவாயை நெருங்கி கொண்டிருந்த போது ஸ்பெயினுக்கு 2வது கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை பெடரோ தவறவிட்டார், ஜெர்மனி அணியால் இறுதி வரை பதில் கோல் போட இயல வில்லை. இதனால் யூரோ சாம்பியன் ஸ்பெயின் அணி 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதல் முறையாக உலககோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேறியது.
3 முறை சாம்பியனான ஜெர்மனி அணியின் சகாப்தம் அரையிறுதியோடு முடிந்தது.
2008ம் ஆண்டு நடந்த ஐரோப்பிய கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் வீழ்ந்தது. அதே மாதிரி தற்போதும் ஜெர்மனி அந்த அணியிடம் தோற்றுள்ளது.இறுதிப்போட்டியில் ஸ்பெயின் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.ஆட்ட நாயகனாக
அலன்சோக்சாபி தேர்வு செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment