Monday, October 6, 2014

ஆங்கிலத்தில் cause என்றால் காரணம் என்றுதானே அர்த்தம்? அப்படித்தானே. ‘Loss of plenty of blood can cause death’. ‘Stress can cause heart attack’ போன்ற வாக்கியங்களைப் பயன்படுத்துகிறோம்.
Cause என்றால் ஒரு செயல் அல்லது சூழலுக்குக் காரணமாக அமையும் நபர் அல்லது பொருள் எனலாம். ‘The cause of the fire is not clear’ என்பது ஓர் உதாரணம். Cause என்பதற்குக் கிட்டத்தட்ட சமமான வார்த்தைகளாக origin, source, starting point போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
ஒரு நிகழ்வுக்குக் காரணமான சம்பவம், பொருள் அல்லது நபரை cause என்று குறிப்பிடலாம். The major cause of the road accidents is rash driving.
ஒரு குறிப்பிட்ட விதத்தில் நடந்து கொள்வதற்கான காரணத்தையும் cause என்று குறிப்பிடலாம். His exit was cause for happiness in the area என்பதுபோல்.
ஆக, சுற்றிச் சுற்றிக் ‘காரணம்’ என்ற பொருளைச் சுற்றித்தான் cause என்பதன் பொருள் வருகிறது.
வாசகர் ஒருவர் பல வாக்கியங்களை அனுப்பி, அவை ஒவ்வொன்றிலும் ஒரு வார்த்தையை அடிக்கோடிட்டு அதற்கான அர்த்தத்தை விளக்கக் கோரியிருக்கிறார். அவற்றில் ஒன்றான ‘Supporter of the Palestinian cause’ என்பதன் கடைசி வார்த்தையில் வாசகருக்குக் குழப்பம்.
வாசகரின் குழப்பத்திற்குக் காரணம் cause என்பதன் பொதுவான பொருளில் ​Palestinian cause என்பது பயன்படுத்தப்படவில்லையே என்பதாக இருக்க வேண்டும்.
Cause என்பது இங்கு வேறொரு பொருளில் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ஒரு கொள்கை அல்லது இயக்கத்துக்காக அர்ப்பணித்துக்கொண்டு அதைப் பாதுகாக்க முன்வருகிறீர்கள். அந்தக் கொள்கை அல்லது இயக்கத்தை cause எனலாம். வாசக நண்பர் குறிப்பிடும் வாக்கியத்தில் உள்ள cause என்பது இந்த வகைதான்.
புகைப்படங்களின் கீழ் Cuban Cause என்றும் Black Suffrage என்றும் குறிப்பிட்டிருப்பதுகூட இந்தப் பொருளில்தான். (Suffrage என்றால் வாக்குரிமை என்று பொருள்)
சில சமயம் because என்ற வார்த்தையைக்கூட cause என்று சுருக்கமாகக் குறிப்பிடுகிறார்கள்.
Poly-யின் பன்முகம்
ஆங்கிலத்தில் சில வார்த்தைகளின் அர்த்தங்களைப் புரிந்துகொண்டால், அவற்றுடன் இணைந்து வரும் பிற வார்த்தைகளையும் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். அந்த விதத்தில் Poly என்ற வார்த்தையைப் பார்க்கலாம்.
Poly என்றால் ‘பல’ என்று பொருள். Pentagon என்றால் ஆறு பக்கங்கள் கொண்ட உருவம் என்று அர்த்தம். Hexagon என்றால் ஆறு பக்கங்கள். Polygon என்றால்? இப்போது Poly என்றால் பல என்பது நமக்குத்​ தெரியும். எனவே பல பக்கங்கள் கொண்ட உருவம்தான் Polygon என்பதை உங்களால் யூகிக்க முடியும்.
Polytechnic என்றால்? பல தொழில் சார்ந்த கல்விகளைத் தரும் அமைப்பு. Polyclinic என்றால் பலவித வியாதிகளுக்கும் தீர்வளிக்க முயலும் மருத்துவ மையம். Polygamy என்றால் பலதார மணம் என்று அர்த்தம். ​Polyester என்று ஒரு வகைத் துணியைக் குறிப்பிடுகிறோம் அல்லவா, அதற்குப் பலவித (ரசாயனப் பிரிவைச் சேர்ந்த) எஸ்டர்களின் இணைப்பு என்று பொருள்.
Polymath என்றாலும் Polyhistor என்றாலும் ஒரே பொருள்தான் பரவலான அறிவாற்றல் கொண்டவர்.
Apprise - Appraise
Apprise என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? ‘தெரியப்படுத்துதல்’ என்று அர்த்தம். அதாவது Inform என்று பொருள். Apprise this information என்றால் இந்தத் தகவலைத் தெரியப்படுத்து என்று பொருள்.
சிலர் இந்த வார்த்தையை Appraise என்ற வார்த்தையுடன் சேர்த்துக் குழப்பிக்கொள்வதுண்டு. எனவே Appraise என்ற – அதிகப்படியாக ஒரு a நடுவில் சேர்க்கப்பட்ட – வார்த்தைக்கான அர்த்தத்தையும் தெரிந்துகொள்ளலாம். பாராட்டுதல் என்ற அர்த்தம் தரும் Praise என்ற வார்த்தை உள்ளடக்கியிருப்பதால் அதே அர்த்தத்தைத்தான இதுவும் தரும் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. Appraise என்றால் மதிப்பிடுதல் என்று அர்த்தம்.
அதனால்தான் நிறுவனங்களில் ஊழியர்களை மதிப்பிடும் முறையை Appraisal என்று குறிப்பிடுகிறார்கள். ஊழியர்களின் திறமைகளை மதிப்பிடும் Performance Appraisal பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்களே? நகைகளை மதிப்பிடுபவரை Jewel Appraiser என்றும், நிலங்களை மதிப்பிடுபவரை Land Appraiser என்றும் குறிப்பிடுவதை நீங்கள் அறிவீர்கள்தானே?
வாசகர் ஒருவர் ‘நானான நானில்லை தாயே’ என்ற வாக்கியத்தை ஆங்கிலத்தில் எப்படி எழுதலாம் என்று கேட்டிருந்தார். ஒரு திரைப்பாடலின் தொடக்க வரி இது. எளிமையாகத்தானே இருக்கிறது என்று தோன்றியது. ஆனால் யோசித்துப் பார்த்தால், அதற்கான கீ​ழே உள்ள இருவித மொழி பெயர்ப்புகளும் உணர்த்தும் அர்த்தங்களுக்கிடையே உள்ள மெல்லிய வேறுபாட்டை உணர முடிகிறதா?
1) O Mother, I Am Not What I Am
2) O Mother, I Am Not As I Was
கொஞ்சம் நேரமும், அதிக ஆர்வமும் இருப்பவர்கள் கீழே உள்ள மொழிபெயர்ப்புகள் எந்தத் திரைப் பாடல்களின் தொ​டக்க வரிகள் என்பதை யோசிக்கலாமே. (இரண்டும் கமலஹாசன் வாயசைத்த பாடல்கள்)
1) If You Focus Only On Stone, God Will Be Invisible.
2) Oh, The Jewel Among Women, Oh The Angel Of Forest, Sing A Song
தொடர்புக்கு:
aruncharanya@gmail.com
நம்புங்கள். போன வாரம் தெருவில் நான் பார்த்த நிகழ்ச்சி இது. இரண்டு நண்பர்கள் (!) காரசாரமாகப் பேசியபடி நடந்து கொண்டிருந்தனர். ஒருவன் திடீரென்று ‘’நீ என்ன லூஸாடா?’’ என்று கேட்டான். அதற்கு இன்னொருவன் ‘’என்னை லூஸுன்றியே, உனக்கு லூஸுக்கு ஸ்பெல்லிங் தெரியுமா? பெரிசா பேச வந்துட்டான்’’ என்றான். முதல்வன் முகத்தில் பெரும் அதிர்ச்சி. மவுனமாகி விட்டான். நம்புங்கள்.
Lose, Loose ஆகிய இரண்டு சொற்களையுமே லூஸ் என்றுதான் சொல்வோம். ஆனால் இவற்றின் அர்த்தங்கள் வேறுவேறு.
Lose என்பது ‘இழத்தல்’ என்பதாகும். Losing Money, Losing Time என்பது போல.
Loose என்பது ‘இலகுவாக, தளர்வாக இருத்தல்’ எனும் அர்த்தத்தைத் தருகிறது.
இரண்டு சொற்களுக்குமான எதிர்ச் சொற்களைக் கூறினால், மேலும் எளிதாக விளங்கிவிடும்.
Lose என்பதற்கு எதிர்ச்சொல் Gain. Loose என்பதற்கு எதிர்ச்சொல் Tight.
‘’என் சட்டை ரொம்ப லூஸாக இருக்கிறது’’ என்றால் நீங்கள் உணர்த்தும் சொல் loose.
மற்றொரு வாசகர் in, at ஆகிய இரண்டு சொற்களுக்கிடையே தனக்கு உண்டாகும் குழப்பத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். கூடவே இவற்றைப் பயன்படுத்துவதற்கான பொதுவான விதிகள் உண்டா என்றும் கேட்டிருந்தார்.
ஒட்டுமொத்தமாக அன்னப் பறவை போல பிரித்துக் கூறிவிட முடியாது. என்றாலும் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.
நேரத்தைக் குறிப்பிடும்போது at என்பதைப் பயன்படுத்துகி றோம். Please Come At 9.00 A.M. அல்லது We Will Meet At 5.00 P.M. என்பது போல்.
மதியம், இரவு, நள்ளிரவு போன்ற காலங்களைக் குறிப்பிடும்போதும் அவற்றிற்கு முன்னால் at என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். He Came At Noon. They Met At Midnight.
மாதங்களைக் குறிப்பிடும்போது அவற்றிற்கு முன்னால் நாம் பயன்படுத்துவது in என்ற Preposition.
We Are Flying To Singapore In July. My Birthday Is In October
ஆகியவை இரு உதாரணங்கள்.
ஆனால் அடுத்து வரும் வாக்கியத்தில் on என்ற சொல்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைக் கவனியுங்கள்.
We Shall Meet On 10th March At 3.30 P.M.
காரணம் நாட்களைக் குறிப்பிடும்போது, on என்ற சொல்லைத்தான் அவற்றிற்கு முன்னால் பயன்படுத்த வேண்டும்.
இப்போது வேறொரு வாக்கியத்தைப் பார்ப்போம். The Examination Is Scheduled To Commence On July 20th.
என்ன இது, மாதத்தின் பெயருக்கு முன்னால் in போடாமல், on என்பது பயன்படுத்தப்பட்டிருக்கிறதே என்று குழம்ப வேண்டாம். மேற்படி வாக்கியத்தில் குறிப்பிடப்படுவது July 20th. (அல்லது 20th July) எனும் தேதிதான். எனவேதான் On July 20th என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
கிழமைகளைக் குறிப்பிடும் போதும், அதற்கு முன் இடம்பெற வேண்டிய Preposition ‘on’ என்பதுதான். I Will Come On Sunday. Parties Are Held On Saturdays என்பதுபோல.
வாசக நண்பருக்குக் குழப்பம் வேறொரு கோணத்தில் இருந்திருக்கக்கூடும். அவர் ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறார் என்றால் “I Am Staying At Hotel Impala’’ என்பதா? அல்லது “I Am Staying In Hotel Impala’’ என்பதா?
இங்கே at என்பதைத்தான் பயன்படுத்த வேண்டும். I Am Staying At Hotel Impala In Chennai எனலாம்.
சிறிய ஊர்களைக் குறிப்பிடும்போது அவற்றிற்கு முன்னால் ‘at’ என்றும் பெருநகரங்களுக்கு முன்னால் ‘in’ என்றும் பயன்படுத்துங்கள். I Live In Madurai. I Live At Navalur. We Live At Mylapore In Chennai.
கிணற்றுத் தவளைகளில் ஒன்று மற்றொன்றிடம் இப்படிப் பேசுமோ? ‘’உலகத்திலேயே கிணறுதானே பெரிசு? அதனாலே We Live In Well. சரிதானே?’’. இதற்கு மற்றொரு தவளையின் பதில் என்னவாக இருக்கும்? ஒருவேளை “Well, You Said Well’’ என்பதாக இருக்குமோ?
Ambi (அம்பி இல்லை ஆம்பி) என்றால் ‘இரண்டு’ என்ற அர்த்தம் கொள்ளலாம். ஒருவரை Ambidextrous என்று வர்ணித்தால் அவர் தன் வலது கை, இடது கை இரண்டையுமே சமமாக, சிறப்பாகப் பயன்படுத்தக் கூடியவர் என்று பொருள். முக்கியமாக கிரிக்கெட், டென்னிஸ் போன்றவற்றில் இரு கைகளாலும் பேட்டை அல்லது ராக்கெட்டை எளிதாகக் கையாளக்கூடியவரை இப்படி வர்ணிப்பதுண்டு.
Ambiguity என்றால் குழப்பம் என்று பொதுவாக நாம் நினைத்திருந்தாலும் அதற்கான அர்த்தம் சற்றே மாறுபட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட விளக்கங்கள் அளிக்கப்படலாம் எனும்போது இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதுண்டு. அதாவது திட்டவட்டமாக இது ஒன்றுதான் என்று கூற முடியாத நிலை. This Act Has An Ambiguity என்றால் அந்தச் சட்டத்தின் ஒரு பகுதியை விதவிதமாகப் ( நேரெதிராகப்) பொருள் கொள்ள முடியும்.
ஆனால் Ambience என்ற வார்த்தையை இவற்றுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம். அந்த வார்த்தை Ambi என்று தொடங்கினாலும், அதன் அடிப்படை வார்த்தை Ambi அல்ல. Ambience என்றால் ஒரு இடத்தின் தன்மை அல்லது சூழல் என்று பொருள். The Ambience Of The Hotel Is Very Pleasing.
சென்ற இதழில் இரண்டு தமிழ்த் திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளை ஆங்கிலத்தில் கொடுத்து அவை என்ன பாடல்கள் என்பதைக் கண்டுபிடிக்கச் சொல்லியிருந்தேன். விடைகள் இதோ.
If You Focus Only On Stone, God Will Be Invisible கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது.
Oh, The Jewel Among Women, Oh, The Angel Of Forest. Sing A Song - வனிதாமணி, வனமோகினி, பண் பாடு.
இந்தப் பகுதியிலும் இரண்டு பாடல்களின் தொடக்க வரிகள் ஆங்கிலத்தில் அளிக்கப்பட்டுள்ளன. பாடல்களைக் கண்டுபிடியுங்கள்.
1) We Should Live Like That Bird. We Should Dance Like Those Waves.
2) Is This Life A Riddle? Who Shall Provide The Solution?
தொடர்புக்கு:
aruncharanya@gmail.com
​சென்ற வாரத்தில் Affection, Honesty ஆகிய சொற்கள் Nouns என்று குறிப்பிட்டதில் நண்பர் ஒருவருக்குப் பலத்த சந்தேகம்.
அப்படியானால் Love என்பதும் Noun-தானா? ஆமாம் என்றால் I Love You என்பதில் இடம் பெறும் Love Verb-தானே? ஆக Love என்பது Nounஆ? Verbஆ? என அவர் பல கேள்விகளை எழுப்புகிறார்.
சொல்லின் பல அவதாரங்கள்
ஆங்கிலத்தில் பல வார்த்தைகளை விதவிதமாகப் பயன்படுத்த முடியும். Love என்ற ஒரே வார்த்தையை வைத்துக் கொண்டு அது Nounஆ Verbஆ என்று சொல்ல முடியாது. அது பயன்படுத்தப்படும் விதத்தைக் கொண்டுதான் அதைச் சொல்ல முடியும்.
Love Is A Pleasant Feeling என்பதில் Love Noun ஆகப் பயன் படுத்தப்பட்டிருக்கிறது. I Love You அல்லது He Loves Her என்பதில் Love Verbஆகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
கீழே உள்ள வாக்கிய​ங்களில் அடுத்தடுத்து ஒரே வார்த்தை எப்படி Noun ஆகவும் Verb ஆகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்.
This Is An Act Of Mercy.
Do Not Act Like A Fool.
Write The Address.
You Have To Address The Issue.
Divorce Should Be The Last Step.
I Want To Divorce You.
The Delay Is Not Accepted.
Do Not Delay Sending The Mail.
இப்போது ஒரே வாக்கியத்தில்
ஒரே வா​ர்த்தை Noun, Verb ஆகிய
இரண்டாகவும் பயன்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.
Drink The Drink.
Do Not Trick Me With Your Trick.
ஆசிரியரும் மாஸ்டரும்
ஆசிரியருக்கும் ஸ்டேஷன் மாஸ்டருக்கும் உள்ள வேறுபாடு என்ன என்று ஒரு கேள்வி உ​ண்டு. இதற்கான பதில் “A Teacher Trains The Mind. A Station Master Minds The Train” என்பதாகும். இதில் முதல் வாக்கியத்தில் Train என்பது Verbஆகவும், இரண்டாவது வாக்கியத்தில் Train என்பது Noun ஆகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் முதல் வாக்கியத்தில் Mind என்பது Nounஆகவும், இரண்டாவது வாக்கியத்தில் Mind என்பது Verbஆகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. Love All என்பது அனைவரையும் நேசி என்ற அழகான வார்த்தை. இதில் Love என்பது Verbஆகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
டென்னி​ஸ் விளையாட்டில் Love All, Love One என்றெல்லாம் ஸ்கோர்கள் அளிக்கப்படுகின்றன. இவற்றில் உள்ள Love எப்படிப் பயன்படுத்தப்பட்டுள்ளது? Nounஆகவா? Verbஆகவா? யோசியுங்கள்.
Pre - Post
​Pre என்றால் முன்னதாக என்ற அர்த்தம். Preplan என்றால் முன்னதாகவே திட்டமிடு என்று பொருள். ​Preview என்றால் மற்றவர்களுக்கு முன்னதாகவே பார்த்தல் என்ற அர்த்தம். Post என்றால் (தபால் என்பதைத் தவிர) பிறகு என்று அர்த்தம். Prepaid Connection, Post Paid Connection ஆகியவை நமக்குத் தெரிந்தவைதானே!
Postpone என்ற வார்த்தை ஆங்கிலத்தில் உண்டு. தள்ளிப் போடுதல் என்று இதற்கு அர்த்தம். ஆனால் சிலர் ​Prepone என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். அதாவது 18-ம் தேதி நடக்கவிருந்த சந்திப்பை இரு நாட்களுக்கு முன்பாகவே வைத்துக் கொள்ளலாம் (அதாவது 16-ம் தேதியே சந்திக்கலாம்) என மாற்றியமைத்தால் அது Prepone செய்வதாம். இது தப்பு. Prepone என்ற வார்த்தை ஆங்கிலத்தில் கிடையாது.
Check, Cheque
Check என்றால் சரிபார்த்தல் என்று பொருள். Checking Inspector, Ticket Checker என்றெல்லாம் சொல்வது இந்தப் பொருளில்தான்.
Cheque என்பது காசோலை. “செக், கிரடிட் கார்டு ஆகியவற்றைப் பெற முடியாது. ரொக்கம் மட்டும்தான்’’ என்பதில் பயன்படுத்தப்படும் செக், Chequeதான். (இன்னொன்றைக் கவனித் திருக்கிறீர்களா? Q என்ற எழுத்து எங்கே வந்தாலும் அதைத் தொடர்ந்து U என்ற எழுத்து கட்டாயம் வரும்).
ஆங்கிலத்தைப் பொறுத்தவரை எல்லோருக்கும் ஒரு வழி என்றால் அமெரிக்கர்களுக்குத் தனி வழிதானே? அவர்கள் காசோலையைக்கூட Check என்றே குறிப்பிடுகிறார்கள்.
ஆங்கிலத்தில் சினிமா பாடலின் வரி
இன்று Love பற்றி அதிகமாகப் பேசி விட்டதால் நலம் விசாரிக்கும் சில தமிழ்ப் பாடல்கள் நினைவுக்கு வருகின்றன. அவற்றின் முதல் வரியின் ஆங்கில வடிவம் இவை. எந்தப் பாடல்கள் என்பதை நீங்கள் கண்டுபிடியுங்கள்.
1. Are You Well?
2. Are You Well My Dear?
3. Hi Dear, Are You Well?
பல வருடங்களுக்குமுன் ஒரு பார்ட்டிக்குச் சென்றிருந்தேன். அப்போது Buffet விருந்தைச் சாப்பிட்டு முடித்தவுடன் ஒருவர் வந்து “Dessert சாப்பிடவில்லையா?’’ என்றார். பாலைவனத்தைச் சாப்பிட முடியுமா? என்று மலைத்துப்போனேன். “வாயைக் காட்டு’’ என்று யசோதை சொன்னவுடன் திறந்த கண்ணனின் வாயில் உலகமே தெரிந்ததே, அதுபோல நம் வாயிலும் சஹாரா, கோபி, தார் எல்லாமே தெரியுமோ என விபரீத எண்ணங்கள் வேறு வந்தன.
இப்படி எண்ணம் தறிகெட்டு ஓடியதற்குக் காரணம் Desert என்ற வார்த்தைக்கும் Dessert என்ற வார்த்தைக்கும் உள்ள வித்தியாசத்தை அப்போது நான் அறியாததுதான். Desert என்பது பாலைவனம் - ஐந்து வகை நிலங்களில் – மணலும், மணலைச் சார்ந்த இடமும்.
Dessert என்பது உணவின் கடைசிப் பகுதி (அப்படியானால் நம் தென்னிந்திய உணவில் மோர் சாதம்தான் Dessertஆ என்று கேட்டு விடாதீர்கள்) பஃபே பார்ட்டிகளில் இறுதியில் எடுத்துக்கொள்ளப்படும் பழங்கள், ஸ்வீட் மற்றும் ஐஸ்க்ரீம் ஆகியவைதான் பொதுவாக Dessert எனப்படுகின்றன.
எண்ணக்கூடிய பெயர்கள்
“எண்ணிப் பார்க்கக்கூடிய ஒன்றைச் சொல்லுங்கள்’’ என்றேன் ஒரு நண்பரிடம்.
“ஒன்றென்ன? நிறையச் சொல்வேன். மத்தவங்க நமக்குச் செய்த நன்மையை எண்ணி எண்ணிப் பார்ப்பதுதான் நல்லது’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.
Think என்கிற பொருளில் வரும் எண்ணிப் பார்ப்பது அல்ல, Count என்கிற பொருளில் வருகிற எண்ணிப் பார்ப்பது என்று விளக்கினேன்.
Nouns களைத்தான் Count செய்ய முடியும். ஏனென்றால் அவற்றுக்குத்தானே ஒருமை, பன்மை?
உங்கள் குடும்பத்தில் எவ்வளவு பேர்? (உங்கள் செல்ல நாயைச் சேர்த்துக் கொள்வது உங்கள் இஷ்டம்).
இந்தக் கேள்விக்கு ஏதோ ஒரு எண்ணைப் பதிலாகத் தர முடியும் அல்லவா?
இந்தக் கட்டுரையில் எவ்வளவு வார்த்தைகள்? இந்தக் கேள்விக்கும் உங்களால் ஏதோ ஒரு எண்ணைப் பதிலாகத் தர முடியும். (அதற்காகக் கட்டுரையில் உள்ள வார்த்தைகளை எண்ணிக்கொண்டிருக்காதீர்கள்).
இப்படி எண்ணக்கூடிய Nouns
எ​ல்லாம் Countable Nouns.
எண்ணமுடியாத பெயர்கள்
எண்ண முடியாத Nouns கூட உண்டா என்கிறீர்களா? ஏன் இல்லை? Water கூட ​Nounதான். அதை எண்ண முடியுமா?
“முடியுமே. நான்கு பக்கெட் தண்ணீர் எனலாமே’’ என்கிறீர்களா? நான்கு பக்கெட் தண்ணீர் எனும்போது நீங்கள் எண்ணுவது பக்கெட்டைத்தான், தண்ணீரை அல்ல.
“ஐம்பது லிட்டர் தண்ணீர் என்று சொல்லலாமே’’ என்கிறீர்களா? சரிதான். ஆனாலும் தண்ணீரை அளக்க முடியுமே தவிர, எண்ண முடியாது. We Can Measure Water. But We Cannot Count Water.
சிலவற்றை எண்ண முடியும். சிலவற்றை எண்ண முடியாது. இப்போது அதற்கு என்ன?
இந்த வேறுபாட்டை உணர்ந்து கொண்டு சரியான வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும். அதுதான் விஷயம்.
Few வும் Less ம்
இப்போது கீழே உள்ள நான்கு வாக்கியங்களையும் ஆங்கிலப்படுத்துங்கள்.
1. நாற்காலிகள் கொஞ்சமாக இருக்கின்றன.
2. தண்ணீர் குறைவாக இருக்கிறது.
3. ஐம்பதுக்கும் குறைவான நபர்களே இருந்தனர்.
4. அவனுக்குக் குறைவான அறிவுத் திறன்தான்.
கொஞ்சமான, குறைவான என்ற வார்த்தைகளுக்கு இணையாக நீங்கள் பயன்படுத்திய வார்த்தைகள் எவை? Few? Less? ஒரே அர்த்தம் கொண்டவைதான். ஆனால் எதை எங்கே பயன்படுத்த வேண்டும் என்பதில் வேறுபாடு இ​ருக்கிறது.
1. There Are A Few Chairs.
2. Water Is Less.
3. There Were Fewer Than Fifty Persons.
4. He Has Less Intelligence.
இரண்டு வாக்கியங்களில் Few என்ற வார்த்தையையும் மற்ற இரண்டு வாக்கியங்களில் Less என்ற வார்த்தையையும் பயன்படுத்தியிருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.
Few என்பதை Countable Nounக்குப் பயன்படுத்த வேண்டும். I Have Only A Few Pens என்பதுபோல.
Less என்பதை Non-Countable Nounக்குப் பயன் படுத்துவோம். There Is Less Water In The Pot என்பதுபோல.
Few–ம் A Few-ம்
இந்த இடத்தில் வேறொன்றையும் தெரிந்து கொள்வோமே. எப்போது Few? எப்போது A Few?
ஆங்கில மரபுப்படி குறைவான என்றால் A Few. எதுவுமே இல்லையென்றால் Few.
அதாவது A Few Decisions Were Taken At The Meeting என்றால் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன என்று அர்த்தம். மாறாக Few Decisions என்று மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தால் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று அர்த்தம்.
அதேபோல அதிகமான என்பதற்கும் இரண்டு விதமான வார்த்தைகள் உண்டு. More, Much. இவற்றில் More என்பதைக் Countable Nounக்கும், Much என்பதை Non-Countable Nounக்கும் பயன்படுத்த வேண்டும். I Have More Pens. There Is Much Water In The Pot.
பாடல் வரிகளின் விடை
சென்ற முறை சில தமிழ்திரைப்படப் பாடல்களின் தொடக்க வரிகளை ஆங்கிலத்தில் அளித்திருந்தேன். விடைகள் இதோ:-
1. Are You Well? – நலந்தானா? (உடலும் உள்ளமும் நலந்தானா?)
2. Are You Well My Dear? – சவுக்கியமா கண்ணே (சவுக்கியமா?)
3. Hi Dear, Are You Well? – என்னம்மா கண்ணு சவுக்கியமா?
மேலும் சில பாடல் வரிகளை நீங்களே ஆங்கிலப்படுத்திப்பாருங்கள்.
தொடர்புக்கு:
(aruncharanya@gmail.com)
சில ஆங்கில வார்த்தைகளில் மவுன எழுத்துகள் (Silent letters) ஏன் இருக்க வேண்டும் என்று வாசகர் ஒருவர் கேட்டிருக்கிறார். Psycho என்பதை சைகோ என்கிறோம். அப்படியிருக்க ‘P’ என்ற எழுத்து அங்கே எதற்காக? Island என்பதை ஐலண்ட் என்கிறோம். பின் எதற்காக ‘S’ என்ற எழுத்து?.
இரத்தமா? ரத்தமா?
தமிழில் இல்லையா? ‘‘நான் இன்று இரத்த தானம் செய்தேன்’’ என்றா சொல்வீர்கள்? ரத்தம்தானே? இயந்திரம் என எழுதினாலும் யந்திரம்தானே. (ஆனாலும் ஆங்கிலத்தில் மவுன எழுத்துகள் கணிசமானவைதான்).
ஆங்கிலத்தில் மவுன எழுத்துகள் இடம் பெற வேறொரு முக்கிய காரணம் உண்டு. ஆங்கிலம் பல மொழிகளிலுள்ள வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு வளர்ந்து செழித்த மொழி. எனவே மூல மொழியின் சாயல் அதில் அடிப்பது தவிர்க்க முடியாதது.
கடன் என்பதை Debt என்று குறிப்பிடுகிறோம். இதில் ‘B’ மவுன எழுத்து.
லத்தீன் வார்த்தையான debitum என்பதிலிருந்து தோன்றிய வார்த்தை இது. எனவே அந்த ‘b’ ஆங்கிலத்துக்குள்ளும் இடம் பெற்று விட்டது.
‘வெட்னெஸ்டே யா? வெனஸ்டே யா?
‘‘வெட்னெஸ்டே அன்னிக்கு ஒரு ஸான்ட்விச் சாப்பிட்டேன்’’ என்று
அழுத்தம் திருத்தமாகச் சொல்லக் கூடாது. Wednesday என்பதில் ‘d’ மவுன எழுத்து. எனவே ‘வெனஸ்டே’’ என்றுதான் கூறவேண்டும். அதேபோல Sandwitch என்பதிலும் ‘d’ மவுன எழுத்து. எனவே ஸான்விச் என்றுதான் கூறவேண்டும்.
மாலை என்பது ஈவினிங் அல்ல. ஈவ்னிங்தான். ஏனென்றால் Evening என்பதில் மூன்றாவது எழுத்தான ‘e’ என்பது மவுனஎழுத்து.
பல என்பதைக் குறிக்கும் வார்த்தையை ‘ஸெவரல்’ என்று கூற வேண்டாம. அது ‘ஸெவ்ரல்’ காரணம். Several என்ற வார்த்தையில் நான்காவது எழுத்தான ‘e’ ஒரு மவுன எழுத்து.
இன்னும் சில உதாரணங்கள் இதோ.
வெப்பத்தைக் குறிக்கும் டெம்ப்ரேச்சர் - temp(e)rature.
சீப்பு என்பதைக் குறிப்பது ‘கோம்’- Com(b).
கட்டைவிரல் என்பது தம் - Thum(b)
gh ன் மவுனம்
பொதுவாகவே ஒரு வார்த்தையின் கடைசியில் ‘gh’ என்ற எழுத்துகள் இடம் பெற்றால் அவை மவுனமாகவே உள்ளன உதாரணம்:- Hi(gh), wei(gh), throu(gh), thorou(gh).
தவிர வார்த்தையின் நடுவில் இடம் பெறும் ‘gh’ கூட மவுன எழுத்துகளாகவே பல வார்த்தைகளிலும் இடம் பெறுகின்றன.
Night, sight, right, caught, daughter, neighbour, straight, thought ஆகிய வார்த்தைகளில் ‘gh’ மவுன எழுத்துகளாகவே இருப்பதை நீங்கள் உச்சரிக்கும்போது உணரலாம்.
வார்த்தைகளின் தொடக்க எழுத்து ‘k’ மற்றும் ‘h’ என்றால் அந்த எழுத்துகள் பெரும்பாலும் மவுன எழுத்துகளாகவே உள்ளன என்பதையும் கவனியுங்கள்.
மவுனத்தின் விதிகள்
எவையெல்லாம் மவுன எழுத்து என்பதற்கு ஏதாவது விதிகள் உள்ளனவா? அப்படி எதுவும் இல்லை. ஆனால் நான் கவனித்தவரை சில அனுமானங்கள் தோன்றுகின்றன. இவை பெரும்பாலும் பல வார்த்தைகளுக்கும் பொருந்துகின்றன.
1. ‘m’ என்ற எழுத்தைத் தொடர்ந்து வரும் ‘b’ என்ற எழுத்து பொதுவாக மவுன எழுத்தாகவே இருக்கிறது. lamb, climb, tomb.
2. ‘t’ என்ற எழுத்துக்கு முன்னால் இடம் பெறும் ‘b’ பெரும்பாலும் மவுன எழுத்தே. doubt, subtle.
3. ‘p’ என்பது வார்த்தையின் தொடக்க எழுத்தாக இருந்து, அதைத் தொடர்ந்து ‘sy’ அல்லது ‘ne’ ஆகிய எழுத்துகள் இடம் பெற்றால் ‘p’ மவுன எழுத்தாகவே அமைந்து விடும். psychology, psycho, pneumonia, pneumatic
4. ‘n’ என்ற எழுத்துக்கு முன்னால் இடம் பெறும் ‘k’ மவுனச் சொல்லாகவே இருக்க வாய்ப்பு அதிகம். knight, knife, knack, knave.
5. ஒரு வார்த்தையின் இறுதியில் ‘e’ இடம் பெற்றிருந்தால் அதை உச்சரிப்பில் நாம் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. challenge, table, able
தேவையற்ற சுமையா?
அதே சமயம் எல்லா மவுன எழுத்துகளுமே தேவையற்ற சுமைகள் அல்ல. சில சமயம் கேட்பதற்கு ஒன்று போலவே இருக்கும் இரண்டு வார்த்தைகளைப் படிக்கும்போது சரியான அர்த்தத்தில் புரிந்து கொள்ள இவை உதவக் கூடும்.
எடுத்துக்காட்டாக, IN, INN ஆகிய இரண்டு வார்த்தைகளையும் படிக்கும்போதே அவற்றின் பொருள் வித்தியாசம் நமக்கும் புரிகிறது (இரண்டாவது வார்த்தையில் உள்ள அதிகப்படி ‘N’ மவுன எழுத்து என்றாலும்).
ஆங்கிலமாக்கம்
கீழே உள்ள தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மவுன வார்த்தைகள் பெறுங்கள்.
கத்தி,கால் முட்டி,நேர்மையான, மணி (நேரம்),வாரிசு,முடிச்சு, தட்டுதல் (கதவை), அறிதல்
Scar - Scarce - Scare
Scar என்றால் தழும்பு. Scarce என்றால் அரிதாக என்ற அர்த்தம். You scarcely come here என்றால் நீங்கள் எப்போதோ ஒருமுறைதான் வீட்டுக்கு வருகிறீர்கள் என்று பொருள்.
Scare என்றால் பயமுறுத்துதல் என்று பொருள். Do not scare me with your new make up.
தொடர்புக்கு
aruncharanya@gmail.com
ஆம்னி என்றால் எல்லாம் என்று அர்த்தம். இறைவனை OMNIPRESENT என்பதுண்டு. அதாவது எல்லா இடங்களிலும் நிறைந்திருப்பவன். OMNIPOTENT என்றும் சொல்வதுண்டு. சர்வசக்திகளும் படைத்தவன் என்ற அர்த்தத்தில். OMNIVORE என்றால் எல்லாவற்றையும் சாப்பிடக்கூடிய மிருகம் என்று பொருள். அதாவது பிற விலங்குகள், தாவரங்கள் என்று எதையும் சாப்பிடக் கூடியது.
அதெல்லாம் இருக்கட்டும் OMNI BUS என்கிறோமே அதற்கு என்ன அர்த்தம்? அந்தக் காலத்தில் குதிரைகளால் இழுக்கப்பட்ட, மூடப்பட்ட வண்டியைத்தான் OMNIBUS என்பார்கள். லத்தீன் மொழியில் OMNIBUS என்றால் அனைவருக்குமானது என்று பொருள். OMNIBUS எந்த இடத்திற்கும் செல்லும் (அதாவது இந்த தடத்தில் மட்டுமே இது செல்லும் என்பது கிடையாது).
Potable water
ஓர் அடுக்கக விற்பனை விளம்பரத்தில் வசதிகள் என்ற பட்டியலின் கீழ் Potable water என்று குறிப்பிட்டதைச் சுட்டிக் காட்டும் ஒரு வாசகர் இப்படியொரு கேள்வியை எழுப்பியிருக்கிறார். ‘’வெளியிடத்திலிருந்து இங்கே தண்ணீர் கொண்டு வருகிறார்கள் என்றால் அது எப்படி ஒரு சாதகமான விஷயம்?’’.
Potable என்ற வார்த்தையோடு portable என்ற வார்த்தையை இவர் குழப்பிக் கொண்டிருக்கிறார் என்று படுகிறது. Portable என்றால் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய என்று பொருள். Potable என்றால் குடிக்கத்தக்க என்று அர்த்தம்.
Potable water என்றால் அந்த நிலத்தில் கிடைக்கும் தண்ணீர் குடிக்கத்தக்கது - அதாவது உப்பாக இருக்காது என்று பொருள். இது சாதக மானதுதானே?
டெலிவரி
‘’My wife delivered a baby yesterday’’ என்று ஒருவர் சொன்னால் என்ன செய்வீர்கள்? ‘’இதென்ன கேள்வி? கை கொடுப்பேன். வாழ்த்து சொல்வேன்.. மறக்காமல் “எப்ப ட்ரீட் என்பேன்’’ என்கிறீர்களா? இதையெல்லாம் செய்யுங்கள். ஆனால் பிறகு நேரம் கிடைக்கும்போது அவர் கூறிய வாக்கியத்திலுள்ள தவறையும் எடுத்துக் காட்டுங்கள்.
‘’My wife delivered a baby yesterday’’ என்ற வாக்கியத்தில் என்ன தவறு என்கிறீர்களா? இப்படி யோசியுங்கள். உங்களுக்கு ஒரு தபாலில் ஒரு பார்சல் வந்தால் அதை ‘’The postman delivered a parcel’’ என்பீர்கள் இல்லையா? அதாவது தபால்காரரின் வேலை யாரோ அனுப்பிய பார்சலை உங்களிடம் சேர்ப்பிப்பது மட்டும்தான். ஆனால் உங்கள் நண்பரின் மனைவி கஷ்டப்பட்டுத் தானாகவே ஒரு குழந்தையைப் பெற்றிருக்கிறாள். அவருக்குப் பிரசவம் பார்த்த டாக்டரைப் பற்றி வேண்டுமானால் ‘’The doctor delivered the baby to me’’ எனலாம். எனவே ‘’My wife gave birth to a child yesterday’’ என்று உங்கள் நண்பர் கூறுவதுதான் சரியானது.
புயலென…
Stormed என்பதன் அர்த்தத்தைக் கேட்டிருக்கிறார் ஒரு வாசகர். Storm என்பது புயல். இது பெயர் சொல். ஆனால் Stormed என்பது கடந்த கால வினைச்சொல் - Verb in past tense.
Stormed என்றால் கோபத்துடனும், வேகமாகவும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்வது என்று பொருள். எடுத்துக் காட்டு - He burst into tears and stormed off. புயலெனக் கிளம்பினான், வில்லினின்று விடுபட்ட அம்பு
போலக் கிளம்பினான் என்றெல்லாம் இதற்குப் பொருள் கொள்ளலாமா என்று கேட்கும் அனைத்து ராசி நண்பர்களே, கொள்ளலாம். கொள்ளலாம் என நான் கூறுகிறேன்.
பொங்கி எழும் வாசகர்கள்
நம் வாசக நண்பர்கள் “பொறுப்பதே வேண்டாம். பொங்கி எழு” பிரிவினர்.
“பாரம்பரியம் மிக்க இந்து இதழில் நீங்கள் இப்படி ஒரு தவறு செய்யலாமா?” என்று ஒருவர் கடிதம் போட்டுள்ளார்.
இருவாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டிருந்த கார்ட்டூனில் “Go to home” என்ற வாக்கியம் இடம் பெற்றிருந்தது. “Go home” என்பதுதான் சரி என்று சுட்டியும், குட்டியும் வந்தன கடிதங்கள்.
“Go to home” என்று நான் எழுதுவதற்கு முன்பாக எனக்குள் நானே இரண்டு பகுதிகளாகப் பிரிந்து (அந்தக் காலத் திரைப்படக் காட்சிகளில் காணப்படுவது போல) விவாதித்தேன். அந்த விவாதம் இப்படி இருந்தது.
பகுதி 1 – Go abroad என்றுதானே எழுதுகிறோம்? அப்படியானால் Go home என்றுதான் எழுத வேண்டும்.
பகுதி 2 – Go to hospital என்று எழுதுவாயா? இல்லை Go hospital என்று எழுதுவாயா? (இந்த இடத்தில் பகுதி-2 விடமிருந்து ஏளனச் சிரிப்பு. காரணம் Go hospital என்றதும் மருத்துவமனையே நகர்ந்து செல்வது போன்ற காட்சி அதற்குள் விரிகிறது).
பகுதி 1 – இதென்ன உளறல்? Go to downstairs என்பாயா? Go downstairs தானே? எனவே Go home தான்.
பகுதி 2 – அதெல்லாம் இருக்கட்டும். Go to house என்று எழுதும்போது Go home என்று ஏன் எழுத வேண்டும்?
பகுதி 1 – பிரபல இலக்கண நூல்களை ரெஃபர் செய்தும் புரிய வில்லையா? Go home என்பதில் home என்பது adverb ஆகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
(இதைத் தொடர்ந்து ‘’Home என்பது இந்த இடத்தில் adverb என்றால் house என்பது ஏன் adverb இல்லை? தவிர இந்த விளக்கம் தெளிவைத் தரவில்லை’’ என்றெல்லாம் விவாதித்த பகுதி – 2, ‘’Go to Home’’ என்றே எழுத வைத்து விட்டது.)
வாசகர்களின் கடிதங்களுக்குப் பின் -
பகுதிகள் 1 & 2 இரண்டும் சேர்ந்து சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது இதுதான். லாஜிக் எப்படி இருந்தாலும், சமீபத்தில் சில ஆங்கில எழுத்தாளர்கள் வேறுமாதிரி எழுதினாலும், தொன்று தொட்டுப் பயன்பாட்டில் இருப்பது Go Home தான். Go Home தான்.
என்ன … திருப்தி தானே- ?
எங்கே ‘I’ என்பதைப் பயன்படுத்துவது? எங்கே ‘Me’ என்பதைப் பயன்படுத்துவது? எனப் பலருக்கு​ம் சந்தேகம். இதுவரை ஆறு வாசகர்கள் இது பற்றிக் கேட்டுவிட்டார்கள்.
இதைத் தெ​ரிந்து கொள்வதற்கு முன்பாக Subject, Predicate ஆகிய இரண்டைப் பற்றியும் எளிமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். (பள்ளியில் Subjects என்று அறிவியல், ஆங்கிலம், தமிழ், கணிதம் போன்றவற்றைக் குறிப்பிடுவோம். அதோடு இந்த Subject - ஐ குழப்பிக் கொள்ள வேண்டாம்)
சப்ஜெக்ட் - ப்ரெடிகட்
ஒவ்வொரு வாக்கியத்தையும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்க முடியும். அந்த வாக்கியம் யாரைப் பற்றியது அல்லது எதைப் பற்றியது என்பது சப்ஜெக்ட்.
அந்தச் சப்ஜெக்ட் பற்றி எதையோ சொல்லும் பகுதி ப்ரெடிகட்.
I Drink Coffee என்பதில் ‘I’ சப்ஜெக்ட். “ Drink Coffee’’ என்பது ப்ரெடிகட்.
Fresh Air Entered The Room என்பதில் “Fresh Air’’ சப்ஜெக்ட். “Entered The Room’’ என்பது ப்ரெடிகட்.
Kumar And Karan Quarrelled With Each Other என்பதில் Kumar And Karan சப்ஜெக்ட். “Quarlled With Each Other’’ என்பது ப்ரெடிகட்.
Come என்ற ஒரே வார்த்தை கூட வாக்கியமாக இருக்கலாம். அப்போது சப்ஜெக்ட் மறைமுகமானது. அதாவது You. ப்ரெடிகட் Come.
இப்போது சப்ஜெக்ட், ​ப்ரெடிகட் புரிந்து விட்டதல்லவா? அடுத்ததாக எப்போது ‘I’, எப்போது “Me’’ என்கிற பஞ்சாயத்துக்குள் நுழைவோம்.
ஐ – மீ பஞ்சாயத்து
I, Me ஆகிய இரண்டுமே Personal Pronouns. பிற Noun அல்லது Pronounகளோடு இவற்றைப் பயன்படுத்தும்போதுதான் பெரும்பாலும் குழப்பம் வருகிறது. இதை எளிய விதத்தில் தீர்த்துக் கொள்ள முடியும்.
வாக்கியத்தில் சப்ஜெக்ட்டில் உள்ள We, He, She, They, You ஆகியவற்றுடன் பயன்படுத்த வேண்டியது ‘I’ தான், Me அல்ல.
You a​nd I Are Going To A Movie. இதில் You And I என்பது சப்ஜெக்ட். எனவே ‘I’ பயன்படுத்த வேண்டும், Me அ​ல்ல. அதாவது You And Me என்று வரக் கூடாது.
இதேபோல் Raja And ________Are Walking. இந்த வாக்கியத்தில் கோடிட்ட இடத்தில் இடம்பெற வேண்டியது எது? I அல்லது Me? ‘I’ தான். ஏனென்றால் “Raja And _________” என்பது சப்ஜெக்ட்.
வாக்கியத்தில் ப்ரெடிகட் பகுதியில் Him, Her, Us, Them போன்றவற்றோடு வர வேண்டியது Me.
The Child Followed Him And Me. இதுதான் சரி. The Child Followed Him And I என்று வரக் கூடாது. இதைப் பலரும் சரியாக எழுதிவிடுவார்கள். ஏனென்றால் Him என்பதன் சமச்சொல் Meதான் I அல்ல என்பது நமக்குத் தெரியும்.
சரி, கூட Him, Her, Them போன்ற எதுவும் வராவிட்டால் என்ன செய்வது?
அப்போதும் நான் ஏற்கனவே​ சொன்ன சப்ஜெக்ட், ப்ரெடிகட் பகுதிகள் உதவும்.
I Saw The Movie.
Ramu And I Saw The Movie
Ramu Spent The Day With Me.
Ramu Spent The Day With Krishna And Me.
எது சரி?
சந்தேகம் எப்போது அதிகம் எழுகிறது என்றால் இந்த I அல்லது Me என்பது வேறொரு Noun (அல்லது Pronoun) உடன் இணையும்போதுதான்.
கீழே உள்ள இரண்டு வாக்கியங்களில் எது சரி?
(A) If Deepa And I Go To Coimbatore, We Will Be Happy.
(B) If Deepa And Me Go To Coimbatore, We Will Be Happy.
இரண்டு விதங்களில் முதல் வாக்கியம்தான் சரியானது என்று கூறலாம்.
Deepa And I என்பது Subjectல் இடம் பெறுபவை. எனவே I - தான் வரவேண்டும். Me அல்ல.
கீழே உள்ள இரண்டு வாக்கியங்களில் எது சரி?
(A) He Instructed Lakshman And I To Be Prepared.
(B) He Instructed Lakshman And Me To Be Prepared.
Predicate-ல் இடம் பெற வேண்டியது Me–தான் I - அல்ல.
இன்னொரு விதத்திலும் நம் விடை சரியானதா என்பதைச் சரிபார்க்க முடியும்.
I அல்லது Me இடம் பெற வேண்டிய பகுதியோடு இணைந்துள்ள Noun (அல்லது Pronoun)ஐ நீக்கிவிடுங்கள். இப்போது I அல்லது Me போட்டுத் தனித்தனியாகப் படித்துப் பாருங்கள்.
If Deepa And (I அல்லது Me) Go To Coimbatore என்பதில் தீபாவை​ நீக்கிவிட்டு இருவிதமாக எழுதிப் பார்ப்போம்.
(A) If I Go To Coimbatore
(B) If Me Go To Coimbatore
இப்போது உங்களுக்கே தெரிகிறது முதல் பயன்பாடுதான் சரியானது என்று. இல்லையா?
இதேபோல்
He Told Murali And (I அல்லது Me) To Start.
முரளியை நீக்கிவிடலாம்.
He Told I To Start.
He Told Me To Start.
இவற்றில் He Told Me To Start என்று படுகிறதல்லவா? அப்படியானால் He Told Murali And Me To Start என்பதுதான் சரி.
Ultimate
Ultimate என்பது ஒருவிதத்தில் வித்தியாசமான வார்த்தை. “அவதான் Ultimate’’ என்று தன் கனவு தேவதையைப் பற்றி ஒருவர் கூறும்போது “மிகச் சிறந்த’’ என்ற அர்த்தத்தில்தான் அதைப் பயன்படுத்துகிறார். ஆனால் Ultimate என்பதன் தொன்மையான அர்த்தம் கடைசி என்பதுதான். “This Is The Ultimate Entry’’ என்றால் அதுதான் கடைசியாக வந்த விண்ணப்பம் என்று அர்த்தம். Penultimate என்றால் கடைசிக்குச் சற்று முன்னதாக என்று அர்த்தம்.
ஆனால் மிகச் சிறப்பான என்ற அர்த்தமும் இந்த வார்த்தைக்குப் பொருத்தமானதுதான் என்பதைச் சமீபகால அகராதிகள் ஏற்றுக்​ கொண்டு விட்டன.
அபாஸ்ட்ரஃபி (Apostrophe) என்பது ஒற்றை மேற்கோள் குறி போலத் தோற்றமளிக்கும். அதாவது ’ என்பதுதான் அபாஸ்ட்ரஃபி.இதை எப்போது எப்படிப் பயன்படுத்துவது என்பதில் பலருக்குக் குழப்பம் இருக்கிறது.
அபாஸ்ட்ரஃபியின் விதிகள்
Apostrophe என்பதை உரிமையை அல்லது உடைமையைக் குறிக்கப் பயன்படுத்துவதுண்டு. சிறுவனின் புத்தகம் என்பதைக் குறிக்க Boy’s book என்போம். அந்தப் புத்தகம் அந்தச் சிறுவனுடையது என்பது தெரிகிறது இல்லையா? அதாவது ஒருமை பெயர்ச்சொல் குறித்த உரிமை அல்லது உடைமை என்றால், அந்தப் பெயர்ச் சொல்லுக்குப் பிறகு Apostrophe குறியிட்டுப் பக்கத்தில் ‘s’ சேர்ப்போம். Raman’s chair, Preetha’s son என்பதுபோல.
Boss என்னும் சொல் போல, சில சமயம் பெயர் சொற்களின் இறுதி எழுத்திலேயே ‘s’ இருக்கும். முதலாளியின் கட்டளை என்பதை எப்படிக் குறிப்பிடுவது? Boss’s order என்று குறிப்பிடலாம். ஆனால் இப்படி எழுதும்போது ஏதோ ஒரு நெருடல் வருகிறது இல்லையா? அதனால்
Apos tropheக்குப் பின்னால் உள்ள ‘s’ என்ற எழுத்தை நீக்கிவிட்டும் பயன்படுத்தலாம். Boss’ order என்று எழுதினால் Apostropheக்குப் பிறகு ‘s’ இருப்பதாக அர்த்தம். (மாட்டேன், Boss’s order என்றுதான் எழுதுவேன் என்றால் அப்படியே எழுதுங்கள், தப்பில்லை).
ஒருவரின் பெயரே Andrews என்று வைத்துக் கொள்வோம். அவருடைய நூலகத்தை எப்படிக் குறிப்பிடலாம்? சிலர் தவறாக Andrew’s Library என்று குறிப்பிடுவார்கள். இது தவறு. அவர் பெயர் Andrew அல்ல. எனவே Andrews’s Library அல்லது Andrews’ Library என்றுதான் குறிப்பிட வேண்டும்.
சரி, குழந்தைகளின் பைகள் என்பதை எப்படிக் குறிப்பிடலாம்? Childrens’ bags என்று குறிப்பிடலாமா? தப்பாச்சே. Child என்பதன் பன்மைதான் Children. எனவே Children’s bags என்றுதான் குறிப்பிட வேண்டும்.
மாமியார் பற்றி…
Mother-in-law என்றால் மாமியார் என்பது ‘மாமியார் வீட்டுக்குப்’ போய் வராதவர்களுக்கும் தெரியும். மாமியார்கள் என்பதை எப்படிக் குறிப்பிடலாம்? ‘இதென்ன கேள்வி? Mother-in-laws தான்’ என்று கூறினால் நீங்கள் தவறிழைக் கிறீர்கள்.
Mother-in-law என்பதன் பன்மை Mothers-in-law.
Sister-in-law என்பதன் பன்மை Sisters-in-law
Father-in-law என்பதன் பன்மை Fathers-in-law
இப்போது நம்முடைய ஒரிஜினல் (அதாவது Apostrophe தொடர்பான) கேள்விக்கு வருவோம். மாமியாரின் தங்கை என்பதை Mother-in-law’s Sister எனலாமா? அல்லது Mother’s-in-law Sister எனலாமா? முதலில் குறிப்பிட்டதுதான் சரி. மாமியார்களின் தங்கைகள் என்றால்கூட Mother-in-law’s Sisters என்றுதான் குறிப்பிட வேண்டும்.
உயிர்களோடு உறவு
இலக்கண விதி இல்லை என்றால்கூட இந்த இடத்தில் வேறொரு நடைமுறையையும் பார்ப்போம். பிற மனிதர்களை உரிமை அல்லது உறவு கொண்டாடும்போது Apostrophe இடம் பெறச் செய்யும் வார்த்தைகளைப் பயன்படுத்தலாம். உயிரற்ற பொருள்களை உரிமை அல்லது உறவு கொண்டாடும்போது Apostrophe இல்லாதபடிக்கு வார்த்தைகளை அமைக்கலாம்.
Father’s brother. Krishna’s Sister.
Kerchief of Father, File of sister.
Apostropheயை வேறொன்றுக்கும் பயன்படுத்துவார்கள். ஓர் எழுத்து அல்லது ஒரு சில எழுத்துகள் நீக்கப்படும்போது அந்த இடத்தில் Apostrophe-ஐப் பயன்படுத்துவார்கள்.
I do not என்பதற்குப் பதிலாக I don’t எனலாம்.
We did not என்பதற்குப் பதிலாக We didn’t எனலாம்.
You have done the right thing என்பதற்குப் பதிலாக You’ve done the right thing எனலாம்.
ஃபைனான்ஸ்- ஃபியான்ஸெ- ஃபியான்ஸே
Finance என்றால் நிதி என்பது நமக்குத் தெரியும். நிதியமைச்சர்தானே Finance Minister?
Finance என்பதை ஃபைனான்ஸ் என்றுதான் உச்சரிக்க வேண்டும் (ஃபினான்ஸ் அல்ல).
“அடுத்தமுறை உன்னைச் சந்திக்கும்போது என் Fiance-வை அறிமுகப் படுத்துகிறேன்’’. (Fiance என்பதை ஃபியான்ஸெ என்றுதான் உச்சரிக்க வேண்டும்.) இப்படி ஒரு கடிதமோ, மின்னஞ்சலோ அனுப்பப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். இதை எழுதியது ராஜசேகராக இருக்குமா? அல்லது ராஜகுமாரியாக இருக்குமா? சந்தேகமில்லாமல் ராஜகுமாரிதான்.
ஏனென்றால் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது அல்லது நிச்சயமாகிவிட்டது என்னும் நிலையில் உள்ள வருங்காலக் கணவனைத்தான் Fiance என்று குறிப்பிட வேண்டும் (ராஜசேகர் இப்படிக் குறிப்பிட்டால் அது வேறு மாதிரி!).
அப்படியானால் வருங்கால மனைவியை எப்படிக் குறிப்பிடலாம்? கொஞ்சலாக நீங்கள் எப்படி வேண்டுமானாலும் குறிப்பிடலாம். மற்றபடி நாகரிக முறையில் Fiancee என்றுதான் குறிப்பிட வேண்டும். ஆண் நண்பர்களோ, பெண் நண்பர்களோ பலர் இருக்கலாம். ஆனால் Fiance அல்லது Fiancee என்பவர் ஒருவர்தான் இருக்க முடியும் (அதாவது ஒரு காலகட்டத்தில்!).
Fiancee என்பதை ஃபியான்ஸே என்று உச்சரிக்க வேண்டும்.
(தொடர்புக்கு : aruncharanya@gmail.com)