Thursday, September 23, 2010

தாஷ்கன்ட் ஓபன் இரட்டையர் காலிறுதியில் சானியா ஜோடி



தாஷ்கன்ட்,செப்.24 தாஷ்கன்ட் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் காலிறுதிச் சுற்றுக்கு சானியா மிர்ஸா, இத்தாலியின் மரியா எலினா கேமரின் ஜோடி தகுதி பெற்றுள்ளது.
மகளிர் ஒற்றையர் சுற்றில் சானியா முதல் சுற்றிலேயே தோற்றுள்ள நிலையில் தற்போது இரட்டையர் பிரிவில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சானியாகேமரின் ஜோடி, உக்ரைன் சகோதரிகளான லியும்டிலாநதியா கிசோனக் ஜோடியை 62, 63 என்ற நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
காலிறுதியில், அலெக்சான்ட்ரா டுல்கெரு, மக்தலீனா ரிபேரிகோவா ஜோடியை சந்திக்கவுள்ளது சானியா இணை.

பந்துவீச்சு பயிற்சியில் மாற்றம் தேவை வெங்கடேஷ் பிரசாத்


பெங்களுர்,செப்.24
இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சு பயிற்சியில் மாற்றம் தேவை என இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.
இது அவர் கூறியது வருமாறு:
இந்திய பந்து வீச்சாளர்களின் அணுகுமுறையில் பிரச்சனை உள்ளது, அதுதான் இன்றைய பந்து வீச்சு பலவீனங்களுக்குக் காரணம். பந்து வீச்சாளர்கள் தினமும் காலையில் உடற்பயிற்சி நிலையத்திற்குச் செல்லவேண்டும், வலையில் நீண்ட நேரம் பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபடவேண்டும். வலையில் 20 நிமிடங்களுக்குப் பந்து வீசி விட்டு மேட்சில் வந்து 20 ஓவர்களை வீச முடியாது. வலைப் பயிற்சியில் பந்து வீச்சு பயிற்சியைப் பார்த்து நான் ஏமாற்றம் அடைந்துள்ளேன், இப்போதெல்லாம் நிறைய பயிற்சி அளிக்கப்படுகிறது, இருந்தும் பந்து வீச்சாளரகளிடம் கட்டுப்பாடு இல்லை. வீரர்கள் தங்கள் அணிக்கும், பயிற்சியாளருக்கும் மிக முக்கியமாக தங்களுக்கு தாங்களே நேர்மையாக இருக்க வேண்டும், இல்லையெனில் மாற்றங்களைக் காண முடியாது.இஷாந்த் ஷர்மாவை பயிற்சியில் ஈடுபடுவதில் தனிச்சிறப்பு வாய்ந்தவர் . தற்போது அவரது பந்து வீச்சில் மணிக்கட்டின் நிலை சரியாக அமையவில்லை. விரல்களும் பந்தின் தையல் மீது சரியாக உட்காரவில்லை.மாறாக மணிக்கட்டை சுழற்றுகிறார்.இதனால்தான் அவருக்கு பிரச்சனை ஏற்படுகிறது .
இதேபோல் பிரவீண் குமாரின் மணிக்கட்டு நிலை சிறப்பாக உள்ளது, அவரை டெஸ்ட் போட்டியில் தேர்வுசெய்வது அவசியம் என்று கூறியுள்ளார்.

சாம்பியன் லீக் அரையிறுதியில் இன்று சென்னைபெங்களூர் மோதல்

போர்ட் எலிசபெத், செப். 24
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் 20/20 கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதிப் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்,பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றது.
போர்ட் எலிசபெத் நகரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வாரியர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 136 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹஸ்ஸி 50 ரன்களை குவித்தார். கேப்டன் தோனி 31 ரன்களை எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் ஆடினார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய வாரியர்ஸ் அணி வீரர்கள் ஒற்றை ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் வாரியர்ஸ் அணி இருந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் முரளிதரனின் சிறப்பான பந்துவீச்சால் வாரியர்ஸ் அணியின் அனைத்து விக்கெட்டுகளும் பறிபோனது. இதனையடுத்து பத்து ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. ஏ'' பிரிவில் இடம் பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரன்ரேட் அடிப்படையில் முதலிடம் நீக்கம் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
வாரியர்ஸ் (தென்னாப்பிரிக்கா), விக்டோரியா (ஆஸ்திரேலியா) ஆகிய 3 அணிகளும் 3 வெற்றி, 1 தோல்வியுடன் தலா 6 புள்ளிகள் பெற்றுள்ளன. சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் நிகர ரன்ரேட் +2.050 ஆகும். வாரியர்ஸ் அணியின் ரன்ரேட் +0.588 ஆகும். விக்டோரியாவின் ரன்ரேட் +0.366.
இந்நிலையில் முதல் அரையிறுதி ஆட்டம் இன்று இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு நடைபெறும். நாளை நடைபெறும் 2வது அரை யிறுதியில் ""பி'' பிரிவில் முதலிடத்தை பிடித்த சவுத் ஆஸ்திரேலியா அணியும் ""ஏ'' பிரிவில் 2வது இடத்தை பிடித்த வாரியர்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. அதை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு, இரண்டு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்றன. ஒரு பிரிவில் இடம் பெற்ற அணிகள் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதி அதன் அடிப்படையில் லீக் போட்டியின் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் மோதும் இரு அணிகளும் சமபலம் கொண்டுள்ளதால் ஆட்டத்தில் பரபரப்பு பஞ்சமிருக்காது. ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் ஒப்பிடும் போது சென்னை சற்று பின்தங்கியுள்ளதாகத் தான் தெரிகிறது. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பேட்டிங் வரிசையில் டிராவிட், கோலி,உத்தப்பா,மனிஸ் பான்டே, ரோஸ் டெய்லர் ,கேமருன் ஓயிட் என படை நீளுகிறது. சென்னை அணியில் ஹசி,விஜய் மட்டுமே தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவருகின்றனர். மற்றவர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தான் சென்னை அணியால் இறுதி போட்டிக்கு செல்ல முடியும். இதே போல் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பவுலிங் தரவரிசையில் டேல் ஸ்டெயின்,பிரவின் குமார்,வினய் குமார் ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர். இவர்களுக்கு பக்க பலமாக அணித் தலைவர் கும்ப்ளேவும் சிறப்பாக செயல்பட்டுவருகிறார். பெங்களூர் அணியைப் போலவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் வேகப்பந்து வீச்சில் போலிங்கரை தவிர யாரும் சிறப்பாக பந்து வீச்சில் சரியாக செயல்படவில்லை. பந்துவீச்சு ,பேட்டிங் ஆகிய இரண்டு துறைகளிலும் சென்னை அணி சிறப்பாக செயல்பட்டால் மட்டும் தான் பெங்களூர் போன்ற சிறந்த அணியை வெல்ல முடியும். இந்நிலையில் சென்னை அணிக்கு சற்று ஆறுதலாக காயம் காரணமாக காலிஸ் எஞ்சியுள்ள போட்டிகளில் ஆடமாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கிறது.

Wednesday, September 22, 2010

விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை கரைக்க அரபிக் கடலை நோக்கி செல்லும் பக்தர்கள்

சர்வதேச போட்டிகளிலிருந்து


சைடுபாட்டம் ஓய்வு
லண்டன்,செப்.23
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான 32 வயதுடைய சைடு பாட்டம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடந்த 2001ல் லார்ட்சில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
இதுவரை இவர் 22 டெஸ்ட் போட்டிகளில் 313 ரன்களையும், 79 விக்கெட்டுகளையும், 25 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இவர் 133 ஓட்டங்களையும், 29 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.மேலும் 8 சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் பந்து வீச்சில் 23 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இறுதியாக இவர், பாகிஸ்தான் அணிக்கு எதிரான இருபது20 போட்டியில் விளையாடினார். தனது ஓய்வு குறித்து கூறிய சைட்பொட்டம்:
கடந்த ஒன்பது ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக விளையாடியதை மிகப் பெருமையாக கருதுகிறேன். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற சரியான நேரம் வந்ததால், ஓய்வு பெறுகிறேன்.
நியூசிலாந்துக்கு எதிராக முதலாவது ஹாட்ரிக் விக்கெட் பெற்றது மற்றும் மேற்கிந்திய தீவில் நடந்த இருபது20 உலகக் கோப்பை வென்ற இங்கிலாந்து அணியில் விளையாடியது உள்ளிட்டவை, கிரிக்கெட் அரங்கில் எனது மறக்க முடியாத நினைவுகளாக கருதுகிறேன். எதிர்வரும் 2011இல் நடக்கவுள்ள ஐ.பி.எல்., தொடரில் விளையாட விருப்பமுள்ளதாக கூறினார்.

கால்பந்து போட்டியில் மீண்டும் கோல்டன் கோல்


புதுடெல்லி, செப்.23
உலக கால்பந்தின் வழக்கமான நடைமுறையில் இருந்த கோல்டன் கோல் எனும் நடைமுறை மீண்டும் அமல்படுத்த சர்வதேச கால்பந்து அமைப்பு திட்டமிட்டு வருகிறது. கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் டிராவில் முடிந்தால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டு அந்த நேரத்தில் எந்த அணி கோல் அடிக்கிறதோ அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இதற்கு கோல் டன் கோல் எனும் பெயரிடப்பட்டது .முதல் நிமிடத்திலேயே ஒரு கோல் போடப்பட்டாலும் ஆட்டம் முடிவடையும். எதிரணிக்கு போராடும் வாய்ப்பு தரப்படமாட்டாது. இந்த விதிமுறைக்கு உலக அணிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் கடந்த 1998 மற்றும் 2002ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் கோல்டன் கோல் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.இந்த விதிமுறையால் பெரிதும் பாதிக்கப்பட்டது இத்தாலி அணி என்று அப்போது கூறப்பட்டது.
கடந்த 2002ம் ஆண்டில் நடந்த ஐரோப்பிய கோப்பை கால்பந்தில், இறுதிவரை இத்தாலியும், பிரான்ஸ்ஸும் வந்தன. இதிலும் கோல்டன் கோல் நடைமுறைப்படுத்தப்பட்டு கடைசியில் பிரான்ஸ் 21 என்ற கோல் கணக்கில் ஐரோப்பிய கால் பந்து கோப்பை கைப்பற்றியது. இறுதி ஆட்டம் வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இத்தாலி அணி வீரர்கள் விரக்தி அடைந்து இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த விதிமுறை தடை செய்யப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள பிபா தலைவர் செப் பிளேட்டர் :
கடந்த 1995 முதல் 2005 வரை நாக் அவுட் சுற்று ஆட்டம் டிராவில் முடிந்தால் கோல்டன் கோல் எனும் நடைமுறை அமுலில் இருந்தது.
தற்போது, மீண்டும் கோல்டன் கோல் விதிமுறையை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டு வருகிறோம்.தற்போதுள்ள கூடுதல் நேரத்தில் பெரும்பாலான அணிகள் தடுப்பாட்டத்தை மட்டும் கடைப்பிடிக்கின்றன. இதனால் கூடுதல் நேர ஆட்டம் போரடித்துப் போகிறது. இதனால் கூடுதல் நேர ஆட்டத்தை கோல்டன் கோல் விதிமுறையுடன் செயல்படுத்த திட்டமிடப்படுகிறது. அப்போது தான் வீரர்கள் தடுப்பாட்டத்தை கைவிட்டு தாக்குதல் ஆட்டத்தில் இறங்குவார்கள் என்று கூறினார்.

சென்னையில் உலகப் படகுப் போட்டி


சென்னை, செப்.23
உலக நாடுகள் பங்கேற்கும் சர்வதேச அளவிலான பாய்மரப் படகு போட்டி அக்டோ பர் 3ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாய்மரப் படகு சங்கத் தலைவர் அசோக் தக்கார்:
தமிழ்நாடு படகோட்டும் சங்கத்தின் சார்பில் இந்திய சர்வதேச பாய்மரப் படகு போட்டியை சென்னையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 3 முதல் 10ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறுகின்றன.
வங்காள விரிகுடா கடலில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை, ஈரான், ஸ்லோவேனியா, மியான்மர், ஆகிய நாடுகளிலிருந்து வீரர்கள் பங்கேற்கின்றனர். சுற்றுச்சூழல், இயற்கை ஆதார வளங்களைப் பாதுகாத்துப் பராமரிப்பதில் இளைஞர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும், பாய்மரப் படகு ஓட்டுவதை ஆபத்தாக கருதாமல் ஓர் ஆரோக்கியமான விளையாட்டுப் போட்டியாக பிரபலப்படுத்தும் நோக்கத்துடனும் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன .
இப்போட்டி இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 8 வயதிலிருந்து 15 வயது வரை உள்ள போட்டியாளர்களுக்கு "சிங்கிள் ஹாண்டட் ஆப்டிமிஸ்ட்' என்ற படகுகளும், 15 வயதிலிருந்து 20 வயது வரை உள்ள போட்டியாளர்களுக்கு "டபுள் ஹாண்டட்' என்ற படகு வகைகளும் கொடுக்கப்படும்.
மொத்தம் 9 சுற்றுகளாக இந்தப் போட்டிகள் 8 நாள்கள் நடைபெறும். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை குறிப்பிட்ட நேரத்துக்குள் சென்றடையும் படகுகளுக்கு இந்திய படகு போட்டிகள் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றின் சார்பில் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும் என்று கூறினார்.

குண்டு வெடிப்பு சம்பவ எதிரொலி காமன்வெல்த் புறக்கணித்தனர் இங்கிலாந்து வீரர்கள்

லண்டன்,செப்.23
டெல்லி ஜூம்மா மசூதி அருகே நடந்த வெடிகுண்டு விபத்து சம்பவத்தை தொடர்ந்து காமன்வெல்த் போட்டிகளிலிருந்து இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த வீரர் வீராங்கனைகள் விலகியுள்ளனர்.
டெல்லியில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகள் பல நாடுகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் டெல்லி ஜூம்மா மசூதி வெடிகுண்டு விபத்து , போட்டி நடைபெறும் ஜவஹர்லால் விளையாட்டு மைதானத்திற்கு வீரர்கள் செல்ல, மைதானத்தின் தெற்கு வாயிலில் அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த நடை மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பல வெளிநாட்டு வீரர்களுக்கு பீதியை கிளப்பியுள்ளது.
இது பற்றி வீரர்கள் கூறியது வருமாறு:
இங்கிலாந்தின் டிரிபிள் ஜம்ப் வீரர் பிலிப்ஸ் :
எனக்கு குடும்பமும் குழந்தைகளும் உள்ளனர். பதக்கங்களைவிட என்னுடைய பாதுகாப்புதான் முக்கியம். அதேபோல் என்னுடை குழந்தைகளுக்கும் நான் முக்கியம்' என்று கூறி காமன்வெல்த் போட்டியினை புறக்கணித்துள்ளார்.
பிரிட்டன் வீராங்கனைகள் கிறிஸ்டைன் ஓகுருகே, டோப்ரிஸ்கி ஆகியோரும் போட்டியில் இருந்து விலகியுள்ளனர்.
ஓகுருகே 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நடப்பு காமன்வெல்த் சாம்பியன் ஆவார்.
லிசா டோப்ரிஸ்கே 1500 மீட்டர் ஓட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆவார்.
முன்னதாக, வட்டு எறிதல் சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய வீரர் டேனி சாமுல்ஸ் போட்டியில் கலந்து கொள்வதை தவிர்ப்பதாக அறிவித்துவிட்டார்.

காமன்வெல்த் போட்டி உலக ஊடகங்கள் அச்சம்!

புதுடெல்லி, செப். 23
டெல்லியில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டி குறித்து சர்வதேச ஊடகங்கள் அச்சம் தெரிவித்துள்ளன. காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகள் குறித்து உலக ஊடகங்கள் பதறியபடியே எழுதுகின்றன. குறிப்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த வெடிகுண்டு விபத்தும், ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் அருகே மேம்பாலம் இடிந்து விழுந்த அசம்பாவித நிகழ்வும் குறித்த கேள்வியை சர்வதேச ஊடகங்கள் எழுப்ப காரணங்களாகி விட்டன.
இதுகுறித்து பல்வேறு பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ள கட்டுரையின் சுருக்கம் வருமாறு: