Wednesday, September 22, 2010

சென்னையில் உலகப் படகுப் போட்டி


சென்னை, செப்.23
உலக நாடுகள் பங்கேற்கும் சர்வதேச அளவிலான பாய்மரப் படகு போட்டி அக்டோ பர் 3ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாய்மரப் படகு சங்கத் தலைவர் அசோக் தக்கார்:
தமிழ்நாடு படகோட்டும் சங்கத்தின் சார்பில் இந்திய சர்வதேச பாய்மரப் படகு போட்டியை சென்னையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 3 முதல் 10ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறுகின்றன.
வங்காள விரிகுடா கடலில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை, ஈரான், ஸ்லோவேனியா, மியான்மர், ஆகிய நாடுகளிலிருந்து வீரர்கள் பங்கேற்கின்றனர். சுற்றுச்சூழல், இயற்கை ஆதார வளங்களைப் பாதுகாத்துப் பராமரிப்பதில் இளைஞர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும், பாய்மரப் படகு ஓட்டுவதை ஆபத்தாக கருதாமல் ஓர் ஆரோக்கியமான விளையாட்டுப் போட்டியாக பிரபலப்படுத்தும் நோக்கத்துடனும் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன .
இப்போட்டி இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 8 வயதிலிருந்து 15 வயது வரை உள்ள போட்டியாளர்களுக்கு "சிங்கிள் ஹாண்டட் ஆப்டிமிஸ்ட்' என்ற படகுகளும், 15 வயதிலிருந்து 20 வயது வரை உள்ள போட்டியாளர்களுக்கு "டபுள் ஹாண்டட்' என்ற படகு வகைகளும் கொடுக்கப்படும்.
மொத்தம் 9 சுற்றுகளாக இந்தப் போட்டிகள் 8 நாள்கள் நடைபெறும். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை குறிப்பிட்ட நேரத்துக்குள் சென்றடையும் படகுகளுக்கு இந்திய படகு போட்டிகள் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றின் சார்பில் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும் என்று கூறினார்.

No comments:

Post a Comment