Sunday, August 8, 2010

/கடைசி டெஸ்ட்
425 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது இலங்கை
கொழும்பு,ஆக.5
இந்தியா இலங்கை மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்றுவருகிறது.இதில் முதலில் விளையாடிய இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேரமுடிவில் 425 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.
இரண்டாவது நாள் ஆட்டம்
முதல் நாள் ஆட்டமுடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 293 ரன் எடுத்து இருந்தது இலங்கை அணி.நேற்று சமரவீரா 65 ரன்னுடனும், மேத்ஹீஸ் 26 ரன்னுடனும் தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கி விளையாடினார்கள்.ஆட்டம் தொடங்கியதிலிருந்தே இந்த ஜோடி நிதான போக்கை கடைபிடித்தது.இந்த ஜோடிகளின் சீரான ஆட்டத்தால் இலங்கை அணி 88.5 வது ஓவரில் 300 ரன்னை தொட்டது.
ஒஜா அபாரம்
சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த இந்த ஜோடியை ஒஜா பிரித்தார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த மேத்யுஸ் 45 ரன்னில் ஒஜாவின் பந்தில் எல்.பி.டபிள்ஹீயு ஆகி வெளியேறினார். மேத்யுஸ் அவுட்டாகியபோது இலங்கை அணியின் ஸ்கோர் 330 ஆக இருந்தது. 5வது விக்கெட்டுக்கு இனைந்த இந்த ஜோடி 89 ரன் எடுத்தது.அடுத்ததாக பிரசன்ன ஜெயவர்த்தனே களமிறங்கினார்.இவரை வந்த சிறிது நேரத்திலேயே பெவிலியனுக்கு அனுப்பினார் ஒஜா.இவரது விக்கெட்டையும் எல்.பி.டபிள்ஹீயு முறையிலேயே ஒஜா கைப்பற்றினார்.
சமரவீரா சதம்
பிரசன்ன ஜெயவர்த்தனே9 ரன்களே எடுத்தார்.அடுத்து ரந்தீவுடன் ஜோடி சேர்ந்த சமரவீரா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 229 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 100 ரன்னை தொட்டார். 60வது டெஸ்ட்டு போட்டியில் விளையாடும் அவருக்கு இது 12வது சதம் ஆகும். இந்தியாவுக்கு எதிராக இது 3வது சதமாகும்.சமரவீராவின் ஆட்டத்தால்தான் நேற்று இலங்கை அணியின் ரன்கள் எண்ணிக்கை ஒரளவுக்கு உயர்ந்தது. இந்த இரு ஜோடிகளும் மதிய உணவு இடைவேளையின்வரை ஆட்டமிழக்காமல் சமரவீரா 107 ரன்னுடனும், ரந்தீவ் 2 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மதிய உணவு இடைவேளையின் போது இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 369 ரன் எடுத்திருந்தது.
விரைவாக விழுந்த விக்கெட்டுகள்
அதன் பிறகு களமிறங்கிய இந்த ஜோடியால் நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆடமுடியவில்லை.ரந்தீவ் 8 ரன்கள் எடுத்திருந்த போது சேவாக் பந்துவீச்சில் டிராவிட்டிம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.அடுத்து வந்த வீரர்களை இந்திய வீரர் இஷாந்த சர்மா தனது வேகத்தில் வீழ்த்தினார்.மலிங்கா 4 ரன்னிலும், மெண்டீஸ் 3 ரன்னிலும், வெளிகேந்திரா 4 ரன்னிலும் ஆட்டம் இழந்து வெளியேறினர்.அபாரமாக விளையாடி சமரவீரா 137 ரன்கள் எடுத்து கடைவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.முடிவில் இலங்கை அணி 138 ஓவரில்425 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இந்தியா தரப்பில் ஓஜா 4 விக்கெட்டுகளும், இசாந்த் சர்மா 3 விக்கெட்டுகளும், சேவாக் மற்றும் மிஸ்ரா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.இதில் சங்கக்காரா, மகிளா ஜெயவர்த்தனே , மேத்தீயுஸ், பிரசன்னா ஜெயவர்த்தனே ஆகியோர் ஒஜாவின் சுழலில் சிக்கினார்கள்.
சேவாக் அபாரம்
இதன் பிறகு இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சை விளையாடியது.இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சேவாக்கும்தமிழக வீரர் விஜய்யும் களமிறங்கினர்.இன்னிங்ஸ் ஆரம்பித்தவுடன் முதல் நான்கு ஒவர் அமைதியாக இருந்த சேவாக் பிறகு தனது வழக்கமான அதிரடியை காட்டத் தொடங்கினார்.அதிலும் இலங்கையின் வெலகேதரா வீசிய ஆட்டத்தின் நான்காவது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.ஒவருக்கு ஒரு பவுண்டரி வீதம் அடித்து இலங்கை அணியிரை படாய்படுத்தினார்.இவருக்கு பக்கபலமாக விளையாடிக் கொண்டிருந்த விஜய் மலிங்காவின் பந்துவீச்சில் ஆப் சைடில் அடிக்க அது அவருக்கு ஆப்பாக அமைந்துவிட்டது.விஜய் அடித்த அந்த பந்தை மெண்டிஸ் அழகாக கேட்ச் பிடித்து அவரை 14 ரன்களில்வெளியேற்றினார்.
நிதான ஆட்டம்
இதன் பிறகு டிராவிட் களமிறங்கினார்.வழக்கம் போல் அவர் தனது நிதான ஆட்டத்தை தொடர்ந்தார்.மறுமுனையில் சேவாக் தனது வழக்கமான ஆட்டத்தை தொடர்ந்தார்.இந்நிலையில் பொறுமையாக அடிக்கொண்டிருந்த டிராவிட் மேத்யு வீசிய பந்தினை தவறுதுலாக கால்காப்பினுள் வாங்கி 23 ரன்களில் வெளியேறினார்.அவர் அவுட்டாகும்போது இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்திருந்தது.இதன் பிறகு சாதனை மன்னன் சச்சின் களமிறங்கினார்.சச்சின் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் எடுத்தார்.மறுமுனையில் சேவாக் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
ஆட்டம் பாதிப்பு
போதிய வெளிச்சமின்மையால் நேற்றைய ஆட்டம் இரண்டு ஓவர்களுக்கு முன்னாதாக முடிக்கப்பட்டது.இந்த இரண்டு ஓவர்கள் விளையாடப்பட்டிருந்தால் சேவாக் தனது 21சதத்தை நிறைவு செதிருப்பார்.முடிவில் இந்திய அணி 2விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்திருந்தது.

சச்சினுக்கு பாராட்டு
அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்ததற்காக சச்சின் தெண்டுல்கருக்கு நாடாளுமன்றத்தில் இன்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கேள்வி நேரத்துக்கு முன்பு பேசிய சபாநாயகர் மீராகுமார், சச்சின் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.
அடுத்தடுத்து சாதனைகள் மூலம் இந்தியாவுக்கு உலக அளவில் பெருமை தேடித்தரும் அவர்,
தற்போது 169வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக போட்டிகளில் பங்கேற்றுள்ளவர் என்ற பெருமையை பெற்றுள்ளதற்காக, மக்களவை உறுப்பினர்கள் சார்பில் சச்சினுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

சாதனைகளின் சிகரம் சச்சின் சைமண்ட்ஸ்


சிட்னி,ஆக.5
கிரிக்கெட் உலகில் பல சாதனைகளுக்குச்
சொந்தக்காரரான சச்சின் சாதனைகளின் சிகரம் என சைமண்ட்ஸ் புகழ்ந்துள்ளார்.ஒரு நாள், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள், அதிக சதங்கள், ஒரு நாள் போட்டியில் 200 ரன்கள் அடித்து சாதனை என பல உலக சாதனைகளை உரிதாக்கிக் கொண்டுள்ள சச்சின், இப்போது 169 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதன் மூலம் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.இது குறித்து கருத்து கூறிய சைமண்ட்ஸ்:
சச்சினின் சாதனைகளை முறியடிப்பது எளிதானத காரியமல்ல. எனக்குத் தெரிந்த வரையில் பாண்டிங், பவுச்சர், காலிஸ் ஆகியோரே டெண்டுல்கரின் சாதனையை நெருங்கமுடியும் என நினைக்கிறேன். இருப்பினும், அவ்வளவு எளிதானதல்ல அது என்று கூறினார்.

பாக்.அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் கனேரியா


கராச்சி,ஆக.5
இங்கிலாந்துக்கு எதிராக நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் சரியாக பந்துவீசவில்லை என்று கூறி பாகிஸ்தான் சுழற் பந்து வீச்சாளர் கனேரியாவை அதிரடியாக நீக்கியது பாக்.கிரிக்கெட் வாரியம்.இந்நிலையில் இழந்த பார்மை மீட்டு, மீண்டும் அணிக்கு திரும்புவேன் என கனேரியா கூறியுள்ளார்.
இது குறித்து கனேரியா கூறியதாவது: .
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் நாங்கள் 354 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது ஏமாற்றம் அளித்தது. இதற்கு பந்துவீச்சு மட்டும் காரணமல்ல. பேட்ஸ்மேன்கள் தான் சோபிக்க தவறி விட்டனர்.இப்போட்டியில் நான் சிறப்பாகவே பந்து வீசினேன். இருப்பினும் அணியிலிருந்து நீக்கப்பட்டது வருத்தம் அளித்தது. இருப்பினும் தேர்வாளர்களின் செயலுக்கு மரியாதை அளிக்கிறேன். இழந்த பார்மை மீட்டு விரைவில் அணிக்கு திரும்புவேன் என்று கனேரியா தெரிவித்தார். இவர் இதுவரை விளையாடியுள்ள 61 டெஸ்ட் போட்டிகளில் 261 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயின் நெதர்லாந்து அணிகளுக்கு 'பிபா' அபராதம்

ஜோகன்னஸ்பர்க்,ஆக.5
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 19வது உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.இறுதி போட்டியில் முரட்டுதனமாக ஆடியதால் இந்த இரு அணிகளுக்கும் 'பிபா' அபராதம் விதித்துள்ளது.
ஜோகன்ஸ்பர்க்கில் கடந்த 11ஆம் தேதி உலக கோப்பை இறுதி ஆட்டம் நடந்தது. இதில் ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இரு அணி வீரர்களுமே முரட்டு ஆட்டத்தை கடைபிடித்தனர். இதனால் போட்டியில் நடுவராக பணியாற்றிய ஹோவர்டு வெப் மொத்தம் 14 மஞ்சள் அட்டைகளை வழங்கினார்.இதில் நெதர்லாந்து வீரர் ஜான் ஹெட்டிங்கா இரு மஞ்சள் அட்டைகளை பெற்றதோடு களத்தை விட்டும் வெளியேற்றப்பட்டார்.
'பிபா'விதி முறைகளின் படி ஒரு போட்டியில் அதிகபட்சமாக இரு அணியிலும் 5 வீரர்கள் மஞ்சள் அட்டை பெறலாம். அதற்கு மேல் மஞ்சள் அட்டைகள் பெற்றால் இரு அணிகள் மீதும் ஒழுங்கீன நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த விதிமுறைப்படி இறுதி போட்டியில் விளையாடிய இந்த இரு அணிகளுக்கும் 'பிபா' அபராதம் விதித்துள்ளது.ஸ்பெயின் அணிக்கு 6 ஆயிரம் பவுண்டுகளும் நெதர்லாந்து அணிக்கு 9 ஆயிரம் பவுண்டுகளும் அபராதமாக விதிக்கப்பட்டது.

சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டி அரையிறுதியில் கோவாபஞ்சாப்


கொல்கத்தா,ஆக.5

64வது தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப்சந்தோஷ் டிராபி போட்டி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.இதில் கோவா ,பஞ்சாப் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டி மேற்கு வங்காளத்தில் நடந்து வருகிறது. இதில் 'பி' பிரிவின் காலிறுதி கடைசி ஆட்டத்தில் கோவாசர்வீசஸ் அணிகள் மோதின.இந்த போட்டியில் 40 என்ற கோல் கணக்கில் சர்வீசஸ் அணியை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது கோவா அணி.
மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் அணி கர்நாடாகாவை 51 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து 'பி' பிரிவில் 2வது இடம் பிடித்தது.வருகிற 6ந் தேதி 'ஏ' பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியுடன் பஞ்சாப் அணியும் 2வது இடம் பிடிக்கும் அணியுடன் கோவா அணியும் மோதுகின்றன.

ஜூனியர் பேட்மிண்டன் போட்டி சித்தார்த் வெற்றி

சென்னை, ஆக.5
சென்னை மாவட்ட அளவிலான 19 வயதுக்குட்பட்ட வர்களின் ஜூனியர் பேட்மிண்டன் போட்டி அடையாறிலுள்ள இந்திரா நகரில் நடந்தது.
இதில் ஆண்கள் பிரிவில் ஆர்.சித்தார்த் ராஜா 2118, 1821, 2110 என்ற செட்கணக்கில் மோகன கிருஷ்ணனை தோற்கடித்து பட்டம் வென்றார். இதேபோல் பெண்கள் இறுதி ஆட்டத்தில் கார்த்தி விசாலாட்சி 217, 217 என்ற நேர் செட்டில் சிந்தூரியை வீழ்த்தினார்.
இந்த போட்டிகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சித்தார்த் ராஜா, கார்த்தி விசாலாட்சி உள்பட 7 ஜூனியர் வீரர், வீராங்கனைகள் கேரளாவில் நடக்கும் மாவட்டங்களுக்கு இடையிலான சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க இருப்பதாக சென்னை மாவட்ட பேட்மிண்டன் சங்க பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஊழல் எதிரொலி ஆசிய விளையாட்டு போட்டிக்கு மத்திய அரசு மறுப்பு !

டெல்லி,ஆக.4
வரும் அக்டோபர் மாதம் டெல்லியில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் போட்டிக்கான ஏற்பாடுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளதால், 2019ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்தும் உரிமையைப் பெறுவதற்கான ஏலத்தில் பங்கேற்க மத்திய அரசு தடை விதிக்கவுள்ளது.
காமன்வெல்த் போட்டிகள் குறித்து மிகப் பெரிய அளவில் நிதி மோசடிகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில் 2019ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியை இந்தியா வில் நடத்த முடிவு செய்திருந்த இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முயற்சிக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் தடை போட்டு விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்த அனுமதி கோரி ரூ. 15 கோடியை கேட்டிருந்தது ஒலிம்பிக் சங்கம். ஆனால் அந்தக் கோரிக்கையை விளையாட்டு அமைச்சகம் நிராகரித்து விட்டது. இந்தப் பணத்தை வைத்துத்தான் விண்ணப்பிக்கவும், இந்தியாவுக்கு ஆதரவு சேகரிக்கும் பிரசாரத்தையும் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது இந்திய ஒலிம்பிக் சங்கம். ஆனால் அதை தற்போது மத்திய அரசு நிராகரித்து விட்டது.

பட்டம் வெல்வதே என் லட்சியம்சோம்தேவ்

டெல்லி,ஆக.4
டென்னிஸ் போட்டியில் பட்டம் வெல்வது மிகவும் கடினம் என்றாலும் அதனை நோக்கி முன்னேறுவதுதான்எனது லட்சியம் என்று இந்திய டென்னிஸ் சோம்தேவ் கூறியுள்ளார்.
இது குறித்து கருத்து கூறிய சோம்தேவ் :
ஆடவர் டென்னிஸ் உலகத் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் நுழைந்தது மகிழ்ச்சியளிக்கிறது என்றாலும் நான் எப்போது முதல் பட்டம் வெல்வேன் என்று உறுதிபடக் கூறமுடியவில்லை. என்னுடைய முதல் சாம்பியன் பட்டம் எப்போது கிடைக்கும் என்பது என்னுடைய ஆட்டத்திறனை பொறுத்தது என்று கூறினார்.
இதற்கு முன்பு லியாண்டர் பயஸ் 73ஆம் இடத்திற்கு முன்னேறி சாதனை புரிந்தார். ஆனால் இந்தியாவின் மிகச்சிறந்த் டென்னிஸ் வீரராக விஜய் அமிர்தராஜ் ஏன் கணிக்கப்படுகிறார் என்றால் அவர் உலகத் தரவரிசையில் 16ஆம் இடம் வரை முன்னேறி சாதனை புரிந்துள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக ரமேஷ் கிருஷ்ணன் 23ஆம் இடம் வரை முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்து அணியில் மாற்றமில்லை

லண்டன்,ஆக.4
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் முதல் டெஸ்டில் விளையாடிய வீரர்களே இந்தப் போட்டியிலும் விளையாடுவார்கள் என்று இங்கிலாந்து கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
நாட்டிங்கம் டெஸ்ட் போட்டியில் மோர்கன், பிரையர் ஆகியோரது பேட்டிங் சிறப்புடன், ஆண்டர்சனின் அபார ஸ்விங் பந்து வீச்சும் கைகொடுக்க பாகிஸ்தானை 354 ரன்கள் வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வச் செய்தது இங்கிலாந்து.
இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள இங்கிலாந்து அணி வரும் வெள்ளியன்று துவங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மாற்றங்கள் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது

பேடி சாதாரண பந்து வீச்சாளர் முரளிதரனுக்கு கண்டனம்


டெல்லி,ஆக.4இந்திய முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் பேடி ஒரு சாதாரண பந்து வீச்சாளர் என்றும் அவருக்கு சர்ச்சைகளை கிளப்புவதே வேலை என்றும் கூறியிருந்த முரளிதரனுக்கு பிரசன்னா மற்றும் மணீந்தர்சிங் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவுடனான முதல் டெஸ்ட் போட்டிகயிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு முரளிதரன் அளித்த பேட்டி ஒன்றில் தனது பந்து வீசும் முறை பற்றி பேச பேடிக்கு தகுதியில்லை என்பது போல காரசாரமாக விமர்சித்திருந்தார்.
இது குறித்து முன்னாள் இந்திய சுழல்பந்து வீச்சாளர்கள் கூறியதாவது:
முரளிதரனின் கருத்து தேவையற்றது.
பிரசன்னா:
அவரது பந்து வீச்சை அனுமதிப்பதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிகள் வளைக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
மணீந்தர்சிங்:
பேடி போன்ற மிகச் சிறந்த பந்து வீச்சாளரை குறை கூறி தன்னுடைய பெருமையை குறைத்து கொள்கிறார் முரளிதரன்.
அவருக்கு அளித்தது போல பேடிக்கும் கையை வளைத்து பந்து வீச அனுமதிக்கப்பட்டிருந்தால் பேடியும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார் மேலும் முரளிதரன் இதுபோன்ற கருத்துக்களை கூறாமல் இருப்பதே நல்லது என தெரிவித்துள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டில் கல்மாடி ஆதரவாளர்

டெல்லி,ஆக.4
காமன்வெல்த் போட்டி நடைபெறுமா என்று கேள்வி எழும் வண்ணம் நாளுக்கு நாள் காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகளில் நடைபெற்றுள்ள ஊழல்கள் பற்றி செய்திகள் வெளிவந்து கொண்டுள்ளன.இந்நிலையில் காமன்வெல்த் போட்டிக்கான கட்டுமானப் பணிகளில், பல கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான கல்மாடியின் ஆதரவாளர் தர்பாரியை பதவியிலிருந்து நீக்குமாறு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
காமன்வெல்த் போட்டிகளுக்கான கட்டுமானப் பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளாதாக எழுந்த புகாரையடுத்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் சுரேஷ் கல்மாடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் காமன்வெல்த் போட்டிகள் ஒருங்கிணைப்பு கமிட்டியில் இருந்து அதன் துணைத் தலைவர் டி.எஸ்.தர்பாரியை நீக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.டி.எஸ்.தர்பாரி காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்பு கமிட்டியின் வருவாய் மற்றும் நிதியை கையாள்பவர்.இவர் மீது ஏற்கனவே கேரளா சுங்கத்துறையில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காமன்வெல்த் முறைகேடுகளில் அயல்நாட்டு நிறுவனங்களின் பங்குள்ளதா என்று அமலாக்கத்துறை இயக்ககமும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.

சென்னையில் அகில இந்திய கல்லுரிகள் கூடைப்பந்து போட்டி

சென்னை, ஆக. 4
சென்னையில் ஆண்டு தோறும் அகில இந்திய கல்லூரிகள் கூடைப்பந்து போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 10வது அகில இந்திய கல்லூரிகள், பள்ளிகள் கூடைப்பந்து போட்டி வருகிற 6ந் தேதி முதல் 11ந் தேதி வரை தியாகராய நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் நடக்கிறது.
ஆண்கள் பிரிவில் மொத்தம் 30 அணிகளும், பெண்கள் பிரிவில் 26 அணிகளும் பங்கேற்கின்றன.
நாக் அவுட் மற்றும் லீக் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.1 லட்சம் ஆகும்.

நிர்வாகிகள் தேர்வு குறித்து ஹாக்கி இந்தியா விளக்கமளிக்க வேண்டும்

டெல்லி,ஆக.4
ஹாக்கி இந்தியா அமைப்பின் நிர்வாகிகளுக்கான தேர்தலுக்கு சட்ட ரீதியாக சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து நிர்வாகிகள் தேர்வுமுறை குறித்து விளக்கம் அளிக்குமாறு, ஹாக்கி இந்தியா, இந்திய ஹாக்கி சம்மேளனம் ஆகிய அமைப்புகளுக்கு, மத்திய அரசின் விளையாட்டுத்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நிர்வாகிகள் தேர்வு மற்றும் சர்வதேச போட்டிகளில், எந்த விதிமுறைகளின் கீழ் இந்த இரு அமைப்புகளும் பங்கேற்கின்றன.மத்திய அரசின் விளையாட்டுத்துறைக்கான விதிமுறைகளையும்,சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் விதிமுறைகளையும் அந்த இரு அமைப்புகளும் பின்பற்றுகிறதா என்றும் நோட்டீசில் கேட்கப்பட்டுள்ளன.
இது குறித்த விளக்கங்களை இன்னும் இரு வாரங்களுக்குள் அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

ஏ.டி.பி. டென்னிஸ் பட்டம் வென்றது அமெரிக்க இணை


லாஸ் ஏஞ்சல், ஆக. 4 அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏ.டி.பி. பார்மர்ஸ் கிளாசிக் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் இறுதி போட்டியில் வெற்றி பெற்று வாகையர் பட்டம் வென்றது அமெரிக்காவின் மைக் பிரையன் (இடது) பாப் பிரையன் (வலது) இணை. மைக், பாப் சகோதரர்கள் இணை 67, 62, 107 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் எரிக் பூட்டோராக், ஜீன் ஜூலியன் இணையை வீழ்த்தியது. இந்த இணை இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது இது 100வது முறையாகும். அதில் அந்த இணை பெறும் 62வது வெற்றியாகும்.

கல்மாடி உறுதிமொழி தரவேண்டும்

புதுடெல்லி,ஆக.3
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகளுக்குக் கட்டப்பட்ட கட்டுமானங்கள் மோசமான நிலையிலுள்ளதாக கூறி சுரேஷ் கல்மாடி மீது காமன்வெல்த் விளையாட்டுக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 1ஆம் தேதி விளையாட்டு மைதானங்கள் அமைப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும், ஆனால் கட்டுமானங்கள் பல இன்னும் முடிவடையாத நிலையில் உள்ளதால் கட்டுமானங்கள் சரிசெய்யப்படும் என்பதற்கான எழுத்துவழி உறுதிமொழியையும் கோரியுள்ளது. காமன்வெல்த் கட்டுமானப்பணிகள் பொதுப்பணித்துறையாலும், டெல்லி மாநகராட்சியாலும், மத்திய பொதுப்பணித் துறை மற்றும் டெல்லி நகர மேம்பாட்டு ஆணையம், புதுடெல்லி நகராட்சி கவுன்சில், ஆர்.ஐ.டி.இ.எஸ். ஆகியவையாலும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதை லஞ்ச ஒழிப்புத் துறை அம்பலப்படுத்தியுள்ளது. கட்டுமானப்பணிகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்ட பின்பும் ஒப்பந்தப்புள்ளி தொகையை மாற்றியது, அதிக விலைக்கு ஒப்பந்தங்களை வழங்கியது, தகுதியற்றவர்களுக்கு இந்த ஒப்பந்தங்களை வழங்கியது ஆகியவற்றில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சி.பி.ஐ. விசாரணை தேவை என்று மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை பரிந்துரை செய்துள்ளது.

சர்வதேச டெஸ்ட் தரவரிசை முதலிடத்தை இழந்தார் சேவாக்


துபாய்,ஆக.3
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஷேவாக் தனது முதல் இடத்தை இழந்துள்ளார். 866 புள்ளிகளுடன் அவர் 2 வது இடத்துக்கு பின்தங்கியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான கொழும்பு டெஸ்டில் அவர் 99 ரன் எடுத்தபோதும் முதல் இடத்தை இழந்தார். இலங்கை கேப்டன் சங்ககரா இரட்டை சதம் அடித்ததால் ஷேவாக்கை பின்னுக்கு தள்ளிவிட்டு முதல் இடத்தை பிடித்தார். அவர் 882 புள்ளிகள் பெற்றுள்ளார்.
2009 ம் ஆண்டில் அவர் முதல் இடத்தில் இருந்தார். தற்போது மீண்டும் அந்த இடத்துக்கு வந்துள்ளார்.
ஜெயவர்த்தனே (இலங்கை) 832 புள்ளிகள் பெற்று 3 வது இடத்தில் உள்ளார்.
கொழும்பு டெஸ்டில் இரட்டை சதம் அடித்ததால் தெண்டுல்கர் 6 வது இடத்தில் இருந்து 4 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவர் 817 ரேட்டிங் புள்ளிகள் பெற்றுள்ளார்.மற்ற இந்திய வீரர்களில் காம்பீர் 11 வது இடத்திலும், லட்சுமண் 15 வது இடத்திலும், டிராவிட் 19 வது இடத்திலும் உள்ளனர்.மைக்கேல் கிளார்க் (ஆஸ்திரேலியா), சந்தர்பால் (வெஸ்ட்இண்டீஸ்), காலிஸ் சுமித் (தென்ஆப்பிரிக்கா), காடிச் (ஆஸ்திரேலியா), ரோஸ் டெய்லர் (நியூசிலாந்து) ஆகியோர் 5 முதல் 10வது இடங்களில் உள்ளனர்.
பந்து வீச்சாளர்களில் தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த ஸ்டெயின் 887 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார். முகமது ஆசிப் (பாகிஸ்தான்) 818 புள்ளிகள் பெற்று 2வது இடத்திலும் முரளீதரன் (இலங்கை) 3வது இடத்திலும் உள்ளனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் முத்திரை பதித்த இங்கிலாந்து வேகப்பந்து வீரர் ஆண்டர்சன் 5வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
இந்திய வீரர்களில் ஜாகீர்கான் 8வது இடத்திலும், ஹர்பஜன்சிங் 9வது இடத்திலும் உள்ளனர்

தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்து கொள்ளுமா இந்தியா?


இலங்கையுடனான 3வது டெஸ்ட் இன்று ஆரம்பம்
கொழும்பு,ஆக.3இந்தியஇலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று தொடங்குகிறது.இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே ஐசிசி தரசரிசையிலுள்ள முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ளமுடியும் என்ற கட்டாயத்திலிருக்கிறது இந்திய அணி.தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. காலேயில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், கொழும்புவில் நடைபெற்ற இரண்டாவது போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டிக்காக கொழும்பில் நேற்று இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்
தொடரும் சோகம்
ஆனால் பந்து வீச்சு தான் தொடர்ந்து கவலை அளிக்கும் வகையில் உள்ளது. முன்னணி வீரர்களான ஜாகீர்கான், ஸ்ரீசாந்த் இல்லாதது அணிக்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் முன்னணி சுழற்பந்து வீரரான ஹர்பஜன்சிங்கால் இந்த தொடரில் ஒன்றும் செய்ய முடியவில்லை.
களமிறங்குவது யார்?
காயம் காரணமாக 2வது டெஸ்டில் விளையாடாத காம்பீர் இன்றைய போட்டியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அவர் களமிறங்கும் பட்சத்தில் தமிழக வீரர் விஜய் கழற்றி விடப்படுவார். காய்ச்சல் காரணமாக 2வது டெஸ்டில் விளையாடமுடியாமலிருந்த யுவராஜ்சிங் . தற்போது உடல் தகுதியுடன் இருந்தாலும் முதல் டெஸ்டிலேயே சதம் அடித்து முத்திரை பதித்த சுரேஷ் ரெய்னாவுக்கே இன்றைய போட்டியில் விளையாட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இலங்கை அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் பரணவிதனா, கேப்டன் சங்ககரா, மகிளா ஜெயவர்த்தனே ஆகியோர் சிறப்பாக உள்ளனர். இதேபோல் பந்துவீச்சில் காயம் காரணமாக 2வது டெஸ்டில் விளையாடத முன்னணி வேகப்பந்து வீரர் மலிங்கா 3வது டெஸ்டில் ஆடுகிறார். அவரது வருகை அந்த அணிக்கு கூடுதல் பலம். இலங்கை அணியை பொறுத்தவரை இந்தப் போட்டியை வெற்றி தோல்வியின்றி முடித்தாலே தொடரை வென்றுவிடும்.இரு அணிகளும் இன்று மோதுவது 35வது டெஸ்ட் ஆகும். இதுவரை நடந்த 34 டெஸ்டில் இந்தியா 13 போட்டியிலும், இலங்கை 6 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.
சாதனையின் சின்னம் சச்சின்
சாதனை மேல் சாதனைகளை நிகழ்த்தி வரும் சச்சினின் சாதனை பயணத்தில் மேலும் ஒரு சாதனையாக உலகிலேயே அதிக டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர் என்ற சாதனையை இன்றைய போட்டியில் ஆடுவதன் மூலம் சச்சின் பெறுவார்.
இலங்கை அணிக்கு எதிராக இன்றைய போட்டியில் ஆடுவதன் மூலம் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் வாக்கின் 168 டெஸ்ட் போட்டிகள் என்ற சாதனையை சச்சின் முறியடிப்பார். இதேபோல் 442 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள சச்சின் இன்னும் 3 போட்டிகளில் பங்கேற்றால் 444 போட்டிகளில் பங்கேற்று ஒருநாள் போட்டியில் அதிக போட்டியில் விளையாடியவர் என்ற சனத் ஜெயசூரியாவின் சாதனையையும் கடந்து விடுவார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் 168 போட்டிகளில் 56.08 என்ற சராசரி விகிதத்தில் 13,742 ரன்களைக் குவித்துள்ளார்.
இதில்48 சதங்களும், 55 அரை சதங்களும் அடங்கும். ஒரு நாள் கிரிக்கெட்டில் 46 சதங்களுடன் 17,598 ரன்களைக்குவித்துள்ளார் சச்சின். ஒரு நாள் கிரிக்கெட்டில் முதன் முதலாக இரட்டைச்சதம் அடித்த உலக சாதனையும் சச்சின் பக்கமே உள்ளது.

சர்வதேச ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றார் ஸ்பெயின் வீரர்

ஜிஸ்டாட்,ஆக.3
சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் ஸ்பெயின் வீரர் நிக்கோலஸ் அல்மெக்ரா சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார். ஜிஸ்டாட் நகரில் நடைபெற்ற போட்டியில், நிக்கோலஸ் அல்மெக்ரா, பிரான்ஸின் ரிச்சார்டை எதிர்கொண்டார். போட்டியின் துவக்கம் முதலே நிக்கோலஸ் ஆதிக்கம் செலுத்தினார். முதல் செட்டில் ரிச்சார்ட் கடுமையாக போராடினாலும், நிக்கோலஸின் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார். இருப்பினும் முதல் செட்டை 75 என்ற செட் கணக்கில் நிக்கோலஸ் கைப்பற்றினார். பரபரப்பாக நடைபெற்ற போட்டியின் முடிவில் நிக்கோலஸ் இரண்டாவது செட்டை 61 என்ற கணக்கில் எளிதாக வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். இந்த வெற்றியின் மூலம் ஏடிபி சர்வதேச டென்னிஸ் போட்டியில் 7ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை நிக்கோலஸ் பெற்றுள்ளார்.

பாக் அணியில் மீண்டும் முகமது யூசுப்

லண்டன்,ஆக.3
பாக் அணியில் மீண்டும் மூத்த வீரரான முகமது யூசுப் அணியில் இடம் பெற்றுள்ளார்.
ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் ஏற்பட்ட தோல்வியின் எதிரொலியாக யூசுப்பை மீண்டும் டெஸ்ட் அணிக்குள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அதேபோல் 171 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றிய டேனிஷ் கனேரியாவும் அணியிலிருந்து நீக்கப்பட்டு ரஸா ஹசன் என்ற புதிய சுழற்பந்து வீச்சாளர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 354 ரன்களில் தோல்வியுற்றது.அந்த நாட்டு கிரிக்கெட் வரலாற்றில் 2வது மிகப்பெரிய தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் 2004ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதனத்தில் 491 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது அதன் மிகப்பெரிய தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

பாக் அணியின் பயிற்சியாளராக விருப்பம் இன்சமாம்


லாகூர்,ஆக.3
பாக் அணியின் பேட்டிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளராக முன்னாள் வீரர் இஜாஷ் அகமத் பணியாற்றி வரும் நிலையில் அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பொறுப்பு ஏற்க விரும்புவதாக முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்ஹக் ஆசை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது:எனக்கு கிடைத்த பெயர், புகழ் எல்லாமே பாகிஸ்தான் கிரிக்கெட் எனக்கு தந்தது. அதற்கு பிரதிபலனாக பேட்டிங் பயிற்சியாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தால் அதனை ஏற்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. பாகிஸ்தான் அணிக்கு நிச்சயம் முழுநேர பேட்டிங் பயிற்சியாளர் தேவை.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு ஏற்ப பாக் அணியின் பேட்ஸ்மேன்களுக்கு தேவையான நுணுக்கம்,பொறுமை இல்லை.அவர்களுக்கு போதுமான பொறுமையில்லாததால் 20 முதல் 30 ரன்களில் ஆட்டம் இழந்து விடுகின்றனர்.டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இது போதாது.ஓய்வு பெற்ற முகமது யூசுப் ,யூனிஸ்கான் ஆகிய சீனியர் வீரர்களை மீண்டும் அணியில் சேர்ப்பது குறித்து தேர்வு குழுவினர் பரிசீலிக்க வேண்டும்' என்றார்.இங்கிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக பாக் அணியில் முகமது யூசுப் மீண்டும் இடம் பெற்றுள்ள நிலையில் இன்சமாம் இப்படி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தரவரிசையில் சோம்தேவ் முன்னேற்றம்


சென்னை,ஆக.3
ஆண்களுக்கான ஒற்றையர் ஏ.டி.பி. டென்னிஸ் தரவரிசையில் 96வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் இந்திய டென்னிஸ் வீரர் சோம்தேவ் தேவ்வர்மன்.
கடந்த 11 ஆண்டுகளில் முதல் 100ற்குள் நுழையும் ஒரே வீரர் சோம்தேவ் ஆவார்.ஏ.டி.பி. டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் லியாண்டர் பயஸுக்கு பிறகு முதல் 100 இடங்களூக்குள் நுழைந்து 96வது இடம் பிடித்துள்ளார் . தற்போது இவர் 96வது இடத்தில் இருப்பதால் அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் பிரதான சுற்றுக்கு விளையாட நேரடியாக தகுதி பெற்றுள்ளார்.வளர்ந்து வரும் இளம் வீரரான சோம்தேவ் சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் பலம் வாய்ந்த கார்லோஸ் மோயா, இவோ கார்லோவிச் போன்ற வீரர்களை வென்றுள்ளார்.மேலும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் சுற்றில் சுவிஸ் வீரர் சியுடிநெல்லியிடம் 5 கணக்கில் தோல்வியுற்றார்.தோல்வியடைந்தாலும் இவரது ஆட்டம் பாராட்டும் படியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சாந்திக்கு ஆதரவாக கனடா வீராங்கனை!


புது டெல்லி,ஆக.2
ஆண் தன்மை மிக்கவராக அறிவிக்கப்பட்டு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ள தமிழக வீராங்கனை சாந்திக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளார் கனடா நாட்டு சைக்கிள் வீராங்கனை கிறிஸ்டன் ஒர்லி.இவர் ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்.
தோஹா ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகள போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் சாந்தி. ஆனால் பின்னர் பாலின சோதனை நடத்தப்பட்டு அவர் ஆண் தன்மை மிக்கவர் என்று கூறி அவருடைய பதக்கத்தை பறித்து அவர் விளையாடவும் தடை விதித்தனர்.
இதனால் மனம் ஒடிந்து போன சாந்திக்கு தமிழக முதல்வர் கருணாநிதி ஆறுதல் கூறி, சாந்தி பிறந்த மாவட்டமான புதுக்கோட்டையில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், இடைக்கால பயிற்சியாளர் வேலையை வழங்கினார். ஆனால் சம்பள உயர்வு தராமல் தான் அலட்சியப்படுத்தப்படுவதாக கூறி சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார் சாந்தி.
இந்த நிலையில் சாந்தி மீதான தடையை அகற்ற களத்தில் குதித்துள்ளார் கனடா வீராங்கனை கிறிஸ்டன் ஒர்லி.
தென்னாப்பிரிக்க சைக்கிள் வீராங்கனை காஸ்டர் செமன்யாவுக்கு, கடந்த ஆண்டு பெர்லினில் நடந்த உலக சாம்பியன்போட்டியின்போது சாந்திக்கு ஏற்பட்டதைப் போன்ற பிரச்சினை உருவானது. செமன்யா ஆண் தன்மை மிக்கவர் எனறு கூறி 11 மாத கால தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்காக கடுமையாக வாதாடினார் கிறிஸ்டன். இதன் விளைவாக சமீபத்தில் செமன்யா மீதான தடையை உலக சைக்கிள் சங்கம் நீக்கியது.
இந்த நிலையில், தற்போதுசாந்திக்காக குரல் கொடுக்க முன்வந்துள்ளார் கிறிஸ்டன். இதுதொடர்பாக சாந்திக்கு இமெயில்களை அனுப்பி தொடர்பு கொண்டுள்ளார். இதுகுறித்து கிறிஸ்டன் கூறுகையில், காஸ்டர் செமன்யா விவகாரத்தில் நான் வெற்றி பெற்றேன். அதேபோல சாந்திக்கும் நான் உதவப் போகிறேன் என்று கூறியுள்ளார்.
செமன்யாவுக்கு கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டபோது ஒட்டுமொத்த தென் ஆப்பிரிக்காவும் அவருக்காக அணி திரண்டது. போராட்டங்கள் வெடித்தன. சட்ட ரீதியான அணுகுமுறைகளும் உலக சைக்கிளிங் கழகத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
ஆனால் சாந்தி விவகாரத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை. சாந்தி பாலின சோதனையில் தோல்வியடைந்து விட்டார் என்ற ஒற்றை வரியோடு இந்திய தடகளச் சங்கம் நின்று விட்டது. மத்திய அரசும் இதுகுறித்து கவலைப்படவில்லை. விளையாட்டு அமைப்புகளும் கண்டுகொள்ளவில்லை. யாருமே இதைப் பெரிய விஷயமாகவே நினைக்கவில்லை.
இதுகுறித்து சாந்தி கூறுகையில், எனக்கு கிறிஸ்டன் ஒர்லி மெயில்கள் அனுப்பியுள்ளது உண்மைதான்.பல ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் ஒருவர் தனக்காக போராட களத்தில் இறங்கியுள்ளது எனக்கு பெரும் மன ஆறுதலைக் கொடுத்துள்ளது. என்னை மீண்டும் ஓட வைக்க அவர் விரும்புகிறார். எனக்காக அனைவரும் உதவுமாறு தயை கூர்ந்து கேட்டுக் கொள்கிறேன் என்றார் .

கிளாசிக் டென்னிஸ் தொடர் இறுதிப் போட்டியில் ஷரபோவா

கலிபோர்னியா,ஆக.2
கலிபோர்னியாவில் நடைபெற்று வரும் பேங்க் ஆஃப் தி வெஸ்ட் கிளாசிக் டென்னிஸ் தொடர் நடைபெற்றுவருகிறது.இந்த தொடரின் அரையிறுதிப் போட்டியில் போலந்து வீராங்கனை ராத்வான்ஸ்காவை வீழ்த்தி ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா இறுதி போட்டிக்குள் நுழைந்தார். அரையிறுதியில் 1 6, 6 2, 6 2 என்றே சற்றே போராடி வீழ்த்தி இறுதியில் விக்டோரியா அசரென்காவை சந்திக்கிறார்.
விக்டோரியா அசரென்கா அரையிறுதியில் ஆஸ்ட்ரேலிய வீராங்கனை சமந்தா ஸ்டோசரை 6 2, 6 3 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார்.முன்னனி வீரர்கள் மோதுவதால் போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

காமன்வெல்த் கட்டுமானப் பணிகளில் நிதிமுறைகேடு விசாரனை நடத்த உத்தரவு

புது டெல்லி,ஆக.2

காமன்வெல்த் போட்டிகளுக்கான கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட சில நிறுவனங்கள் நிதிமுறைகேட்டில் ஈடுபட்டிருப்பது குறித்து விசாரணை நடத்த பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அமைச்சக செயலாளர் சந்திரசேகர், நேரில் ஆய்வு செய்து இதுதொடர்பான விசாரணையை மேற்கொள்வார் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காமன்வெல்த் போட்டிகளுக்கான திட்டங்கள் தாமதமாவதற்கான காரணங்கள் குறித்தும் சந்திரசேகர் விசாரணை நடத்துவார் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, லண்டனைச் சேர்ந்த ஏ எம் பிலிம்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்களிடம் அமலாக்கத்துறையினரும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் காமன்வெல்த் போட்டிகள் திட்டமிட்டபடி நடக்கும் என்று டெல்லி மாநில முதலமைச்சர் ஷீலா தீட்சித் உறுதியளித்துள்ளார். காமன்வெல்த் போட்டிகள் தொடர்பான அனைத்துப் புகார்களையும் போட்டிக்குழு நிர்வாகம் நிராகரித்துள்ளது. இப்போட்டிகளுக்கான கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஒரு சில நிறுவனங்கள் நிதி முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதால், அவற்றின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறு சிபிஐயிடம் மத்திய லஞ்ச ஒழிப்புத்துறை புகார் அளித்துள்ளது

ஸ்பானீஷ் லீக் போட்டிநடத்தும் வாய்ப்பை இழந்தது சிங்கப்பூர்

சிங்கப்பூர்,ஆக.2
முதல் ஸ்பானீஷ் லீக் சர்வதேச கோப்பைக்கான கால்பந்து போட்டியை சிங்கப்பூரில் நடத்த வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
ஸ்பானீஷ் லீக் போட்டியை ஆசிய நாடுகளில் பிரபலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் சர்வதேச ஸ்பானீஷ் லீக் போட்டியும் ஒன்று. அதாவது ஒவ்வொரு வருடமும் இந்த போட்டி ஸ்பெயினை தவிர்த்து ஏதாவது ஒரு ஆசிய நாட்டில் நடைபெறும்.இதில் ஸ்பானீஷ் லீக்கில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுடன் போட்டியை நடத்தும் நாட்டின் தலைசிறந்த அணி ஒன்றும் மோதும்.ஒவ்வொரு ஸ்பானீஷ் லீக் போட்டி துவங்குவதற்கு முன் இந்த போட்டி நடைபெறும்.
முதல் சர்வதேச ஸ்பானீஷ் லீக் வருகிற 2011ம் ஆண்டு ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் போட்டியை தென்கிழக்காசிய நாடுகளில் ஏதாவது ஒன்றில் நடத்த லாலீகா விரும்புகிறது. இது குறித்து விவாதிப்பதற்காக அந்த அமைப்பின் தலைமை செயல் அதிகாரி பிரான்சிஸ்கோ ரோகா பெரஸ் நேற்று சிங்கப்பூர் வந்தார். சிங்கப்பூர் கால்பந்து சங்க நிர்வாகிகளுடன் இது குறித்து விவாதித்ததார். ஆனால் சிங்கப்பூரில் முதல் சர்வதேச ஸ்பானீஷ் லீக் போட்டியை நடத்த வாய்ப்பு குறைவு எனத் தெரிய வருகிறது. முக்கியமாக அங்கு ஸ்டேடியம் வசதி குறைவாக உள்ளதே இதற்கு காரணம்.
இது குறித்து சிங்கப்பூர் கால்பந்து சங்கத் தலைவர் சைனுதீன் நுர்தீன் கூறுகையில்,''புகழ்பெற்ற பார்சிலோனா, ரியல்மாட்ரிட் போன்ற அணிகள் விளையாடும்பட்சத்தில் பிரமாண்டமான ஸ்டேடியங்கள் தேவை. சிங்கப்பூரின் பெரிய ஸ்டேடியமான நேஷனல் ஸ்டேடியத்தில் தற்போது புணரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. அதனால் முதல் போட்டி சிங்கப்பூரில் நடக்க வாய்ப்பில்லை.புணரமைப்பு பணி முடிந்து விட்டால் இந்த போட்டியை சிங்கப்பூரில் நடத்த வாய்ப்பிருக்கிறது'' என்றார்.

காமன்வெல்த் ஸ்டேடியம் ஒழுகுகிறது

புதுடெல்லி,ஆக.2
காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகளுக்காக கட்டப்பட்ட பளுதூக்கும் விளையாட்டு மைதானம் ஒரு மூண்டுண்ட அமைப்பாகும். ஆனால் டெல்லியில் பெய்த மழைஇல் அந்த ஸ்டேடியத்தில் மழை நீர் ஒழுகி மைதானத்தில் தண்ணீர் ஆங்காங்கே இருந்தது.
ஏற்கனவே ஊழல் நடைபெற்றுவருவதாக கடும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நிலையில் தற்போது மழை நீர் கூரையிலிருந்து ஒழுகுவது மேலும் பல சிக்கல்களை எழுப்பியுள்ளது.
ஆனால் விளையாட்டுத் துறை அமைச்சர் பதட்டமடைய வேண்டியதில்லை, இதனை சரி செய்து விடலாம் என்றார்.

லண்டன் ஒலிம்பிக் போட்டி இந்திய வீரர் தகுதி


புதுடெல்லி,ஆக.2
உலக துப்பாக்கி சுடும் போட்டி ஜெர்மனியில் உள்ள முனிச்நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் ககன் நரங்குக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது.இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் முதல் இந்திய வீரர் என்னும் சிறப்பை பெற்றுள்ளார்.
உலகத் துப்பாக்கி சுடும் போட்டியில் 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் ககன் நரங் வெண்கல பதக்கம் வென்றார். உலகின் இரண்டாம் நிலை வீரரான ககன் தகுதி சுற்றில் 597 புள்ளிகளும், இறுதி சுற்றில் 102 புள்ளிகளும் ஆக மொத்தம் 699 புள்ளிகள் பெற்றார்.
உலக சாம்பியன் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்றதன் மூலம் ககன்நரங் 2012ம் ஆண்டு லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
இதனால், லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் ககன் நரங் ஆவார். ராஜூவ்காந்தி கேல்ரத்னா விருது அறிவிக்கப்பட்ட மறுதினத்தில் ககன் இந்த முத்திரையை பதித்து உள்ளார்.
இந்தத் துப்பாக்கிச் சுடும் போட்டியில், ஒலிம்பிக் சாம்பியனான அபினவ் பிந்த்ரா ஏமாற்றம் அளித்தார். 25வது இடத்தை பிடித்து இறுதி சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை. இத்தாலி வீரர் நிக்கோலோ 702.5 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கமும், அங்கேரி வீரர் பீட்டர் சிடி 700.4 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கமும் பெற்றனர்.

வடகொரியா கால்பந்து பயிற்சியாளருக்கு மரண தண்டனை!


பான்யாங், ஆக.2
உலக கோப்பை கால்பந்து போட்டியில் வடகொரியா அணிக்கு ஏற்பட்ட மோசமான தோல்வியின் காரணமாக அந்த அணியின் பயிற்சியாளர் கிம்ஜாங்ஹபூன் நீக்கப்பட்டுள்ளார்.
வடகொரியா 1966ம் ஆண்டுக்கு பிறகு இந்த முறை தான் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது.இந்நிலையில் அந்த தான் போட்டியிட்ட 3 லீக் ஆட்டத்திலும் தோல்வியை தழுவியது. பிரேசிலிடம் 12 என்ற கணக்கிலும், ஐவேரிகோஸ்டிடம் 03 என்ற கணக்கிலும் ,போர்ச்சுக்கல்லிடம் 07 என்ற கோல்கணக்கிலும் தோல்வியுற்றது. இப்படி லீக் ஆட்டத்தில் வடகொரியா அணிக்கு ஏற்பட்ட தோல்வியின் காரணமாக அந்த அணியால் ரவுண்ட் 16 சுற்றுக்கு தகுதி பெறமுடியாமல் போனது.உலக கோப்பை கால்பந்து போட்டியின்முதல் சுற்றிலேயே வடகொரியா வெளியேறியதை அந்நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இதனால் அந்த அணி நாடு திரும்பியதும் அதிகாரிகள் முன்னிலையில் விசாரணைக்குட் படுத்தப்பட்டது. விசாரணையின் போது
தோல்விக்கு காரணம் பயிற்சியாளர் தான் என்று வீரர்கள் குற்றம் சாட்டினர். இதைத்தொடர்ந்து பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட அவர் பொதுமக்கள் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்டார்.
மேலும் இந்த தோல்வியால் கிம்ஜாங் நாட்டையே அவமானப்படுத்தி விட்டதாக விசாரணை குழு குற்றம் சாட்டியது. இது அந்நாட்டு அதிபருக்கு அவமதிப்பு ஏற்பட்டதாக கருதப்படுகிறது.
அந்நாட்டு சட்டப்படி அதிபரை அவமானப்படுத்து வதற்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களில் வடகொரியாவில் 2 அதிகாரிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது .உலக கோப்பை போட்டியில் ஏற்பட்ட தோல்விக்காக பயிற்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதலில் பிரேசில் பயிற்சியாளர் துங்கா நீக்கப்பட்டார். அவரை தொடர்ந்து அர்ஜென்டினா பயிற்சியாளர் மரடோனா நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.