Sunday, August 8, 2010

தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்து கொள்ளுமா இந்தியா?


இலங்கையுடனான 3வது டெஸ்ட் இன்று ஆரம்பம்
கொழும்பு,ஆக.3இந்தியஇலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று தொடங்குகிறது.இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே ஐசிசி தரசரிசையிலுள்ள முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ளமுடியும் என்ற கட்டாயத்திலிருக்கிறது இந்திய அணி.தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. காலேயில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், கொழும்புவில் நடைபெற்ற இரண்டாவது போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டிக்காக கொழும்பில் நேற்று இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்
தொடரும் சோகம்
ஆனால் பந்து வீச்சு தான் தொடர்ந்து கவலை அளிக்கும் வகையில் உள்ளது. முன்னணி வீரர்களான ஜாகீர்கான், ஸ்ரீசாந்த் இல்லாதது அணிக்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் முன்னணி சுழற்பந்து வீரரான ஹர்பஜன்சிங்கால் இந்த தொடரில் ஒன்றும் செய்ய முடியவில்லை.
களமிறங்குவது யார்?
காயம் காரணமாக 2வது டெஸ்டில் விளையாடாத காம்பீர் இன்றைய போட்டியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அவர் களமிறங்கும் பட்சத்தில் தமிழக வீரர் விஜய் கழற்றி விடப்படுவார். காய்ச்சல் காரணமாக 2வது டெஸ்டில் விளையாடமுடியாமலிருந்த யுவராஜ்சிங் . தற்போது உடல் தகுதியுடன் இருந்தாலும் முதல் டெஸ்டிலேயே சதம் அடித்து முத்திரை பதித்த சுரேஷ் ரெய்னாவுக்கே இன்றைய போட்டியில் விளையாட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இலங்கை அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் பரணவிதனா, கேப்டன் சங்ககரா, மகிளா ஜெயவர்த்தனே ஆகியோர் சிறப்பாக உள்ளனர். இதேபோல் பந்துவீச்சில் காயம் காரணமாக 2வது டெஸ்டில் விளையாடத முன்னணி வேகப்பந்து வீரர் மலிங்கா 3வது டெஸ்டில் ஆடுகிறார். அவரது வருகை அந்த அணிக்கு கூடுதல் பலம். இலங்கை அணியை பொறுத்தவரை இந்தப் போட்டியை வெற்றி தோல்வியின்றி முடித்தாலே தொடரை வென்றுவிடும்.இரு அணிகளும் இன்று மோதுவது 35வது டெஸ்ட் ஆகும். இதுவரை நடந்த 34 டெஸ்டில் இந்தியா 13 போட்டியிலும், இலங்கை 6 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.
சாதனையின் சின்னம் சச்சின்
சாதனை மேல் சாதனைகளை நிகழ்த்தி வரும் சச்சினின் சாதனை பயணத்தில் மேலும் ஒரு சாதனையாக உலகிலேயே அதிக டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர் என்ற சாதனையை இன்றைய போட்டியில் ஆடுவதன் மூலம் சச்சின் பெறுவார்.
இலங்கை அணிக்கு எதிராக இன்றைய போட்டியில் ஆடுவதன் மூலம் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் வாக்கின் 168 டெஸ்ட் போட்டிகள் என்ற சாதனையை சச்சின் முறியடிப்பார். இதேபோல் 442 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள சச்சின் இன்னும் 3 போட்டிகளில் பங்கேற்றால் 444 போட்டிகளில் பங்கேற்று ஒருநாள் போட்டியில் அதிக போட்டியில் விளையாடியவர் என்ற சனத் ஜெயசூரியாவின் சாதனையையும் கடந்து விடுவார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் 168 போட்டிகளில் 56.08 என்ற சராசரி விகிதத்தில் 13,742 ரன்களைக் குவித்துள்ளார்.
இதில்48 சதங்களும், 55 அரை சதங்களும் அடங்கும். ஒரு நாள் கிரிக்கெட்டில் 46 சதங்களுடன் 17,598 ரன்களைக்குவித்துள்ளார் சச்சின். ஒரு நாள் கிரிக்கெட்டில் முதன் முதலாக இரட்டைச்சதம் அடித்த உலக சாதனையும் சச்சின் பக்கமே உள்ளது.

No comments:

Post a Comment