
காலே, ஜூலை.20
இலங்கை அணியுடனான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சு குறித்து பயிற்சியாளர் கிர்ஸ்டன் கவலை அடைந்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது :
இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தபோதிலும் அவர்களில் ஒரு சிலரே சிறப்பான இடத்தில் உள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு நாள் கிரிக்கெட்டில் 15 அல்லது 16 வேகப்பந்து வீச்சாளர்களை களமிறக்கி பரிசோதனை செய்தோம். இவர்கள் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள தவறி விட்டனர். நிறைய வேகப்பந்து வீரர்களை உருவாக்க நினைக்கிறேன். ஆனால் யாருமே நிலைத்து நிற்கவில்லை.
2வது நாள் ஆட்டத்திலாவது பந்துவீச்சாளர்கள் முத்திரை பதிப்பார்கள் என்று நினைக்கிறேன்.
இஷாந்த் ஷர்மாவை பொறுமையுடன் அணுகவேண்டும் . தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முக்கியமான இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி வாய்ப்பை உருவாக்கினவர் இஷாந்த், திறமை உள்ள வீரர் ஏதோ சிறிதுகாலம் தனது பந்து வீச்சில் சோடை போகிறார் என்பதற்காக உடனடி தீர்வுக்கு வரக்கூடாது .
கடந்த 16 டெஸ்ட் போட்டிகளில்ல் 6 பேட்ஸ்மென்கள், 5 பவுலர்கள் என்ற அணிச் சேர்க்கைதான் கை கொடுத்து வருகிறது. பேட்டிங் ஆல்ரவுண்டரை எடுத்தால் அவர் பந்துவீசுவதும் அவசியமாகிறது. ஆல்ரவுண்டர் தேவை என்பதற்காக 115 கி.மீ வேகத்தில் பந்து வீசும் ஒருவரை அணியில் எடுக்க முடியாது. மேலும் அவர் 5 டெஸ்ட் போட்டிகளுக்கு ஒரு முறை ஒரு விக்கெட் எடுப்பார் என்றால் அவர் தேவையில்லை என்றுதான் கூறுவேன் என்று கூறினார் கிரிஸ்டன்.முதல்நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருந்தது. இலங்கை அணியின் 2 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. ஒரு விக்கெட்டை புதுமுக வேகப்பந்து வீரர் அபிமன்யூ மிதுன் கைப்பற்றினார். மற்றொரு விக்கெட்டை பகுதிநேர பந்து வீச்சாளர் ஷேவாக் எடுத்தார்.
ஜாகீர்கான், ஸ்ரீசாந்த் இல்லாததால் இந்திய அணிக்கு மிகுந்த பின்னடைவு. அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீரர் இஷாந்த் சர்மாவால் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாமல் போனது பரிதாபமே.
2ஆம் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது
இந்தியஇலங்கை அணிகளுக்கு இடையேயான கால்லே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
256/2 என்று இருந்த இலங்கை அணி நேற்று ஆட்டத்தைத் துவங்கும் ஆர்வத்துடன் இருந்தது. ஆனால் அவ்வப்போது மழையும், முதல் நாள் பெய்த கன மழையால் மைதானம் நீர்நிலையாக மாறியதாலும் நேற்று உணவு இடைவேளைக்குப் பிறகு ஒருமுறை பிட்ச் சோதனை செய்யப்பட்டு மைதானம் விளையாடுவதற்கு ஏற்ற நிலையில்லாததால் மதியம் 3.18 மணிக்கு நடுவர்கள் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவித்தனர்.
No comments:
Post a Comment