Friday, July 23, 2010

தென்கொரியாவில் பிபா அதிகாரிகள் ஆய்வு

சியோல்,ஜுலை.24
உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்த வாய்ப்பு கேட்டு காத்திருக்கும் தென்கொரியாவில் 'பிபா' அதிகாரிகள் ஆய்வு பணியை தொடங்கியுள்ளனர்.
2022ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்த தென்கொரியா வாய்ப்பு கேட்டுள்ளது. உலக கோப்பையை தென்கொரியாவில் நடத்துவதற்கான சாத்திய கூறுகளை ஆராய்வதற்காக சிலி கால்பந்து சங்கத் தலைவர் ஹெரால்ட் மெயினி நிகோல்ஸ் தலைமையில் 'பிபா' அதிகாரிகள் சியோல் சென்றடைந்தனர்.அங்கு தங்கி 4 நாட்கள் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
கடந்த 2002ம் ஆண்டு உலக கோப்பை போட்டியை தென்கொரியா ஜப்பானுடன் இணைந்து நடத்திய இந்த முறை தனியாக போட்டியை நடத்த தென்கொரியா விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வில் சியோல் மற்றும் பூசான் நகரில் உள்ள ஸ்டேடியங்களையும் 'பிபா' அதிகாரிகள் பார்வையிடுகின்றனர்.
முன்னதாக ஜப்பானில் ஆய்வு நடத்திய 'பிபா' அதிகாரிகள் ஜப்பான் உலக கோப்பை நடத்துவற்கு தகுதியான நாடு என்று சான்றிதழ் அளித்துள்ளனர். 2022ம் ஆண்டு உலக கோப்பை போட்டியை நடத்த கத்தார், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் வாய்ப்பு கேட்டுள்ளன.
இதற்கிடையே ஸ்பெயின் கால்பந்து சங்கத்தின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஸ்பெயின் விளையாட்டுத்துறை செயலாளர் ஜேமி லெவார்ட்ஸ்கி கலந்து கொண்டு பேசியதாவது:
கடந்த 2002ம் ஆண்டு உலக கோப்பை போட்டியை தென்கொரியாவும் ஜப்பானும் சேர்ந்து நடத்தியது போல் 2018ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியை ஸ்பெயின் போர்ச்சுகல் நாட்டுடன் இணைந்து நடத்த எல்லாவிதமான முயற்சிகளையும் எடுக்கும். இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளும் இந்த போட்டியை நடத்த தீவிர முயற்சி செய்து வருகின்றன. அதுபோல் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் நாடுகளும் இணைந்து 2018ம் ஆண்டு உலக கோப்பை போட்டியை நடத்த களத்தில் உள்ளன. 2018ம் ஆண்டு போட்டியை நடத்த வாய்ப்பு கிடைக்காவிட்டால் 2022ம் ஆண்டு உலக கோப்பை போட்டியை நடத்தவும் ஸ்பெயினுக்கு வாய்ப்பு கேட்கப்படும்'' என்றார்.

No comments:

Post a Comment