
சென்னை,ஜுலை.23
உலக கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை இலங்கை அணியின் முத்தையா முரளிதரன் பெற்றார்.
இந்தியாவிற்கு எதிராக இலங்கை காலே நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்த உலக சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். தமிழ்நாட்டின் மருமகனான முத்தையா முரளிதரன் இலங்கை அணி சார்பாக 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்த இமாலயச் சாதனையை புரிந்துள்ளார்.
முரளிதரன் அறிமுகம்
இலங்கை டெஸ்ட் அணிக்காக 1992 ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொழும்பு பிரேமதாச அரங்கில் விளையாடினார். தனது முதல் ஒருநாள் போட்டியை ஆகஸ்டு 12, 1993ம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக கொழும்பு பிரேமதாச அரங்கில் விளையாடினார்.
சாதனை
கிரிக்கெட் உலகின் பைபிள் என வர்ணிக்கப்படும் விஸ்டன் பத்திரிகை உலகின் தலைசிறந்த வீரராக முரளிதரனைத் தேர்வு செய்துள்ளது. இந்த விருது வழங்கும் முறை உருவாக்கப்பட்டு நான்காவது வீரராக முரளிதரன் விஸ்டன் பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டார். 1992ம் விளையாடத் தொடங்கியதிலிருந்து இதுவரை டெஸ்ட் மேட்சில் 800 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 500க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.1999ம் ஆண்டு சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதான விஸ்டன் விருதை பெற்றார் முரளிதரன்.
ஜிம் லேக்கர் (இங்கிலாந்து) மற்றும் முரளிதரன் ஆகிய இருவர் மட்டுமே டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இருமுறைப் பெற்றுள்ளனர்.
டெஸ்ட் போட்டிவிளையாடும் சர்வதேச நாடுகள் அனைத்திற்கும் எதிராக 50 விக்கெட்டுகளை பெற்ற ஒரே வீரர் முரளிதரன்.
டெஸ்ட் போட்டியில் அனைத்து நாடுகளுக்கும் எதிராக 10 இலக்குகளைப் பெற்ற ஒரே வீரர்.
நான்கு அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் 10 இலக்குகளைப் பெற்ற ஒரே வீரர் முரளி .
டெஸ்ட் போட்டியில் அதிகமான நேரடி விக்கெட்டுகளை வீழ்த்தியவர் முரளிதரன்.டெஸ்ட் போட்டியில் 68 முறை 5விக்கெட்டுகளையும், 10 விக்கெட்டுகளை 22 முறையும் கைப்பற்றியுள்ளார்.இதில் 5விக்கெட்டுகளை பங்களாதேஷ், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக தலா 11 முறை கைப்பற்றியுள்ளார். 10 விக்கெட்டுகளை பங்களாதேஷ், தென்னாப்பிரிக்கா ,இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக தலா 4 முறை கைப்பற்றியுள்ளார்.டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த குட்னி வால்ஸின் சாதனை 2004 ம் ஆண்டு முறியடித்தார் முரளி.இதன் பிறகு டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் சாதனையை முரளிவார்னும் அடிக்கடி பகிர்ந்த வண்ணம் இருந்தனர்.பிறகு 2007ம் ஆண்டு கண்டியில் நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் காலிங்வுட் விக்கெட்டை வீழ்த்தி டெஸ்ட் போட்டியில் ஷேன் வார்ன் எடுத்திருந்த 709 விக்கெட் என்ற சாதனை முறியடித்தார்.அதன் பிறகு இதுவரை டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற பெருமையை தக்கவைத்துள்ளார்.இலங்கை காலே நகரில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.இந்த போட்டியுடன் ஒய்வு பெறுவதாக அறிவித்த நிலையில் உலக சாதனையை நிகழ்த்திவிட்டு செல்வது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக சாதனை படைத்த முத்தையா முரளிதரனுக்கு அனைவரும் எழுந்து நின்று தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். முரளிதரனின் சாதனையை அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் ஆரவாரத்துடன் ரசித்தனர்.
No comments:
Post a Comment