பாரிஸ், ஜூலை 27
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இடம் பெற்றிருந்த 23 பிரான்ஸ் வீரர்ளையும் புதிய பயிற்சியாளர் லாரன்ட் பிளாங்க் அணியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார்.
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் பிரான்ஸ் அணி பல சர்ச்சைகளை சந்தித்தது.
1. பிரான்ஸ் அணியின் முன்னணி வீரரான நிகோலஸ் அனால்கா பயிற்சியாளர் ரேமாண்ட் டொமினிக்குடன் மோதலில் ஈடுபட்டார்.
2. தொடர்ந்து உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்ட அனால்கா பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
3. பயிற்சியாளர் ரேமாண்ட் டொமினிக்கை எதிர்த்து பிரான்ஸ் வீரர்கள் கேப்டன் பேட்ரிஸ் எவ்ரா தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு நாள் பயிற்சியில் ஈடுபடவும் மறுத்தனர்.
4. உலகக் கோப்பையில் இறுதியாக தென்னாப்பிரிக்காவுடன் நடந்த போட்டியில் பிரான்ஸ் கேப்டன் பேட்ரிஸ் எவ்ரா உள்பட பல முக்கிய வீரர்கள் கரையில் வைக்கப்பட்டனர். தென்னாப்பிரிக்காவிடம் 21 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் தோற்றது.
5. உலகக் கோப்பை போட்டியில் ஒரு வெற்றி கூட பெறாமல் பிரான்ஸ் அணி படுதோல்வி கண்டு நாடு திரும்பியது.
6. பயிற்சியாளர் ரேமாண்ட் டொமினிக் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக லாரன்ட் பிளாங்க் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
7. படுதோல்விக்குப் பொறுப்பேற்று பிரான்ஸ் கால்பந்து சங்கத் தலைவர் ஜீன் பியரா பதவி விலகினார். அவர் மீது பிரெஞ்சு நாடாளுமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதற்கு "பிபா' கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
8. கடந்த 1998ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்றிருந்த மார்ஷல் டிசெய்லி, லிலியன் துராம் ஆகியோர் உலகக் கோப்பையில் பிரான்ஸ் கேப்டனாகப் பணியாற்றிய பேட்ரிஸ் எவ்ராவுக்கு வாழ்நாள் தடை விதிக்கக் கோரிக்கை விடுத்தனர்.
9. உலகக் கோப்பை படுதோல்வி குறித்து தன்னிடம் நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிரான்ஸ் கேப்டன் தியேரி ஹென்றிக்கு பிரான்ஸ் அதிபர் சர்கோசி உத்தரவிட்டார்.
10. உலகக் கோப்பை தோல்விக்குக் காரணமாக இருநத அத்தனை பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரான்ஸ் அதிபர் சர்கோசி அறிவித்தார்.
இப்படி பல சர்ச்சைகளை உருவாக்கிய பிரான்ஸ் வீரர்கள் அத்தனை பேரும் கூண்டோடு அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். வரும் ஆகஸ்ட் 11ம் தேதி ஆஸ்லோ நகரில் நார்வே அணியுடன் பிரான்ஸ் ஒரு நட்பு ஆட்டத்தில் மோதுகிறது. இந்தப் போட்டியில் உலக கோப்பை போட்டியில் இடம் பெற்ற 23 பிரான்ஸ் வீரர்களும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்குப் பதிலாக முற்றிலும் புதிய 23 வீரர்கள் அணியில் இடம் பெற உள்ளனர். புதிய வீரர்களை பிரான்ஸ் பயிற்சியாளர் லாரண்ட் பிளாங்க் ஆகஸ்ட் 5ம் தேதி பிரான்ஸ் கால்பந்து சங்க நிர்வாகிகள் முன்னிலையில் அறிவிக்கிறார்.
No comments:
Post a Comment