Wednesday, February 2, 2011

கடைசி வாய்ப்பு




உலக கோப்பையை கைப்பற்ற ஆறாவது முறையாக படை எடுக்கிறார் சச்சின். இம்முறை கடைசி வாய்ப்பு என்பதால், கூடுதல் ஆக்ரோஷத்துடன் செயல்பட காத்திருக்கிறார். உடல் காயத்தை பொருட்படுத்தாது மன வலிமையுடன் போராடி, இந்திய அணிக்கு 28 ஆண்டுகளுக்கு பின் உலக கோப்பை வென்று தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிக்கெட் சாதனை புத்தகத்தை புரட்டினால், இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் பெயர் தான் அதிகம் இடம் பெற்றிருக்கும். அந்தளவுக்கு சாதனை மேல் சாதனை படைத்துள்ளார். டெஸ்ட்(177 போட்டி, 14, 692 ரன், 51 சதம்) மற்றும் ஒரு நாள் போட்டிகளில்(444 போட்டி, 17, 629 ரன், 46 சதம்) அதிக ரன், அதிக சதம் அடித்து முதலிடத்தில் இருக்கிறார். கடந்த 21 ஆண்டுகளாக விளையாடி வரும் இவருக்கு, உலக கோப்பை மட்டுமே எட்டாக் கனியாக உள்ளது.
ரன் வேட்டை:
தனது 16வது வயதில் 1989ல் இந்திய அணியில் அறிமுகமானார் சச்சின். 1992ல் முதன் முறையாக உலக கோப்பை தொடரில் பங்கேற்றார். அடுத்து 1996ல் நடந்த தொடரில் ரன் மழை பொழிந்த இவர், மொத்தம் 531 ரன்கள் எடுத்தார். பின் 1999ல் நடந்த தொடரின் போது இவரது தந்தை மறைந்து விட, லண்டனில் இருந்து மும்பை திரும்பினார். இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பின், மீண்டும் இங்கிலாந்து சென்றார். கென்யாவுக்கு எதிரான போட்டியில் சதம்(101 பந்துகளில் 140 ரன்கள்) விளாசி, தனது தந்தைக்கு அர்ப்பணித்தார்.
தொடர் நாயகன்:
கடந்த 2003ல் நடந்த உலக கோப்பை தொடர், சச்சினுக்கு மிகச் சிறப்பாக அமைந்தது. இத்தொடரின் போது இவரது இடது கை நடுவிரலில் காயம் ஏற்பட்டது. வலியை தாங்கிக் கொண்ட இவர், நாட்டுக்காக தொடர்ந்து விளையாடினார். நமீபியாவுக்கு எதிராக 152 ரன்கள் எடுத்த, இவர் உலக கோப்பை அரங்கில் தனது அதிபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். பைனலில் இவர் 4 ரன்களுக்கு அவுட்டாக, இந்தியாவின் கோப்பை கனவு தகர்ந்தது. ஆனாலும், ஒட்டுமொத்தமாக 673 ரன்கள் எடுத்த இவர், தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். 2007ல் ஏமாற்றினார்.
எதிர்பார்ப்பு அதிகம்:
இம்முறை, உலக கோப்பை தொடரின்(பிப்.19ஏப்.2) பெரும்பாலான போட்டிகள் இந்தியாவில் நடக்க இருப்பதால், சச்சின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இவரது சாதனைகளை விரட்டிக் கொண்டிருக்கும் கேப்டன் பாண்டிங், ஆஸ்திரேலிய அணிக்கு 3 முறை உலக கோப்பை பெற்று தந்துள்ளார். அதிரடி பேட்டிங்கிற்கு புகழ் பெற்ற வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ், இரண்டு முறை உலக கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றுள்ளார். இவர்கள் வரிசையில் சச்சினும் இடம் பெற வேண்டும்.
கடைசி வாய்ப்பு:
தற்போது 37 வயதான சச்சினுக்கு உலக கோப்பை கைப்பற்ற இது தான் கடைசி வாய்ப்பு. ஏனென்றால் அடுத்த முறை 41 வயதை எட்டி விடுவார் என்பதால், பங்கேற்பது கடினம். தவிர, "டுவென்டி20' போட்டிகளின் அசுர வளர்ச்சியால், எதிர்காலத்தில் 50 ஓவர் போட்டிகள் நடக்குமா என்ற அச்சம் வேறு நிலவுகிறது. இம்முறை சச்சினுக்கு ஏற்பட்டுள்ள காயம்(தொடைப் பகுதியில் பிடிப்பு) சற்று கவலை அளிக்கிறது. ஆனாலும், உலக கோப்பை தொடருக்கு முன் மீண்டு விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் நெருக்கடி:
கடந்த ஆண்டு தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 200 ரன்கள் எடுத்து மகத்தான சாதனை படைத்த சச்சினுக்கு, இம்முறை உலக கோப்பை போட்டிகள் சொந்த மண்ணில் நடப்பது கூடுதல் நெருக்கடியை தரலாம். ஒவ்வொரு போட்டியி<லும் இவர் ரன் மழை பொழிய வேண்டும் என உள்ளூர் ரசிகர்கள் எதிர்பார்ப்பர். இந்திய அணி சிறப்பாக செயல்படும் பட்சத்தில், ஏப்., 2ல், தான் பிறந்த மும்பையில் நடக்கும் பைனலில்( வான்கடே மைதானத்தில்) விளையாடும் அரிய வாய்ப்பை சச்சின் பெறலாம்.
கடந்த 1983ல் இந்திய அணிக்கு கபில்தேவ் முதல் முறையாக உலக கோப்பை பெற்று தந்தார். அதற்கு பின் 2003ல், அணியை பைனல் வரை அழைத்துச் சென்றார் கங்குலி. 2007ல் தோனி தலைமையிலான இந்திய அணி "டுவென்டி20' உலக கோப்பை வென்று, வரலாறு படைத்தது. அடுத்து 50 ஓவர் தொடரிலும் உலக கோப்பை கைப்பற்றி, சச்சினின் கனவை நனவாக்க, தோனியின் படை தயாராக உள்ளது.

தொடரும் முதலிடம்
சச்சின் இதுவரை 5 உலக கோப்பை தொடரில்(1992, 96, 99, 2003, 2007) பங்கேற்றுள்ளார். மொத்தம் 36 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், அதிக ரன்(1,796) எடுத்துள்ளவர்களின் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார். ஒவ்வொரு முறையும் இவரது செயல்பாடு:
ஆண்டு    போட்டி    ரன்    அதிகம்    சராசரி    சதம்    அரைசதம்
1992    8    283    84    47.16        3
1996    7    523    137    87.16    2    3
1999    7    253    140    42.16        1  
2003    11    673    152    61.18    1    6
2007    3    64    57    32.00        1
மொத்தம்    36    1796    152    57.93    4    13
சாதனைகள்...
உலக கோப்பை அரங்கில், சச்சின் நிகழ்த்தியுள்ள முக்கிய சாதனைகள்:
அதிக ரன்கள்: 1,796 ரன்
அதிக அரைசதம்: 17
அதிக சதம்: 4
ஒரே தொடரில் அதிக அரைசதம்: 7, 2003
ஒரு தொடரில் அதிக ரன்: 673 ரன், 2003
அதிக முறை ஆட்ட நாயகன் விருது: 8

No comments:

Post a Comment