Sunday, October 3, 2010

காமன்வெல்த் வரலாறு ஒரு பார்வை

சென்னை,அக்.4
பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த நாடுகளின் கூட்டமைப்பே காமன்வெல்த் நாடுகள் எனப்படுகின்றன. இந்த நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பே காமன்வெல்த் அமைப்பாகும். காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைமையகம் லண்டனில் உள்ளது. இப்போட்டிகளை நிர்வகிக்க, லண்டனை தலைமையிடமாகக் கொண்டு காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. போட்டிக்கான விதிமுறைகள், போட்டியில் இடம்பெறும் விளையாட்டுகள், போட்டி நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகப் பொறுப்புகளையும் இந்த சம்மேளனம் கவனித்து வருகிறது. காமன்வெல்த் கூட்டமைப்பில் இப்போது 54 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஆனால் வழக்கமாக காமன்வெல்த் போட்டிகளில் இடம்பெறும் அணிகள் மொத்தம் 71. பிரிட்டிஷ் ஆட்சிக்கு உள்பட்ட ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து உள்ளிட்ட பகுதிகள்  தனி அணியை அனுப்புகின்றன. இதேபோல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு உள்பட்ட பல சிறிய பிரதேசங்களும் தனி அணியை அனுப்புவதால் 71 அணிகள் இதில் இடம்பெற்றுள்ளன.  இந்த நாடுகள் பங்குபெறும் விளையாட்டுப் போட்டிகளே காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளாகும். 

காமன்வெல்த்திற்கான விதை
காமன்வெல்த் போட்டிகள் 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றன. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான முதல் விதையை விதைத்தவர் ஆஸ்ட்லே கூப்பர். 1891ம் ஆண்டு பத்திரிகை ஒன்றில் அவர் எழுதிய கட்டுரையில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் உள்ள நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் புரிந்துணர்வை அதிகரிக்கவும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை விளையாட்டுப் போட்டிகளை நடத்தலாம் என்று ஆலோசனை கூறியிருந்தார். அதன் பின்னர் 1911ம் ஆண்டு மன்னர் ஜார்ஜ் பதவியேற்ற போது அதைக் கொண்டாடும் விதமாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலனி நாடுகளான ஆஸ்திரேலியா, தென்னாப்பரிக்கா, கனடா ஆகிய நாடுகள் பங்கேற்றன.

காமன் வெல்த் பெயர்கள்:
காமன்வெல்த் போட்டி பல பெயர் மாற்றங்களை கொண்டு நடத்தப்பட்டது. 1930ம் ஆண்டு முதல் 1950 வரை நடந்த நான்கு போட்டிகள், பிரிட்டிஷ் பேரரசு விளையாட்டுகள் என அழைக்கப்பட்டன. அதற்குப் பின் 1954 முதல் 1966 வரையிலான போட்டிகள், பிரிட்டிஷ் பேரரசு மற்றும் காமன்வெல்த் போட்டிகள் என அழைக்கப்பட்டன.
1970 மற்றும் 1974ம் ஆண்டு நடந்த இரு போட்டிகள், பரிட்டிஷ் காமன் வெல்த் விளையாட்டுகள் என அழைக்கப்பட்டன. 1978ம் ஆண்டு முதல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் என அழைக்கப்படுகிறது.
முதல் போட்டி
பிறகு 1928ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் ஒலிம்பக் போட்டிகள் நடந்தன.  அதில்  கனடா உள்ளிட்ட பரிட்டிஷ் காலனி ஆதிக்கத்துக்கு உள்பட்ட நாடுகள் பங்கேற்றன. அப்போது கனடா அணியின் மேலாளராக பணியாற்றிய மெல்வில்லே மார்க்ஸ் ராபன்சன்  வீரர்களுக்கு இடையே நட்புணர்வை ஏற்படுத்த காலனி ஆதிக்க நாடுகளுக்கு இடையே நட்பு ரீதியிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டியது அவசியத்தை  உணர்ந்து அதற்கான தீவிர முயற்சி மேற்கொண்டார். அவரது முயற்சியின் காரணமாக முதலாவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 1930ம் ஆண்டு நடைபெற்றது.
இப்போட்டி, கனடாவின் ஹாமில்டனில் 1930 ஆம் ஆண்டு  நடந்தது.
மொத்தம் 11 நாடுகள் இப்போட்டியில் பங்கேற்றன. தடகளம், குத்துச் சண்டை, லான் பால், படகு வலித்தல், நீச்சல் மற்றும் மல்யுத்தம் உள்ளிட்ட ஆறு போட்டிகள் மட்டுமே இதில் நடத்தப்பட்டது. ஆண்கள் தான் அனைத்திலும் பங்கேற்றனர். நீச்சல் போட்டியில் மட்டும் பெண்கள் பங்கேற்றனர். இதில், இங்கிலாந்து 60 பதக்கங்களுடன் (25 தங்கம், 22 வெள்ளி, 13 வெண்கலம்) முதலிடத்தை தட்டிச் சென்றது.

இடம் பெறும் விளையாட்டுகள்: 
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில்  35 விளையாட்டுகள் அங்கீகரிக்கப்பட்டடுள்ளன. எனினும் இவை அனைத்தும் போட்டிகளில் இடம்பெறுவதில்லை. டெல்லியில் நடைபெறும்  போட்டிகளில் மொத்தம் 17 விளையாட்டுகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி வரலாற்றில் முதல் முறையாக இந்த முறை டென்னிஸ் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்படத்தக்கது.

முதன் முதலாக இந்தியா:

1934ம் ஆண்டு  லண்டனில் நடந்த 2 வது காமன்வெல்த் போட்டியில்தான்  இந்தியா முதன் முறையாக பங்கேற்றது.  
அதில் இந்திய மல்யுத்த வீரர் ரசித் அன்வர் 74 கி.கி வெல்டர் வெயிட் பிரிவில் வெண்கலம் வென்று அசத்தினார். இது தான் இந்தியா, காமன்வெல்த் போட்டியில் கைப்பற்றிய முதல் பதக்கமாகும். 
இந்தியாவின் முதல் தங்கம் : 
கடந்த 1958 ம் ஆண்டு வேல்சில் நடந்த காமன்வெல்த் போட்டியில், இந்தியாவின் மில்கா சிங் (400 மீ. ஓட்டம்), லீலா ராம் சங்வான் (மல்யுத்தம், ஹெவிவெயிட்) ஆகியோர்  காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கு கொண்டு தங்கம் வென்று அசத்தினர்.    
ஆசிய கண்டத்தில் காமன் வெல்த் :
முதன் முதலாக ஆசிய கண்டத்தில் காமன்வெல்த் போட்டிகள் கடந்த 1998ம் ஆண்டு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு மலேசியாவின் கோலாலம்பூரில் போட்டிகள் நடத்தப்பட்டன. 
இப்படிப்பட்ட பல வரலாறுகளை கொண்ட காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் பலத்த ஆதரவு மற்றும் எதிர்ப்புகளுக்கிடையே முதன் முதலாக நடைபெறுகிறது.

No comments:

Post a Comment