Monday, June 28, 2010

முதன் முறையாக காலிறுதியில் கானா

ரஸ்டன்பர்க், ஜூன். 28
ஆப்பிரிக்க கண்டத்தில் முதல் முறையாக நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி சுற்றுக்கு ஆப்பிரிக்க நாடான கானா அணி தகுதி பெற்றுள்ளது.
உலக கோப்பை கால்பந்து
19வது உலக கோப்பை கால்பந்து போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன.
காலிறுதிக்கு தகுதி பெறவேண்டிய "ரவுண்டு16' சுற்று போட்டிகள் நடக்கின்றன.ரவுண்ட 16 சுற்றுக்கு லீக் போட்டிகளின் முடிவில் உருகுவே, மெக்சிகோ, அர்ஜென்டினா, தென்கொரியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, கானா, நெதர்லாந்து, ஜப்பான், பராகுவே, சுலோவாக்கியா, பிரேசில், போர்ச்சுக்கல், ஸ்பெயின், சிலி, ஆகிய 16 நாடுகள் தகுதி பெற்றன.
கெவினின் சூப்பர் கோல்
இதில் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள கானா அமெரிக்கா அணிகள் மோதிய போட்டி ரஸ்டன்பர்க் நகரில் நடந்தது. இதில் வெற்றி பெறும் அணி காலிறுதிக்கு செல்லும் என்பதால் இரு அணிகளும் துவக்கத்தில் இருந்தே கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தின.ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் கானா கோல் அடித்து அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. அமெரிக்க தற்காப்பு பகுதியில் திடீரென தனி ஆளாக நுழைந்த கானா வீரர் கெவின் பிரின்ஸ், 18 மீட்டர் தொலைவில் இருந்து பந்தை, கோல் போஸ்ட்டை நோக்கி அடித்தார். இது கோல் கீப்பரை ஏமாற்றி, "சூப்பர்' கோலாக மாறியது. ரிக் கார்டோ கிளார்க் தட்டிக் கொடுத்த பந்தை பெற்று கெவின் அருமையாக கோலாக்கினார்.
கோல் விழுந்த அதிர்ச்சி யில் அமெரிக்க வீரர்கள் முன்னேறி தாக்கினார்கள். ஆட்டத்தின் 23 வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பில் அமெரிக்க வீரர் டொனோவன் அடித்த பந்து வீணானது . இதனால் முதல் பாதி ஆட்டத்தில் கானா 10 என்ற கோல் கணக்கில் முன்னணியில் இருந்தது.
சமநிலை
2வது பகுதி ஆட்டத்தின் 47வது நிமிடத்தில் ஸ்கோரை சமன் செய்ய அமெரிக்க அணிக்கு கிடைத்த வாய்ப்பை, பெய்ஹபர் வீணாக்கினார். 53வது நிமிடத்தில் கானாவின் கியான், கோல் போஸ்ட்டை நோக்கி அடித்த பந்து, வெளியே சென்றது.இந்நிலையில் 2வது பகுதி ஆட்டத்தின் 62வது நிமிடத்தில் தங்கள் கோல் ஏரியாவுக்குள் வைத்து அமெரிக்காவின் கிளின்ட் டெம்ப்சியை கானா வீரர் ஜோனாதன் பவுல் செய்து "எல்லோ கார்டு' பெற்றார். இதனால் அமெரிக்காவுக்கு ""பெனால்டி'' வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்டு அந்த அணி வீரர் டோனவன் கோல் அடித்தார். இதனால் 11 என்ற சமநிலை ஏற்பட்டது.
தொடர்ந்து இரு அணி வீரர்களும் கோல் போட கடுமையாக போராடினார்கள். ஆனால் கோல் எதுவும் விழவில்லை. ஆட்டத்தின் முடிவில் 11 என்ற சமநிலை ஏற்பட்டது. கூடுதல் நேரம்
போட்டி சமநிலையில் முடிந்ததால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க கூடுதல் நேரம் கடைபிடிக்கப்பட்டது.
இதன் முதன் பாதி ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே அதாவது 93வது நிமிடத்தில் கானா அணி தனது 2வது கோலை அடித்தது. அந்த அணியின் முன்கள வீரர் அசமா ஜியான் இடது காலால் மிகவும் அற்புதமாக அடித்து இந்த கோலை போட்டார். பதில் கோல் அடித்து சமநிலை ஏற்படுத்த கடுமையாக முயன்ற அமெரிக்க வீரர்களால் கோல் எதுவும் போட முடியவில்லை.
இறுதியில் கானா 21 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.
கானா அணி தனது காலிறுதி சுற்றில் உருகுவே அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி வருகிற 2ந்தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடக்கிறது.
முன்னதாக ரவுண்ட் 16 சுற்றில் உருகுவே அணி 21 என்ற கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தியது.
இந்த தோல்விகளின் மூலம் அமெரிக்கா, தென் கொரியா அணிகள் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டன.
காலிறுதியில் முதன் முறையாக...
உலக கோப்பை போட்டியில் காலிறுதிக்கு நுழைந்த 3வது ஆப்பிரிக்க நாடு கானா ஆகும். இதற்கு முன்பு 1990ம் ஆண்டு கேமரூனும், 2002ம் ஆண்டு செனகலும் காலிறுதியில் நுழைந்து இருந்தன.அதோடு கடந்த 2006 ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் தான் கானா அணி முதன் முறையாக பங்கேற்றது. அதில் "ரவுண்டு16' சுற்றுடன் வெளியேறியது. தற்போது இரண்டாவது முறையாக இத்தொடரில் பங்கேற்ற கானா அணி, முதன் முறையாக காலிறுதிக்குள் நுழைந்து அசத்தியுள்ளது.

No comments:

Post a Comment