Monday, June 28, 2010

மெக்ஸிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு சென்றது அர்ஜென்டினா

ஜோகன்ஸ்பர்க், ஜூன். 29
உலக கோப்பை கால்பந்து தொடரின் "ரவுண்ட்16' சுற்று போட்டியில், பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணி மெக்ஸிகோ அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
உலக கோப்பை கால்பந்து
19வது உலக கோப்பை கால்பந்து போட்டி தென்னாப்பிரிக்காவில் நடை பெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 32 அணிகள் கலந்து கொண்டன.இந்த 32 அணிகளும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தன. 32 அணிகளில் லீக் போட்டிகளின் முடிவில் உருகுவே, மெக்சிகோ, அர்ஜென்டினா, தென்கொரியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, கானா, நெதர்லாந்து, ஜப்பான், பராகுவே, சுலோவாக்கியா, பிரேசில், போர்ச்சுக்கல், ஸ்பெயின், சிலி, ஆகிய 16 நாடுகள் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றன.
இதேபோல் 2வது சுற்றுக்கு தகுதி பெறமுடியாமல் பிரான்ஸ், தென் ஆப்பிரிக்கா, கிரீஸ், நைஜீரியா, சுலோவெனியா, அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, செர்பியா, டென்மார்க், கேமரூன், நியூசிலாந்து, இத்தாலி, ஐவேரிகோஸ்ட், வடகொரியா, சுவிட்சர்லாந்து, ஹோண்டுராஸ் ஆகிய 16 நாடுகள் வெளியேற்றப்பட்டன.இந்த வரிசையில் தற்போது காலிறுதி சுற்றுக்கு தகுதி பெறமுடியாமல் இங்கிலாந்து,அமெரிக்கா,தென்கொரியா ஆகிய அணிகள் வெளியேறியுள்ளன.
ஆக்ரோஷமான ஆட்டம்
ஜோகனஸ்பர்க்கில் உள்ள "சாக்கர் சிட்டி' மைதானத்தில் நடந்த "ரவுண்ட் ஆப் 16' சுற்றுக்கான போட்டியில், உலக கால்பந்து தரவரிசை பட்டியலில் 7வது இடத்தில் உள்ள அர்ஜென்டினா அணியும் , உலக கால்பந்து தரவரிசை பட்டியலில் 17வது இடத்திலுள்ள மெக்சிகோ அணியும் மோதின.
ஆட்டம் தொடங்கியதில் இருந்தே இரு அணி வீரர்களும் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.இரு அணி வீரர்களும் தங்களுக்கு கிடைத்த ஒரு சில வாய்ப்புகளை வீணடித்தனர்.மெக்சிகோவின் பின்களம் மிகவும் பலமாக இருந்ததால் அர்ஜென்டினா வீரர்களால் தொடக்கத்தில் கோல் ஏரியாவை நோக்கி முன்னேற இயலவில்லை.
அர்ஜென்டீனா பலமாக அணியாக இருந்தாலும், மெக்சிகோ வீரர் சால்சிடோ 8வது நிமிடத்தில் அர்ஜென்டீன கோலை நோக்கி ஒரு ஷாட் அடித்தார்.அது மட்டும் கோலாகியிருந்தால் இந்த உலகக் கோப்பையின் சிறந்த கோலாகியிருக்கும்.
பந்து துரதிர்ஷ்டவசமாக கோல் கம்பத்தின் மேலுள்ள கம்பியில் பட்டு வெளியே சென்றது. 9வது நிமிடத்திலும் மெக்சிகோ அசத்தியது. குவார்டாடோ அடித்த ஷாட் கோலிலிருந்து விலகிச் சென்றது.
மெக்ஸிகோவைப் போலவே ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் நடு மைதானத்திலிருந்து மெஸ்ஸி பல மெக்சிகோ வீரர்களை ஏமாற்றிக்கொண்டு வந்த பந்தை கோலை நோக்கி அடித்தார்.ஆனால் அவரது ஷாட் பலவீனமாக அமைய மெக்சிகோ கோல் கீப்பர் அதனை பிடித்தார்.
சர்ச்சையான கோல்
இதனிடையே ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணி முதல் கோலை அடித்தது. மெஸ்சி தட்டிக்கொடுத்த பந்தை சார்லேர்ஸ் டெவஸ் தலையால் முட்டி கோலாக்கினார்.இந்த கோல் சர்ச்சையை ஏற்படுத்தியது. டெவஸ் ஆப்சைடில் இருந்தது டெலிவிசன் ரிப்ளேயில் நன்றாக தெரிந்தது. ஆனால் லைன் நடுவர் இதை கவனிக்க தவறிவிட்டார். இந்த கோலுக்கு மெக்சிகோ வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் நடுவர் அதை கோல்தான் என்று அறிவித்தார்.இந்த ஆப்சைடு கோல் சர்ச்சையால் இரு அணி வீரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.மெக்சிகோவுக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் வண்ணமாக முதல் கோல் அடித்த பிறகு அடுத்த 7வது நிமிடத்தில் அர்ஜென்டினா 2வது கோலை அடித்தது . மெக்சிகோ பின்கள வீரர் ரிக்கார்டோ செய்த தவறை சோன்சாலா ஹிகுயின் சரியாக பயன்படுத்திக் கொண்டு கோல் கீப்பரையும் ஏமாற்றி கோல் அடித்தார். இந்த உலக கோப்பையில் சோன்சாலா ஹிகுயின் அடித்த 4வது கோலாகும்.
இதனால் முதல்பாதி ஆட்டத்தில் அர்ஜென்டினா 20 என்ற கோல் கணக்கில் முன்னணியில் இருந்தது.
அர்ஜென்டினா ஆதிக்கம்
2வது பகுதி ஆட்டத்திலும் அர்ஜென்டினா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது.
ஆட்டத்தின் 52வது நிமிடத்தில் டெவஸ் அருமையான கோல் ஒன்றை அடித்தார். டெவேஸ் கோலுக்கு அப்பால் 30 அடியிலிருந்து வெறித்தனமாக பந்தை தூக்கி அடித்து கோலாக்கினார்.இந்த ஆட்டத்தில் அவர் அடித்த 2வது கோலாகும். இதன் மூலம் அர்ஜென்டினா 30 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.பின்னர் சுதாரித்துக் கொண்ட மெக்சிகோ அணிக்கு, ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் ஹெர்ணான்டஸ் ஒரு கோல் அடித்து ஆறுதல் அளித்தார். இருப்பினும் மெக்சிகோ அணியினரால் அடுத்தடுத்து கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் அர்ஜென்டினா 31 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.ஆட்ட நாயகனாக அர்ஜென்டினாவின் கார்லோஸ் டெவேஸ் தேர்வு செய்யப்பட்டார்.இந்த வெற்றியின் மூலம் உலக கோப்பை கால்பந்து போட்டியில் 8வது முறையாக காலிறுதிக்கு முன்னேறிய அணி என்ற பெருமையையும் தக்கவைத்துக்கொண்டது அர்ஜென்டினா. இதனிடையேவரும் ஜூலை 3ம் தேதி டர்பனில் நடக்கும் காலிறுதியில் அர்ஜென்டினா அணி, ஜெர்மனி அணியை சந்திக்கிறது எனபது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment