Monday, May 3, 2010

தனித் தமிழீழத்தை வலியுறுத்தி நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தேர்தல்

கொழும்பு, மே 3
இலங்கையில் தனித் தமிழீழத்தை வலியுறுத்தி, நாடுகடந்த தமிழீழ அரசிற்கான தேர்தல் நடைபெற்றது. இது தொடர்பாக 16 நாடுகளில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் மூலம் மேலும் இனப்படுகொலையாளர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.
இலங்கையில் தனித் தமிழீழத்தை வலியுறுத்தி நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலுக்காக பிரிட்டனில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் திரண்டு வந்து தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர். இவ்வாக்கெடுப்பில் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
உலக தமிழர்களுக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க தேர்தலாக கருதப்படும் நாடுகடந்த தமிழீழ அரசிற்கான தேர்தல் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் நடைபெற்றுது.
பிரிட்டனில் நேற்று முன்தினம் காலை ஆரம்பமான இந்த வாக்களிப்பு நிகழ்ச்சியில் தமிழர்கள் தமக்கென்று ஒரு நாடு கடந்த அரசு அமைக்க இடும் முதல் வாக்கு என்பதால் இந்த வரலாற்றுச்சிறப்பு மிக்க தேர்தலில் தாமும் வாக்களித்து வரலாற்றில் இடம்பிடிக்க வேண்டும் என்ற நினைவோடு சென்று அவர்கள் வாக்களிப்பதை காணமுடிந்தது.
நேற்று முன்தினம் பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள வடமேற்கு லண்டன் வாக்களிப்பு நிலையத்தில் நாடுகடந்த தமிழீழத்திற்காக முதலாவது வாக்கு பதிவுசெய்யப்பட்டது. மக்கள் தொடர்ந்து வரிசையில் காத்து நின்று தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.
நாட்டிற்காகவும், மக்களின் விடுதலை பெற்ற சுதந்திர வாழ்வுக்காகவும் தாம் தமது வரலாற்றுக் கடமையினை செய்துள்ளோம் என்ற திருப்தியில் மக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவதை காணமுடிந்தது
.

கனமழையிலும் வாக்கு பதிவு
நேற்று பெய்த கடும் மழையையும் பொருட்படுத்தாமல் வாக்குச்சாவடிகளுக்கு சென்று மக்கள் வாக்களித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
நாடு கடந்த தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு பதினாறு நாடுகளில் நடை பெற்றது.அந்த நாடுகளில் ஆஸ்திரேலியா,கனடா,சுவிட்சர்லாந்து,பிரான்ஸ்
ஆகிய நாடுகள் குறிப்பிடத்தக்க நாடுகளாகும்.இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசு கூறிவந்ததையடுத்து இலங்கையில் தனித் தமிழீழத்தை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலை நடத்தியுள்ளது இலங்கை அரசிற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வாக்கெடுப்பு குறித்து கனடா நாட்டு தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் வெளியிட்டு அறிக்கையில்: இலங்கையில் தமிழர்கள் தங்கள் அரசியல் உரிமைகளை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாத நிலைமை உள்ளது. ஆகவே தமிழீழத்திற்கான அரசியல் ராஜதந்திரத்தை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு உள்ளது. வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்வைத்து உலகளவில் வாக்கெடுப்பு மூலம் தமிழீழ அரசை நிறுவுவதற்கான ஆணை பெறப்பட்டது. இந்த தீர்மானத்தை ஆதரித்து 99% புலம் பெயர்ந்த தமிழர்கள் வாக்களித்தனர். இப்போது நடைபெறும் வாக்கெடுப்பின் மூலம் நாடு கடந்த தமிழீழ அரசு வெற்றிபெறும் போது தமிழீழ மக்கள் தங்களுக்கு இருக்கும் தன்னாட்சி உரிமையையும் பயன்படுத்தி தமிழீழ அரசை மீண்டும் உருவாக்க முடியும். நாங்கள் இல்லாத அரசு ஒன்றை கேட்கவில்லை. காலனித்துவ நாடுகள் இலங்கையில் காலடி எடுத்து வைக்கும் முன்பே கொடியோடும், முடியோடும் நான்கு நூற்றாண்டுகளாக இலங்கையில் தமிழீழ அரசு அமைந்திருந்தது. அந்த தமிழீழ அரசை தான் நாங்கள் மீண்டும் கேட்கிறோம். மேலும் தங்களது வாழ்வாதாரங்களை முழுவதுமாக இழந்து முகாம்களிலும், வெளியிலும் இடம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் மறுவாழ்வுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். போரின் போது போர்க்குற்றங்களை இழைத்த சிங்களபௌத்தப் பேரினவாதிகளை சர்வதேச நீதிமன்றங்களில் நிறுத்தி தண்டனை வாங்கித்தர வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி அறிக்கையில் வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment