ஜோகன்னஸ்பர்க், ஜுலை.3
2022 உலக கோப்பை போட்டியை நடத்த ஆஸ்திரேலியா வைர நகைகளை லஞ்சமாக கொடுத்ததாக ஆஸ்திரேலியாவில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த செய்தியில் வருகிற 2022ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது. ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக ஓட்டளிக்க வேண்டும் என்பதற்காக 'பிபா'வில் ஓட்டளிக்கும் உரிமை உள்ள 24 உறுப்பினர்களில் சிலருக்கு உல்லாச சுற்றுலா செல்ல ஆஸ்திரேலிய கால்பந்து சங்கம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. அது மட்டுமல்லாமல் உறுப்பினர்களின் மனைவிகளுக்கு விலை உயர்ந்த வரை நகைகளையும் வாங்கி பரிசாக அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக 11 மில்லியன் டாலர் முதல் 45 மில்லியன் டாலர் வரை ஆஸ்திரேலியா செலவு செய்துள்ளது என்று கூறியுள்ளது.
இந்த செய்தி வெளியானதையடுத்து 'பிபா' இது குறித்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு ஆஸ்திரேலிய கால்பந்து சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. ''இந்த செய்தி உண்மைக்கு புறம்பானது. 'பிபா' விசாரணை நடத்தினாலும் அதனால் பயன் ஒன்றும் இருக்கப் போவது இல்லை. ஏனென்றால் 'பிபா'வின் விதிமுறைகளை ஆஸ்திரேலியா எந்த விதத்திலும் மீறவில்லை'' என்று ஆஸ்திரேலிய கால்பந்து சங்கம் கூறியுள்ளது.
வருகிற 2014ம் ஆண்டு உலக கோப்பை போட்டி பிரேசிலில் நடக்கிறது. அடுத்து 2018 மற்றும் 2022ம் ஆண்டு உலக கோப்பை போட்டியை நடத்த ஆஸ்திரேலியா வாய்ப்பு கேட்டுள்ளது. இதில் 2022ம் ஆண்டு போட்டியை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என்றும் ஆஸ்திரேலியா களம் இறங்கியுள்ளது.
No comments:
Post a Comment